கருத்துக்கணிப்புக்களுக்குத் தடை விதிப்பது குறித்து Zதமிழ் தொலைக்காட்சியில் ஒரு கலந்துரையாடல் (விவாதம்?) நடந்தது. அதில் பங்கேற்ற பத்ரி தனது பதிவில் அதைக் குறித்து எழுதியிருக்கிறார்.
கருத்துக் கணிப்புகள் மக்களின் முடிவை மாற்ற வல்லவை அல்ல, அதனால் அதற்குத் தடை என்பது தேவை இல்லை, அப்படித் தடை செய்வது கருத்துரிமைக்கு எதிரானது, இன்றைக்குக் கருத்துக் கணிப்பைத் தடை செய்பவர்கள் நாளை இணைய வழி, கைபேசிக் குறுஞ் செய்திகள் வழி, பிரசாரத்தையும் தடை செய்யலாம், 10 மணிக்கு மேல் கூட்டம் போடக் கூடாது போன்று எத்தனை தடைகள் இந்த நாட்டில் என்றெல்லாம் பத்ரி கருத்துக் சொன்னார்.
என்னுடைய பார்வையில், இந்தியச் சூழ்நிலையில், இன்று மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புகள் மூலம், பெரும்பாலும் சரியான யூகங்களுக்கு வரமுடிவதில்லை. அதனால் அவை பெரும்பாலும் ஊடகங்களின் பரபரப்பு மனோபாவத்திற்குத் தீனி போடுபவையாகவோ அல்லது விற்பனைக்கு உதவுபவையாகவோ மட்டுமே இருக்கின்றன.
கருத்துக் கணிப்புகள் ஏன் பொய்க்கின்றன?
முதன் முதலில் கருத்துக் கணிப்பு தமிழ்த் தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான் அதில் பங்கேற்றவன் என்ற முறையில் அந்தக் கணிப்புக்களுக்குப் பின் அறிவியல் ரீதியான அணுகுமுறை (psephology தேர்தலியல்?)இருந்தது என்பதை என்னால் சொல்ல இயலும். .
பொதுவாகக் கருத்துக் கணிப்புக்களின் போது கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி முடிவுக்கு வர Cube law என்ற ஒன்றைப் பயன்படுத்துவது வழக்கம். இந்த முறை இரு கட்சிகள் பிரதானமாக இருக்கிற நாடுகளில், அதிலும் குறிப்பாக கட்சிகளுக்கு Registered Voters இருக்கிற அமெரிக்காவில் பலனளித்திருக்கிறது. பல கட்சிகள் கொண்ட இந்தியாவில் இந்த விதியில் சிறு மாற்றங்கள் செய்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆளும் கட்சி, அதற்கு எதிராக இருக்கும் அணிகள் எல்லாம் ஒரு கட்சி எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தக் கட்சிகள் எத்தனை தூரம் ஒற்றுமையாக இருக்கின்றன என்பதைக் கணக்கிட Index of opposition unity என்ற ஒன்றைக் கணக்கிட வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் சில கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறி நிற்பதால் அதன் பலத்தை துல்லியமாகக் கணக்கிட முடிவதில்லை (உ-ம்: பா.ம.க)
ஒன்றுக்கு மேற்பட்ட ஊகங்களின் அடிப்படையில் கணிப்புக்களை மேற் கொள்ளும் போது அவை தவறாகிவிடும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.
தேர்தலில் அலைவீசும் போது Cube law பயனுள்ளதாக இருப்பதில்லை.
இந்தியத் தேர்தல் முறையில், பெரும்பாலும் மக்கள் உள்ளூர் காரணிகளின் அடிப்படையில் (பிரசினைகள், ஜாதிப் பிரிவுகள், வேட்பாளரின் செல்வாக்கு) வாக்களிப்பதால் ஒட்டு மொத்தமான கணிப்புகளைவிட தொகுதிவாரியாக மேற்கொள்ளப்படுகிற கணிப்புகளே ஓரளவிற்கு சரியாக இருக்கும். இதைக் கவனத்தில் கொண்டு, 1998ல் கருத்துக் கணிப்பை தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தியபோதே, மாவட்ட வாரியான கணிப்பை மேற்கொண்டாம். ஆனால் இன்று பெரும்பாலும் மாநிலம் முழுமைக்குமான 'ராண்டம் சாம்பிள்'கள் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன
நம் கலாசாரத்தில் மக்கள் பெரும்பாலும், தனிப்பட்ட நேர் பேட்டிகளில் ஆளுங்கட்சிக்கு எதிராக (அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி) வெளிப்படையாகத் தன் எண்ணங்களைத் தெரிவிப்பதில்லை. (கூட்டமாகச் சேர்ந்து போராட அவர்கள் தயங்குவதில்லை என்பது வேறு விஷயம்)
கருத்துக் கணிப்பிற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக தலைக்குத் தலை அதை நடத்த முற்பட்டதால் அது இன்று Law of diminishing returnsபடி அதன் பலன் குறைந்த நிலையை எட்டியிருக்கிறது.
எனவே இன்று கருத்துக் கணிப்புக்கள் குறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஆனால் அதைச் சாக்கிட்டு ஊடகங்கள் பரபரப்பேற்படுத்துவதைத் தவிர்க்க ஏதாவது ஒருவிதமான நெறிப்படுத்தல் தேவை
சுதாங்கன் - ஜென்ராம் நெறிப்படுத்தும் Z தமிழ் 'முதற்குரல்' விவாதங்கள் பெருமளவிற்கு நடுநிலையாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் விருந்தினர்களைத் தேர்ந்தெடுப்பதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக கருத்துக் கணிப்புப் பற்றிய இந்த விவாதத்தில் கருத்துக் கணிப்பு நடத்தும் நிறுவனங்களோ (ORG-MARGபோல), அமைப்புக்களோ (லயோலா கல்லூரி போல) பங்கேற்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதே போல தேர்தல் கமிஷன் சார்பில் முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் யாரேனும் (சேஷன் சென்னையில்தான் வசிக்கிறார் என நினைக்கிறேன். முன்னாள் விஜிலன்ஸ் கமிஷனர் விட்டல் இங்கேதானிருந்தார்) பங்கேற்றிருக்க வேண்டும்.
ஆனால் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. தொலைக்காட்சி விவாதங்களுக்கு விருந்தினர்களை 'பிடிப்பது' எத்தனை சிரமமானது என எனக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும் என்பதால் இது குறித்து நான் வேறேதும் சொல்லப்போவதில்லை
2 days ago
2 comments:
லயோலா கல்லூரி வெளியிட்ட எத்தனையோ தேர்தல் கணிப்புகள் பொய்யாகி உள்ளனன்.
சமீபத்தில் என் டி டி வி குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்த கணிப்பு வெளியிட்டது, அதுவும் ஸ்ரீநிவாஸ் ஜெயின் குஜராத்தின் எல்லா தொகுதிகளுக்கும் சென்று கணிப்பு வெளியிட்டேன் என்றார். அவர்கள் கணிப்பு படி தொங்கு சட்ட மன்றம் அல்லது காங்கிரஸ் பெரும்பான்மை பெரும் என்றனர்.
ஆனால் முடிவோ தலை கீழ்.
இது குறித்து நான் பலமுறை தொலைபேசியில் ஸ்ரீநிவாஸ் ஜெயின், பிரணாய் ராய், பார்க்க டாட் தொடர்பு கொள்ள முயன்றேன், அவர்கள் பேச விருப்பம் தெரிவிக்க வில்லை.
ஊடகங்கள் தங்களின் வியாபாரம், விளம்பர வருமானத்தை பெருக்க தான் ஆர்வமாக உள்ளதே தவிர , மக்களுக்கு உதவும் நல்ல கட்சி வெற்றி பெறாத என்ற கவலை , அக்கறை இல்லை.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் கூட ஒபாமா பெரும் வித்தியாசத்தில் வெல்ல மாட்டார் என்றே கருத்து கணிப்பு நடந்தது.
கர்நாடக சட்ட மன்ற தேர்தலில், திருமங்கலம் தேர்தலில் எல்லாம் கணிப்பு பொய். நக்கேரன் கணிப்பு படி திருமங்கலம் தேர்தலில் தி மு க வாக்கு வித்தியாசம் மிக குறைவாக இருக்கும் என்பது.
குப்பன்_யாஹூ
கணிப்புகள் எல்லாம் அவரவர் சார்ந்த அரசியல் கட்சிகளின் நிலையைக்கொண்டு மக்களை திசை திருப்பும் பொய் தகவல்கள். இவைகள் எல்லாம் ஊடகங்களின் வியாபார தந்திரங்கள்.பல முறைகள் அவைகள் பொய்த்து பொய் இருக்கின்றன. இருந்தாலும் அவைகள் விடாமல் மக்களை குழப்பி கொண்டு இருக்கின்றன. வோட்டு போடும் சராசரி மக்கள் தேர்தல் கூட்டணிகள் வாக்கு நடைபெறும் நாளுக்க்கு முன்னாதாக அறிவிக்கும் இறுதி நேர இலவசங்களை மனதில் கொண்டுதான் செயல்படுகின்றனர். மற்ற வாக்காளர்கள் யாரும் இதை பெரிதுபடுத்துவதில்லை என்பதுதான் உண்மை.
Post a Comment