முதலில் ஒரு மூங்கில் குச்சி.உடனடியாக ஒரு உலர்ந்த சுள்ளி.சற்று நேரம் அமைதி. பின்னர் சரேலென்று வந்து ஒரு சணல் கயிறு.என் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாகக் ’களவு’ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து நிற்கும் வேப்பமரத்தில் காகம் ஒன்று கூடுகட்டிக் கொண்டிருக்கிறது.
ஓ! அதன் குடும்பத்தில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வரவேற்கதான் அந்தக் காக்கை அலைந்து திரிந்து அகப்பட்டதையெல்லாம் அலகில் ஏந்திச் சென்று அந்தக் கூட்டை அமைக்கிறது .
எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தப் பறவைக் கூடுகள் எப்போதுமே ஓர் ஆச்சரியம். எத்தனை வடிவம்! எத்தனை நுட்பம்! எத்தனை கரிசனம்! எத்தனை உழைப்பு! உலகில் உள்ள அத்தனை கூடுகளுக்கும் அட்ரஸ் ஒன்றுதான்.அது: அன்பு இல்லம்
பலர் நினைப்பது போல பறவைகள் கூடுகளில் தங்குவது இல்லை. மனிதர்களைப் போல கூடுகளில் உறங்கி மறுநாள் விடிந்ததும் வேலைக்குக் கிளம்புவதில்லை. அவை கட்டுவது வீடுகள் அல்ல. விடுதிகள். பிரசவ விடுதிகள். முட்டையிடவும். முட்டைகளுக்குள்ளிருந்து முகிழத்தெழும் குஞ்சுகளுக்கு உணவளிக்கவும், சிறகு முளைக்கும் வரை அவற்றைச் சீராட்டவும் உருவாக்கப்படும் இடம்தான் இந்தக் கூடுகள்.
காக்கையின் கூடுகள் சற்றுப் பெரிதுதான். விட்டம் ஒரடியாவது இருக்கும். முன்பக்கம் முரட்டுச் சுள்ளிகளால் அமைந்திருந்தாலும் உள்ளே இருக்கும் ’கிண்ண’த்தில், மூன்றங்குல ஆழத்திற்கு மெத்து மெத்தென்று வைக்கோல், தென்னை நார், சணல் கயிறு உலர்ந்த இலைகள் இவற்றைக் கொண்ட ஒரு ’மெத்தை’ இருக்கும்.
ஒரு குச்சியைப் பொறுக்கிக் கொண்டு உயரே பறந்த அந்தக் காக்கையைக் கண்ட போது எனக்குள் ஒரு கேள்வி வந்து உட்கார்ந்தது. அந்தக் காக்கை ஆணா? பெண்ணா? தாயா? தந்தையா?
முட்டையிலிருந்து வெளிவந்து மூன்று வாரங்கள் வரை காகங்களுக்குப் பறக்கத் தெரியாது. (முதல் நாள் அதற்குக் கண்ணே தெரியாது) அந்தக் காலங்களில் அங்கும் இங்கும் நகராமல் அம்மா காக்கா அருகிலேயே இருக்கும். அப்பாக் காக்கா உணவு தேடிக் கொண்டுவரும். ஆனால் வீட்டைக் கட்டுவது இருவரும் சேர்ந்துதான் என்கின்றன புத்தகங்கள்.
இயற்கை இந்தப் பறவைகளுக்கு இயல்பாகக் கற்றுக் கொடுத்திருக்கிற செய்திகளை ஆற்றலும் அறிவும் மிக்க மனித குலம் போராடிப் புரிந்து கொண்டிருக்கிறது என்பது விளக்கமுடியாத வேடிக்கைகளில் ஒன்று.
காக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த என்னைத் தொலைக்காட்சி அழைத்தது. இயற்கையின் அதிசயங்களிலிருந்து மனிதர்களின் விசித்திரங்களுத் திரும்பினேன். இந்திரா நோயியின் உரையாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. இந்திரா இன்று பெப்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி. இந்தியர். சென்னையில் வளர்ந்தவர். ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனத்திற்குப் பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார் என்ற பிரமிப்பிலேயே ஊடகங்கள் அவரைப் பேட்டி கண்டு வந்திருக்கின்றன. இந்தப் பேட்டியும் அந்தக் கோணத்திலேயே அமைந்திருந்தது.
“நீங்கள் மேற்கொள்ளூம் நிர்வாகச் செயல்பாடுகளை ஒரு பெண்ணின் அணுகுமுறை என்பதாகவே உலகம் பார்க்கிறது. அது உங்களை எவ்வளவு எரிச்சலடையச் செய்யும் என்பது எனக்குப் புரிகிறது. ஏனெனில் பெண்களாகிய நாம் தொழில் முறையில் இதை நிறையவே எதிர்கொண்டு வருகிறோம்.” என்று உரையாடலுக்குக் களம் அமைக்கிறார் பேட்டி காணும் பெண். அவர் நாடறிந்த பத்திரிகையாளர் பர்க்காதத்.
”இதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை”. என்கிற இந்திரா, தொடர்ந்து “எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகிற்து. பெண்ணின் அணுகுமுறை என்பது ஒரு வணிக முயற்சியின் மனிதப் பக்கம்.( the human side of the enterprise,) என்கிறார். ” ஒரு உதாராணம் சொல்கிறேன்” என்று ஆரம்பித்து அவர் சொன்ன செய்தி சுவையானது.
“எங்கள் நிறுவனத்தில் இருக்கும் இரண்டு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ஊழியர்களுக்கும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நான் கடிதம் எழுதுகிறேன். வேறு வேலைகளின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதற்காக என் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஒரு பதினைந்து நிமிடம் இதற்காகச் செலவிடுகிறேன்.. இந்தக் கடிதங்கள் ஒரு பக்க அளவில்தான் இருக்கும் ஒரே ஒரு பக்கம்தான். பிசினஸ் விஷயம், சொந்த விஷயம் எல்லாம் அதில் எழுதுவேன். இரண்டு வாரத்திற்கு முன் எழுதிய கடிதம் என் மகளைப் பற்றியது. அவள் இப்போது மேல்நிலைப் பள்ளியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு வருடமும் பள்ளி துவங்கும் முதல் நாளன்று நானும் என் கணவரும், கையில் காமிராவை எடுத்துக் கொண்டு எங்கள் தெருமுனயில் உள்ள ஸ்கூல் பஸ் நிற்கும் இடத்திற்குச் சென்று ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் அவளோடு படம் எடுத்துக் கொள்வோம். இந்த ஆண்டும் அவள் புறப்படும் போது நாங்களும் காமிராவும் கையுமாகக் கிளம்பினோம். அவள் “ அம்மா! நான் இன்றிலிருந்து காரில் போகப் போகிறேன். நானே காரை ஓட்டிக் கொண்டு போய்க் கொள்கிறேன்” என்றாள். அவள் இப்போது சிறுமியல்ல, வளர்ந்த ஒரு இளம் பெண் என்பது அப்போதுதான் எங்கள் புத்தியில் உறைத்தது. ஒரு கணம் நிலை குலைந்து போனோம். அவள் எங்கள் கையைப் பிடித்துக் கொண்டு ந்டந்தது, நாங்கள் அவளை ஸ்கூல் பஸ்சில் ஏற்றி உட்கார வைத்தது, அவள் மூஞ்சியை ’உம்’ என்று வைத்துக் கொண்டு டாடா காட்டியது, பஸ் மெல்ல நகர்ந்து சென்றது எனப் பழைய காட்சிகள் நினைவில் வந்து போயின. ஸ்கூல் யூனிபார்மில் இருந்த அந்தச் சிறுமி என்ன ஆனாள்? இன்று ஒரு இளம் பெண்ணாக ஆகிவிட்டாள். காலம் பறந்து கொண்டிருக்கிறது. நான் இதை என் சக ஊழியர்களுக்கு எழுதினேன். காலம் பறந்து கொண்டிருக்கிறது நண்பர்களே உங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். ஏனென்றால் ஒரு சிறுமி இளம் பெண்ணாகி உங்களிடமிருந்து பிரிந்து செல்லும் நாள் வரும் போது உங்கள் உள்ளம் உடைந்து போகும். அதன் பின் இந்த நாட்கள் திரும்பக் கிடைக்காது என்று எழுதினேன். ஒரு ஆண் தலைமை அதிகாரி இதை எழுதியிருப்பாரா?” என்று முடித்தார் இந்திரா. .
சொல்லுங்கள், ஆண் அதிகாரிகள் இப்படி எழுதியிருப்பார்களா? இந்திரா சொன்னதைப் பற்றி ஆண் காகங்கள், -மன்னிக்கவும் - ஆண் வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்?
3 days ago