Tuesday, February 08, 2005

கருத்தைக் கவர்ந்த காரைக்குடி கோயில்

அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

நான் கலந்து கொள்ளும் விழா நடக்க இருந்த இடத்தின் பின்னே ஓர் உயர்ந்த கோபுரம் தென்பட்டது. ஐம்பது அறுபதடி இருக்கும். அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். என்ன கோயில் என்று பார்க்கலாம் என்று போனேன். ஓர் இனிய அதிர்ச்சி.

அது தமிழ்த்தாய்க் கோயில்! ஆம் தமிழ்நாட்டில் தமிழ்த் தாய்க்கு கோயில் இருக்கிறது. காரைக்குடியில் மட்டுமே இருக்கிறது. அண்மைக்காலத்தில் கட்டப்பட்டதுதான். தன்னைக் கம்பன் அடிப்பொடி என்றழைத்துக் கொண்ட திரு.சா.கணேசன் முயற்சியில் கட்டப்பட்ட கோயில். சிறிய கோயில்தான். ஆனால் அதைக் கட்டவே 18 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 1975ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்ட கோயில் 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அடிக்கல் நாட்டியதும் கலைஞர், திறந்து வைத்ததும் அவர்தான் (அவர் ஆட்சியில் இல்லாத போதும் அவரையே திறந்து வைக்க அழைத்திருப்பது துணிச்சலான செயல்தான்!)

மூன்று படிகள் ஏறிப்போனதுமே கருவறை வந்து விடுகிறது. அறுகோணமாக அமைந்த கருவறை. அதில் வலக்காலை மடித்து, இடக்காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறாள் தமிழன்னை. நான்கு கைகள். மேலிருக்கும் வலக்கையில் அறிவுச் சுடர். கீழிருக்கும் வலக்கையில் ருத்திராட்சம் போல ஒரு மணியாரம். மேல் இடக்கையில் ஒரு யாழ். கீழ் இடக்கையில் சுவடிகள். கிரீடம் இருக்கிறது. கீரிடத்தின் உச்சியில் பாண்டியர் சின்னமான இரு மீன்கள். பின்னுள்ள திருவாச்சியின் இடப்புறமும், வலப்புறமும் சோழ சேரர்களது சின்னங்களான புலி-வில். ஆறடிக்கும் மேலிருக்கும் கருங்கல் சிலை. கோயில் சிலைகளைப் போல எண்ணை தடவிக் கறுக்க வைத்திருக்கிறார்கள்.அந்த மினுமினுப்பு இப்போதும் இருக்கிறது. பூசை எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. மாலையோ, பூக்களையோ, தீபங்களையோ நான் பார்க்கவில்லை.


அன்னையின் காலடியில் வலப்புறத்தில் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நிற்கிறார்கள். தனித்தனி சிலைகள். இரண்டு அடி இருக்கலாம். அகத்தியர் குள்ளமாக, முன் தள்ளிய தொந்தியும், அடர்ந்து நீண்ட தாடியுமாக இருக்கிறார். தொல்காப்பியர் சற்று உயரமாக, தாடியில்லாமல், உச்சியில் கொண்டையாக முடிந்த முடியோடு இருக்கிறார்கள். இருவருமே நம்மைக் கைகூப்பித் தொழுகிறார்கள். கருவறைக்கு வெளியே வரித்தாய், ஒலித்தாய் என இரு மங்கையர் காவற் பெண்டுகளாக இருக்கிறார்கள்.

தமிழ்க் கோயிலில் இன்னும் மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. அன்னையின் வலப்புறமாக இருப்பது வள்ளுவன் சந்நிதி. இதுவும் அறுகோணம்தான். ஆனால் அன்னையின் சந்நிதியைவிட சிறியது. சென்னைவாசிகள், எழுபதுகளில் நகரப் பேருந்துகளில் பார்த்திருக்கும் அதே சாயலில் இருக்கிறார் வள்ளுவர். கன்னியாகுமரி போலில்லாமல் உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். இடப்புறம் இருக்கும் சந்நிதி கம்பனுடையது. மேல்துண்டை நெஞ்சுக்குக் குறுக்கே வீசிப்போட்டு, சப்பணம் இட்டு கையில் எழுத்தாணியுடன் இருக்கிறார். மூன்றாவது சந்நிதி கருவறையின் பின்னே உள்ளது. அது இளங்கோவின் சந்நிதி. எல்லாச் சிலைகளுமே லட்சணமாக இருக்கின்றன.ஆனால் இருப்பனவற்றிலேயே மிக அழகான சிலை இளங்கோவினுடயதுதான். மொட்டைத் தலையோடு முகத்தில் முறுவல் தவழ வலக்காலை குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கிறார். முகத்தில் இளமை பொலிகிறது.

பேசுகிற மொழியைக் கும்பிடுகிற தெய்வமாகப் பார்ப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத உணர்ச்சித் தீவிரம் - சென்டிமென்ட்- என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்தக் கற்பனை எனக்குப் பிடித்திருந்தது. அந்த சிலைகளுக்குப் பின்னுள்ள கற்பனை எனக்குப் பிடித்திருந்தது. அவற்றை வடிக்க உந்திய அழகுணர்ச்சி எனக்குப் பிடித்திருந்தது. அந்தக் கற்பனையை கல்லில் வடிக்கக் காசு கொடுக்க முன்வந்த வள்ளல் தன்மை எனக்குப் பிடித்திருந்தது.

செட்டி நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் காசில் கெட்டி என்று தமிழ்நாட்டில் சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் தமிழ்க்கல்விக்கு, தமிழ் இசைக்கு, தமிழ் இறையியலுக்கு, தமிழ் இதழியலுக்கு, தமிழ்பதிப்புலகிற்கு, தமிழர் வணிகத்திற்கு, தமிழர் தொழில் வளர்ச்சிக்கு, ஏன் தமிழ் சினிமாவிற்குக்கூட அளித்திருக்கிற கொடைகள் ஏராளம். 1948ல் 10 லட்சரூபாய் பனமும், 300 ஏக்கர் நிலமும் அரசுக்குக் கொடையாகக் கொடுத்து காரைக்குடிக்கு மத்திய மின் வேதியல் ஆய்வு நிறுவனத்தைக் கொண்டு வந்தார் அழகப்பர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேணிய தமிழறிஞர்களின் பட்டியல் பெரியது. ஒரு அண்ணாமலை அரசர், அழகப்பர், ஆர்.கே.சண்முகம், ஏ.எம். முருகப்பர், சக்தி கோவிந்தன், சின்ன அண்ணாமலை, சா.கணேசன், குமுதம் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ஏ.வி.மெய்யப்பன், கண்ணதாசன், மனோரமா இல்லாமல் இருந்திருந்தால் தமிழர் வாழ்வு எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நான் சொல்வதன் அர்த்தம் புரியும்.

நகரத்தார்கள் சிங்கப்பூருக்கு எப்போது வந்து குடியேறினார்கள் எனத் தெரியவில்லை. சிங்கப்பூரின் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1824ல் நடந்ததாகத் தெரிகிறது. அப்போதிருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 756.'இவர்களில் பெரும்பாலனோர் கண்ணியமான வணிகர்கள்' என்று பக்லி என்ற நூலாசிரியர் எழுதுகிறார். இந்த கண்ணியமான வணிகர்களில் பலர் நகரத்தாராக இருந்திருக்கலாம். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு செட்டியார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற ஒரு வர்த்தக சபை உருவாக்கப்படுகிறது. இந்த வணிகர்கள் சிங்கப்பூர் ஆற்றின் அருகே உள்ள கடைத் தெருவில் கிட்டங்கிகள் எனப்படும் சேமிப்புக் கிடங்குகள் வைத்திருந்ததாகவும் பின்னால் நகர் சீரமைப்பின் போது அவை கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும் படித்திருக்கிறேன்.


சிங்கை செட்டியார்களின் வரலாற்றைப் பற்றி யாரேனும் ஆய்வுகள் செய்திருக்கிறார்களா?


இது நான் சிங்கப்பூர் தமிழ் முரசில் எழுதியது. அதற்குப் பின் கிடைத்த சில தகவல்கள் நாளை

Monday, February 07, 2005

கவனிப்பாரற்றுக் கிடக்குது கண்ணதாசன் மணி மண்டபம்

"பாட்டெழுதுகிறேன், பாட்டு எழுதுகிறேன் "என்று நிர்வாகிகளிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்தான். அந்தப் பாட்டுத்தான் மிஞ்சியதே தவிர சினிமாப்பாட்டுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவனுக்கு எழுதத் தெரியும் என்று கூட யாரும் நம்பவில்லை"

இதை எழுதியது யாராக இருக்கக் கூடும் என்று ஊகிக்க முடிகிறதா?

கண்ணதாசன். ஆமாம் யாருடைய திரைப்படப் பாடøகளில் ஒரு தலைமுறை மனதைப் பறி கொடுத்துக் கிறங்கிக் கிடந்ததோ அந்தக் கவியரசுக் கண்ணதாசன் தனது ஆரம்ப நாட்கள் குறித்து தனது சுயசரிதை வனவாசத்தில் எழுதிய வரிகள் இவை.

அந்த சுயசரிதை பாசாங்கற்ற ஒரு வாழ்க்கைச் சரிதம். அவன் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டு தன்னுடைய வறுமை, திருட்டு, காமம், ஆசைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், தன் தந்தையின் சீட்டாட்டப் பிரியம், தான் சந்தித்தப் பெண்கள், அரசியல் தந்த எழுட்சி, அங்கு சந்தித்த வஞ்சகம் எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இன்றி எழுதியிருப்பார். 'சில உண்மைகளை நிர்வாணமாகக் காட்டியிருக்கிறேன். சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்' என்று அவரே குறிப்பிட்டிருப்பார்.

அந்த சுயசரிதத்தில், மீசை அரும்பத் துவங்கிய பருவத்து இளைஞனாக, திருச்சி, சென்னை, சேலம், கோவை என்று எல்லா நகரங்களிலும் வயிற்றில் பசியோடு, மனதில் கனவோடு சுற்றிய நாள்களை அவர் விவரிப்பதைக் படிப்பவர் நெஞ்சில் இரக்கம் கசியும்.

ஆனால் அதைவிட மனம் அனுதாபத்தில் கசிந்த அனுபவம் எனக்கு வாய்த்தது. காரைக்குடியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்க என்னை அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சிக்குப் பின் ஓய்விருந்ததால் ஊரைச் சுற்றக் கிளம்பினேன்.

நகரின் முக்கியப் பகுதியில் அமைந்திருக்கிறது கண்ணதாசன் மணி மண்டபம். நெடிதுயர்ந்த தூண்கள் மீது விரிந்த ஓர் விதானம் முகப்பாக அமைந்திருக்கிறது. அரண்மனை போன்ற ஒரு கம்பீரம். ஆனால் கம்பீரம் அந்த முகப்போடு முடிந்து விடுகிறது. நுழைந்தவுடன் இடப்புறம் ஒரு குறுகிய ஆனால் நீண்ட அறை. அங்கே நான்கைந்து அலமாரிகள். எல்லாவற்றிலுமாகச் சேர்த்து ஒரு 300 அல்லது நானுறு புத்தகங்கள் இருக்கலாம். அரிய புத்தகம் என்றோ, கண்ணதாசனைப் பற்றிய புத்தகம் என்றோ ஒன்றும் என் கண்ணில் படவில்லை. 1962ல் நான்கு ரூபாய் விலையில் துவங்கி பற்பல பதிப்புகள் கண்ட வனவாசம் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. சுடச்சுட விற்றுத் தீர்ந்த அவரது அர்த்தமுள்ள இந்து மதத்தைக் கூடக் காணவில்லை.

நூல்கள் மட்டுமல்ல, நூலகரைக் கூடக் காணோம்!. நான் போன நேரம் அந்தக் கட்டிடத்தில் துப்புரவுப் பணிகள் செய்யும் ஒரு நடுத்தரவயதுப் பெண்மணியும் அவருக்குப் 'பேச்சுத் துணையாக' இன்னொரு மூதாட்டியும் மட்டும் அங்கு இருந்தார்கள்.

கண்ணதாசனின் நூல்கள் மட்டுமல்ல, கண்ணதாசனைப் பற்றிய எந்த செய்தியையும் அங்கு வருகிறவர்கள் அறிந்து கொள்ள முடியாது. சில கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதைத் தவிர கண்ணதாசன் யார், எப்போது பிறந்தார், எங்கு பிறந்தார், அவருக்கும் காரைக்குடிக்கும் என்ன சம்பந்தம், என்னென்ன எழுதினார், எந்தெந்தத் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தார், அவர் வாழ்கிறாரா, அவர் இறந்துவிட்டாரா என்பதைப்பற்றி அங்கு சிறு குறிப்புக் கூடக் கிடையாது.

பிரம்மாண்டமான கூடம் ஒன்று இருக்கிறது. அதைத் திறந்து காட்டச் சொன்னபோது, "கலியாணத்துக்குக் கொடுக்கமாட்டாங்க" என்று அவசர அவசரமாக மறுத்தார் அந்தப் பணிப்பெண். "கூட்டத்திற்குத்தான் கொடுப்பாக. நாள் வாடக எழுநூறு ரூபா" என்று விவரம் சொன்னவர், "இடம் 'புக்கு' பண்ணனும்னா, சிவகங்கைக்கு ( மாவட்டத் தலைநகர்) போயி பி.ஆர்.ஓ (மக்கள் தொடர்பு அதிகாரியை)வைப் பாருங்க" என்றார்.

கட்டிடத்தின் முகப்பில், திறந்த வெளியில் கண்ணதாசனின் மார்பளவுச் சிலை ஒன்று இருக்கிறது. ஒருபுறம் அவரது திரைப்பாடலின் வரிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சிலையின் முன்புறம், சிலைத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்களின் (அவர்களில் சிலர் இப்போது அதிமுகவில் இல்லை) நீண்டதொரு பெயர்ப்பட்டியல் இருக்கிறது!

எவ்வளவு பெரிய கவிஞன்! உலகம் முழுக்க இருக்கிற தமிழர்களை ஏதோ ஒரு விதத்தில் தொட்டு உலுக்கிய படைப்பாளி. நாற்பது வயதைத் தாண்டியவர்களை அவர்களுக்குப் பிடித்த பத்து சினிமாப் பாடல்களைப் பட்டியலிடச் சொன்னால் அதில் நிச்சியம் நான்கைந்து கண்ணதாசனுடையதாக இருக்கும்.

ஒருமுறை, ம.பொ.சி. இனி கண்ணதாசன் அரசியலை விட்டுவிட்டு உயர்ந்த விஷயங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று சொல்லியதை அடுத்து, தன்னைத் தானே விமர்சித்துக் கொண்டு ஒரு சுயவிமர்சனக் கவிதை எழுதினார்:

மானிடரைப் பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கையான பதிகம்

மலையளவு தூக்கி உடன்
வலிக்கும்வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்


நானிடறி வீழ்ந்த இடம்
நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்


நடைபாதை வணிகனென
நான் கூறி விற்ற பொருள்
நல்ல பொருள் இல்லை அதிகம்


ஊர்நெடுக என் பாட்டை
உளமுருகப் பாடுகையில்
ஓர் துயரம் என்னுள் வருமே!

உதவாத பாடல் பல
உணராதார் மேல் பாடி
ஓய்ந்தனையே பாழும் மனமே!


எழுத்தாளர்களுக்கு, அதிலும் கவிஞர்களுக்கு ஈகோ அதிகம். தன்னுடைய ஒவ்வொரு எழுத்தும் பொன்னெழுத்து என்று நம்புபவர்கள் அவர்கள். இலக்கிய உலகில் நெருக்கமாக இருந்த பல நட்புக்கள் விமர்சனங்களைத் தாங்க முடியாமலே முறிந்திருக்கின்றன; திரிந்திருக்கின்றன.நாலைந்து ஆண்டுகளாக மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும், இரண்டு புத்தகம் போட்டுவிட்ட படைப்பாளிகளிடமே கூட இந்த மனோபாவத்தைப் பார்க்க முடியும்.

ஆனால் கண்ணதாசன் தன்னைப் பற்றிய ஒரு கசப்பான சுய விமர்சனத்தை எழுதிக் கொண்டார். அதற்கான மன முதிர்ச்சி அவருக்கு இருந்தது. அந்த கவிதையின் இறுதியில், 'இனி மனிதனைப் பாட மாட்டேன்' என்று எழுதினார் கவிஞர்.

பதறிப்போன இன்னொரு மூத்த கவிஞர் திருமதி. செளந்திரா கைலாசம், அதே சந்தத்தில் 'மனிதனைப் பாடு மனமே' என்று பதிலுக்கு ஒரு பாட்டெழுதினார். அதில் அவர் சொன்னதைப் போல, கண்ணதாசன் "தடுமாறும் வேளையிலும் கவி பாடும் மேதையவன், தவறாது தாளம் விழுமே!"

இவ்வளவும் அந்த மணிமண்டபத்தைச் சுற்றி வந்த போது மனதில் வந்து போயின. அந்த மண்டபத்தின் பராமரிப்பு அந்தக் கவிஞனுக்கே செய்யப்பட்ட ஒரு அவமதிப்பு. அத்தனை லட்சம் செலவழித்துக் கட்டிடம் கட்டியவர்களுக்கு அதற்குள் சில ஆயிரம் ரூபாய்களுக்கு அவரது நூல்களை சேகரித்து வைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா? செலவழிக்க வேண்டாம், இலவசமாகக் கேட்டால் கூட அவரது அபிமானிகள் கொண்டு வந்து கொட்டியிருப்பார்களே? அவரது வாழ்க்கைப் பயணம், அவரது இலக்கியப் பயணம் ஆகியவை குறித்து ஒரு கண்காட்சி அமைத்திருக்கக் கூடாதா? என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத கற்பனை வறட்சியா? அல்லது ஏன் செய்ய வேண்டும் என்ற அலட்சியமா?

கேள்விகள் மொய்ய்க்க அந்த மண்டபத்தைவிட்டு வெளியே வந்தேன். கையாலாகாத ஊமைக் கோபம், ஒன்றுக்கும் உதவாத எரிச்சல் எல்லாமாகச் சேர்ந்து கொள்ள எனக்கு அந்த இடத்தை விட்டு உடனே அகன்றுவிட வேண்டும் எனத் தோன்றியது. நான் கலந்து கொள்ள இருந்த மாலை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே போய்விட்டேன். இருப்புக் கொள்ளாமல் அந்த அரங்கைச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

அது நாளையப் பதிவில்..