Wednesday, December 26, 2007

தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?


அண்மையில் தில்லியில் கூடிய முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் மன் மோகன் சிங், நக்சலைட்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அதிக முனைப்போடு மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். அதே மாநாட்டில், அரசின் நலத் திட்டங்கள் அடித்தள மக்களைச் சென்றடையவில்லை என்றும் கூறியிருக்கிறார்., அரசின் நலத் திட்டங்கள் ஏழைகளை எட்டாது போனதற்கும், நக்சலைட்கள் உருவாவதற்கும், வளர்வதற்கும் உள்ள தொடர்பு விளங்கிக் கொல்ள முடியாத அள்விற்குச் சிக்கலானதல்ல. அதுவும் மன்மோஹன் சிங் போன்ற அறிவாற்றல் மிக்கவர்களுக்கு அது நிச்சியம் கடினமானதல்ல.

அவர் செய்ய வேண்டியதெல்லாம், தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகள் சொல்வதை மட்டுமே நம்பாமல், தில்லியிலிருந்து 90 நிமிட விமானப்பயணத்தின் மூலம் சென்றடைந்துவிடக் கூடிய சட்டீஸ்கர் மாநிலத்திற்கு ஒரு நடை போய் அந்த மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் வனங்களுக்கூடே அமைந்துள்ள கிராமங்களைப் போய் பார்த்து வருவதுதான். அங்கு போனால் அந்த ஏழை மக்கள் ஒரு டாக்டரைப் பற்றி நிறைய மரியாதையோடு பேசுவார்கள். அவர் அந்த மக்களுக்குத் தெய்வம். அரசிற்கு ஒரு தீவீரவாதி.

டாக்டர் வினாயக் சென் ( வங்காளி அதானால் வினாயக் என்பதை பினாயக் என்று எழுதுவார்) வேலூர் மருத்துவக் கல்லூரியில் படித்து குழந்தைகள் மருத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒரு மருத்துவர். அவர் படித்து முடித்ததும் அவருக்கு தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஐஐடி, ஐஐஎம் களைப் போல அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரிதும் மதிக்கப்படுகிற ஒர் கல்வி நிறுவனம். அதில் அவர் வாழ்க்கையைத் துவக்கியிருந்தால் இந்த 25 ஆண்டுகளில் அவர் எங்கோ போயிருப்பார்.

ஆனால் வினாயக்கின் உள்ளம் ஏழைகளுக்காகத் துடிக்கிற உள்ளம்.அவர் இந்தியாவின் பின்தங்கிய கிராமத்தில் உள்ள மக்களுக்குத் தன் படிப்பைக் கொண்டு உதவ வேண்டும் என்று தீர்மானித்தார். மத்திய பிரதேசத்தில் (அப்போது சட்டீஸ்கர் உருவாகியிருக்கவில்லை) கனிமச் சுரங்கங்கள் நிறைந்த தல்லி ராஜஹரா என்ற கிராமத்தில் சுரங்கத் தொழிலாளிகளின் பங்களிப்போடு ஒரு மருத்துவமனையை ஆரம்பித்தார். சுரங்கத் தொழிலாளிகள் கொடுக்க வேண்டியதெல்ல்லாம் மாதம் 17 ரூபாய்தான். போராளிகளின் (தியாகிகளின்) மருத்துவமனை (ஷாகீத் ஹாஸ்பிடல்) என்று அழைக்கப்படும் அது இன்றும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. 30 கீமி சுற்றளவில் உள்ள கிராமங்களிலிருந்து மக்கள் மருத்துவ உதவி நாடி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வருபவர்களில் பெரும்பாலானோர் ஊட்டச் சத்துக் குறைவினால், வயிறு ஊதிப் போன குழந்தைகள், அல்லது உயிர்க் கொல்லி நோயான மலேரியா அல்லது காச நோயால் துன்புறுபவர்கள்.

இந்த 25 ஆண்டுகளில், போராளிகளின் மருத்துவமனை, 100 பேருக்கு மருத்துவம் அளிக்கக் கூடிய மருத்துவமனையாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் எப்போதும் சர்வசாதாரணமாக 140 பேராவது அங்கிருக்கிறார்கள். இன்னமும் அந்த மக்களுக்கு மருத்துவ சேவைகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பதைத்தான் இந்த எண்ணிக்கை நமக்கு நினைவூட்டுகிறது.

சுரங்கத் தொழிலாளிகளை எளிதில் பீடிக்கிற நோய் டி.பி என்கிற காச நோய்.” அரசு மருத்துவ மனையில் ஒரு மாதம் இருந்தேன். அங்கு டாக்டருக்கு 3500 ரூபாய் கொடுத்தேன். ஒன்றும் பலனில்லை. இங்கு வந்துவிட்டேன்.இங்கு அதிகம் செல்வில்லை. பலனும் தெரிகிறது என்று சொல்கிற மனிதர்களை நீங்கள் இங்கு சந்திக்கலாம். இத்தனைக்கும் அவர்கள் தங்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை விட்டுவிட்டு, இரண்டரை மணி நேரம் பயணம் செய்து இங்கு வரவேண்டும்.

இந்த மக்களிடையே பணியாற்றத் துவங்கிய போது அங்கு அதிகம் வசிக்கும் பழங்குடி இன மக்கள் ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் அவதியுறுவதை அறிய நேர்ந்த வினாயக், அதன் காரணங்கள் பற்றி அறிந்து கொள்ள அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று தகவல்கள் திரட்ட ஆரம்பித்தார். அப்போது அவருக்கு ஒரு திடுக்கிடும் உண்மை தெரிய வந்தது: ஊட்டச்சத்துக் குறைவு என்பது பிரசினையின் ஒரு சிறு முனைதான். அந்தப் பகுதியில் வறுமை காரணமாகப் பட்டினிக் சாவுகள் நிறையவே நடந்திருக்கின்றன. அந்தச் சாவுகள் அவரது சிந்தனையை உலுக்கின.

மக்களைக் கொண்டே, மக்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை அளிக்கும் ஒரு திட்டத்தைப் பற்றி சிந்திக்கலானார் வினாயக். அதன் விளைவாக அவர் உருவாக்கியதுதான் ‘மிதானின்’ என்ற திட்டம். மிதானின் என்றால் தன்னார்வப் பணியாளர் (volunteer) ஒவ்வொரு கிராமத்திலும் மக்களே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்தப் பெண்ணுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். அந்த கிராமத்தில்லுள்ள மக்களின் உடல் நலத்திற்கு அவர் பொறுப்பேற்று அவர்களுக்கு உதவுவார்.

200 கிராமங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கியதும் அதன் அரசின் செவிகளை எட்டியது. 2004ம் ஆண்டு அரசே இந்தத் திட்டத்தை மாநிலங்களில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் விரிவுபடுத்தியது. ஆனால் திட்டத்திற்கு ‘இந்திரா மிதானின் ஸ்வஸ்த யோஜனா’ ( இந்திரா தன்னார்வ மருத்துவத் திட்டம்) என்று பெயர் சூட்டியது.

“சிதைவுற்ற, நியாயமற்ற ஒரு சமூகத்தில், ஒரு மருத்துவர் ஆற்றக்கூடிய பணியின் இலக்கணங்களை மார்றி அமைத்தவர்” எனப்பாரட்டிய வேலூர் கிறிஸ்துவ மருத்துக் கல்லூரி அவருக்கு 2004 அதன் பெருமைக்குரிய பால் ஹாரிசன் விருதை டாக்டர் வினாயக்கிற்கு அளித்தது. “ அவர் ஆற்றிவரும் பணி நன்றியை பெற்றுத் தராத, ஆபத்தான பணி.. ஆனால் அவர் அயர்ந்து விடவில்லை” என அது பாராட்டுகிறது.

அவரது பணி ஆபத்தான பணி என்ற அச்சம் இன்று நிஜமாகிவிட்டது. தனக்குக் கிடைத்த நல்ல வேலையை விட்டுவிட்டு, இப்படி அடித்தட்டு மக்களுக்குப் பணியாற்ற கனவுகளோடு வந்து, தன் சிந்தனையால் அதை நிறைவேற்றவும் செய்த அந்த மருத்துவர் இப்போது சிறையில் இருக்கிறார். அவர் ஒரு தீவிரவாதி அதாவது நக்சலைட்கள் என்று ஊடகங்களால் அழைக்கப்படும் மாவோஸ்ட் என்று அரசு குற்றம் சாட்டுகிறது.

அந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக அதனிடம் இருப்பதெல்லாம் 3 கடிதங்கள். அவை கல்கத்தாவைச் சேர்ந்த பியுஷ் குப்தா என்பவர், சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யாலுக்கு எழுதிய கடிதங்கள். அந்தக் கடிதங்களை சன்யாலிடம் கொண்டு சேர்க்க டாக்டர் வினாயக் உதவினார் என்பது அரசின் வாதம்.

“ அவர் ஆயுதம் ஏந்திப் போராடிய நக்சலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஓரு புரட்சிகர இயக்கத்திற்குப் போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற உதவிகளைச் செய்தார்” என்கிறது போலீஸ்.மாவோயிஸ்ட் இயக்கம் சட்டீஸ்கரில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் அதற்கு உதவும் எவரும் சிறையில் அடைக்கப்படலாம்..

டாக்டர் வினாயக் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினர் (PUCL), சிறையிலிருக்கும் சன்யாலை காவல் துறையின் அனுமதி பெற்றே சந்தித்திருக்கிறார். அதுவும் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட்ட சமயத்தில் அதற்கு உதவும் பொருட்டு.

ஆனால் அவர் PUCL உறுப்பினர் என்ற முறையில், மாவோயிஸ்ட்கள், அரசு என இரு தரப்பிலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை விமர்சித்து வந்திருப்பவர். சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்களின் பிரசினையை எதிர் கொள்ள அரசு அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினருக்கு ஆயுதங்கள் அளித்து, ‘சால்வா ஜுடாம்’ என்ற ஒரு இயக்கத்தை 2005ல் தோற்றுவித்தது. அங்குள்ள பழங்குடி மக்களின் மொழியில் சால்வா ஜுடாம் என்றால், “ தூய்மைப்படுத்துவதற்கான இயக்கம்” என்று பொருள். அவர்கள் தூய்மைப்படுத்த விரும்புவது மாவோயிஸ்ட்களை. 2005லிருந்து இதுவரை இரண்டு தரப்பிலும் 1200 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மக்களைக் கொண்டே மக்களை அழிக்கும் இந்த வன்முறையை வினாயக் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். அரசின் இந்தக் கொள்கையை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இதுவும் அவர் செய்த இன்னொரு காரியமும் அரசிற்கு வெறுப்பேற்றியிருக்கக்கூடும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது: கனிமவளம் நிறைந்த பர்சார் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அரசு அவர்களது நிலங்களை எடுத்துக் கொண்டது. டாடா ஸ்டீஸ், எஸ்ஸார் ஸ்டீல் என்ற இரு பெரிய நிறுவனங்களுக்கு ஆலைகள் துவங்க அந்த நிலங்களை அது தாரை வார்க்க இருக்கிறது. வினாயக் இதை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டார். கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். அது அரசிற்கு சினம் ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

இப்போது சிறையிலிருக்கும் வினாயக், வழக்கு விசாரணைக்காகக் கூட வெளியில் கொண்டு வரப்படுவதில்லை. அவர் ‘தீவிரவாதி’ என்பதால் வீடியோ கான்பரென்சிங் மூலம் சிறையிலிருந்தபடியே விசாரணை நடத்தப்படுகிறது. வீடியோ கான்பிரன்சிங் முறையில் அவர் நீதிபதியிடம் பேசலாம், ஆனால் அவருக்குத் தேவைப்படும் வழக்கறிஞரின் உதவி கிடைக்காது. வினாயக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.


வினாயக் கைது செய்யப்பட்டது முறையற்றது, எதேச்சதிகாரமானது எனக் கூறும் அறிக்கையில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அமெனஸ்டி இண்டர்நாஷனல் அவரது கைதைக் கண்டித்திருக்கிறது.

ஆனால் நம் தமிழ் ஊடகங்கள் இதைப் பற்றி அதிகம் பேசவில்லை. அவை இன்னமும் நக்சலைட்களை அவன் இவன் என்றே ஏகவசனத்தில் அழைத்து வருகின்றன. இன்றைய அமைப்பை ஏற்காத மாற்றுக் கருத்துள்ள அரசியல்வாதிகள் என்ற அளவிலாவது குறைந்த பட்ச மரியாதையையாவது அவை தரக்கூடாதா?

புதிய பார்வை ஜனவரி 2008 இதழுக்கு எழுதியது