ஊருக்கு நடுவே ஒரு நதி. பரந்து கிடக்கும் பசும் வயல்கள். சுற்றிலும்
குளங்கள். தொலைவில் முகில்கள் உரசிச் செல்லும் மலை முகடுகள். ஊரில் ஒன்பது
நிலைகளோடு நெடிதுயர்ந்து நிற்கும் ஒரு பழங்காலச் சிவன் கோயில். அதிலொரு மணி
மண்டபம். கல்லெடுத்து அதன் தூண்களில் தட்டினால் இசை உதிரும் அழகான ஊர்தான்
களக்காடு. தீட்டிய திலகம் கலைந்ததைப் போல அதன் வரலாற்றில் சிறிது ரத்தக் கறையும்
உண்டு.
அங்கு தலித்களின் குடிசைகளுக்கு அருகில் விரிந்து கிடந்த வயல்களில் பயிர்
வேலை செய்து கொண்டிருந்தான் ஒரு கரிய இளைஞன்; 21 வயதிருக்கும். களை பறித்து நிமிர்ந்த
போது கண் எதிரே காவல்துறை வந்து நின்றது. எதிர்பார்த்ததுதான்; எனவே,
பதற்றமடையவில்லை. தன்னுடைய தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது; அது இனிச் சிறை
வாழ்க்கையாகத் தொடரும் என அந்தக் கம்யூனிஸ்ட்டுக்குத் தெரியும்.
ஆனால், எதிர்பாராதது சித்திரவதை. அள்ளிக் கொண்டு போன காவலர்கள், காவல்
நிலையத்தில் அவரைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டார்கள். மீசை முடிகளை ஒவ்வொன்றாக
ரத்தம் கசியக் கசியப் பிய்த்தெறிந்தார்கள். காரணம்? தேடப்பட்டு வந்த தனது
சகாக்களைக் காட்டிக் கொடுக்க மறுத்ததுதான்.
அந்த இளைஞன் அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று இன்று எல்லோராலும்
கொண்டாடப்படும் ஆர்.நல்லக்கண்ணு. அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காக சுதந்திர
இந்தியாவில் (1952) தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர். அரசால் புனையப்பட்ட
திருநெல்வேலி சதி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
வசீகரமான சத்தியங்களோடு மக்கள் நலக் கூட்டணி உருவானபோது அதன் முதல்வர்
வேட்பாளராக நல்லக்கண்ணு அறிவிக்கப்பட வேண்டும் என அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆவல்
தொனிக்கும் முணுமுணுப்புகள் முளைத்தன. ஆனால், "முதல்வர் வேட்பாளர் என ஒருவரை
அறிவிக்கும் நடைமுறையை நாங்கள் ஏற்கவில்லை. தேர்தல் முடிந்து சட்டப் பேரவை
உறுப்பினர்கள் அதை முடிவு செய்வார்கள்' எனக் கூட்டணியின் தலைமை அறிவித்ததும்,
அதுவும் சரிதானே என்று அந்தக் குரல்கள் அடங்கிப் போயின.
ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு, நடிகராகத் தொழில் செய்து, திரையில்
பயங்கரவாதிகளைப் பந்தாடி, புள்ளிவிவரங்களால் தன் புலமையை வெளிப்படுத்திய
விஜயகாந்த் எங்கள் முதல்வர் வேட்பாளர் என அந்தக் கூட்டணி பிரகடனப்படுத்தியது.
தங்கள் கூட்டணியின் பெயரோடு அந்த நட்சத்திரத்தின் பெயரையும் பிணைத்துக் கொண்டது.
அந்தக் கூட்டணி ஏற்கெனவே ஒரு வரைவுச் செயல்திட்டத்தை அறிவித்திருந்தது. அதை
நட்சத்திரத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக ஏதும் அறிவிப்பு வரவில்லை. அவர் ஒரு தேர்தல்
அறிக்கையை வெளியிட்டிருந்தார். அது பல துறைகளில் தனியார்மயத்தை வரவேற்றிருந்தது.
அதை இடதுசாரிகள் ஆட்சேபித்ததாகத் தகவல் ஏதும் இல்லை.
தனது வரலாற்றுப் பெருமை, தத்துவம் சார்ந்த எளிமையான அரசியல் நடைமுறை,
லட்சியங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு இடதுசாரிகள் விஜயகாந்த்
கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொள்ள ஆர்வம் கொண்டதன் பின்னுள்ள ரகசியம் என்ன?
திராவிடக் கடசிகளுக்கான மாற்று அரசியல் என்று அவர்கள் சொன்ன போதிலும் இப்படி ஒரு
கூட்டணி உருவானதற்கான அடிப்படைக் காரணம் என்ன?
உண்மையான நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதல்ல, கட்சியைக் காப்பாற்றுவது. அரசியல்
கட்சிகளைப் பதிவு செய்து கொள்வதற்கும், தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என
அங்கீகரிப்பதற்கும் அவற்றுக்குச் சின்னங்களை ஒதுக்குவதற்கும் சில விதிமுறைகளை வகுத்து
தேர்தல் ஆணையம் 1968-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி ஓர் ஆணை வெளியிட்டது.
1997-ஆம் ஆண்டு அந்த ஆணையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதுள்ள
ஆணை கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க, அளிக்கப்பட்ட அங்கீகாரத்தைத் தக்க வைத்துக்
கொள்ள, சில விதிகளை வகுத்துள்ளது.
ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட குறைந்தது நான்கு மாநிலங்களில்
ஆறு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், மக்களவையில் குறைந்தது
நான்கு இடங்களையாவது பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், தேசியக்
கட்சியாக அங்கீகரிக்கப்பட இன்னொரு வழியும் உண்டு. மக்களவையில் 11 இடங்களைப் பெற்ற
கட்சி (மக்களவையில் உள்ள மொத்த இடங்களில் 2%) தேசியக் கட்சியாக
அங்கீகரிக்கப்படும். ஆனால், அந்தப் 11 இடங்கள் குறைந்தது மூன்று
மாநிலங்களிலிருந்தாவது பெறப்பட்டிருக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவையில் 9 எம்.பி.கள்
இருக்கிறார்கள் (கேரளத்திலிருந்து 5, திரிபுராவிலிருந்து 2, மேற்கு
வங்கத்திலிருந்து 2) அதாவது மூன்று மாநிலங்களிலிருந்து அது எம்.பி.களைப்
பெற்றிருந்தாலும் 11 எம்.பி.களைப் பெறவில்லை. சரி, நான்கு மாநிலங்களில் 6 சதவீத
வாக்குகளையாவது அது பெற்றிருக்கிறதா?
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு
வங்கத்தில் பெற்ற வாக்குகள் 30.08%, கேரளத்தில் 28.18%. சரி, இரண்டு மாநிலங்கள்
ஆயிற்று. இன்னும் இரண்டு? அங்குதான் சிக்கல். 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அது
தமிழ்நாட்டில் பெற்ற வாக்குகள் 2.4% (அதாவது 6 சதவீதத்திற்கும் கீழ்).
2011-க்குப் பிறகு 2014-ஆம் ஆண்டு தெலங்கானா, மகாராஷ்ட்டிரம், ஒடிஸா,
ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அந்த
மாநிலங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே அது பெற்றது. எனவே, வாக்கு
சதவீதத்தின் படியும் மார்க்சிஸ்ட் கட்சி தேசியக் கட்சி என அங்கீகரிக்கப்படத் தகுதி
பெறவில்லை.
இந்தத் தேர்தலில் அது கேரளத்திலோ, மேற்கு வங்கத்திலோ எத்தனை சதவீத
வாக்குகள் பெற்றாலும் மேலும் இரு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றால்தான்
அது தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த
வகையில், இந்தத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியமானது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை இதைவிட மோசம். அது 2011 தேர்தலில்
கேரளத்தில் 8.72% வாக்குகளையும், மேற்கு வங்கத்தில் 1.84%, தமிழ்நாட்டில் 1.97%
வாக்குகளையும் பெற்றது. மக்களவையில் கேரளத்திலிருந்து ஒரே ஒருவர் எம்.பி.யாக
உள்ளார்.
ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அந்த
மாநிலத்திற்கு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலோ, மக்களவைத் தேர்தலிலோ 6 சதவீத
வாக்குகளையும், குறைந்தது 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை,
6 சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றாலும், குறைந்தது 3 சதவீத வாக்குகளையும் 3
இடங்களையும் பெற்றிருந்தால் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைக்கும்.
2011 தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடவில்லை. எனவே, சட்டப் பேரவையில்
உறுப்பினர்கள் இல்லை. வாக்கு சதவீதம் பற்றிய பேச்சே இல்லை. 2014 மக்களவைத்
தேர்தலிலும் அது போதுமான வாக்கு சதவீதத்தைப் பெறவில்லை. எனவே அங்கீகாரம் என்ற
நோக்கில், அதற்கும் இந்தத் தேர்தல் முக்கியமானது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலையும் இதைப் போன்றதுதான். 2011
சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள்
எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. 1.5% வாக்குகளைப் பெற்றது. 2014 மக்களவைத்
தேர்தலிலும் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.
இடதுசாரிகளுக்கும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கும்
அங்கீகாரம் என்ற கோணத்தில் இந்தத் தேர்தல் முக்கியமானது. பெரிய கட்சிகளோடு கூட்டணி
வைத்துக் கொண்டால், அந்தக் கட்சிகள் ஒற்றை இலக்கத்தில், அதிகம் போனால் 20, 25
இடங்கள் மட்டுமே இந்தக் கட்சிகளுக்கு ஒதுக்குகின்றன. அவற்றைக் கொண்டு
அங்கீகாரத்திற்குத் தேவையான வாக்கு சதவீதத்தைப் பெற முடியவில்லை.
தனித்துப் போட்டியிட்டால் அதிக இடங்களில் போட்டியிட முடியும். வெற்றி
பெறாவிட்டாலும் வாக்கு சதவீதங்களை உயர்த்திக் கொள்ளலாம். போட்டியிட அதிகம் பேருக்கு
வாக்களிப்பதன் மூலம் கட்சியிலும் பலரை திருப்திப்படுத்தலாம். இந்த நோக்கில்தான்
மக்கள் நலக் கூட்டணி உருவாகியிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த காலத் தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில், இந்த நான்கு
கட்சிகளோடு இன்னொரு வாக்கு வளம் கொண்ட கட்சியும் தேவை என்பதை அவர்கள்
உணர்ந்திருக்கக் கூடும். அந்தப் பதற்றத்தின் காரணமாகவே அவை தங்கள்
லட்சியங்களையும், பெருமைகளையும் தாற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து விட்டு
நட்சத்திரத் தலைவரைத் தங்கள் அணித் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
உயிராசை எல்லோருக்கும் இயல்பே அல்லவா
2 comments:
excellent article .
திரைமறைவு எதார்த்தங்களை திறம்பட வெளிப்படுத்தி உள்ளீர்கள் அய்யா....
Post a Comment