Saturday, March 19, 2005

கிறித்துவமும் பெண்களும்

ஆலயங்களில் பெண்கள் பூசை முதலிய சடங்குகளை நடத்துவதை இந்து மதம் மட்டுமல்ல, கிறிஸ்துவமும் உற்சாகமாக வரவேற்கவில்லை என்பதை என் முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதைக் குறித்து எழுதுமாறு மூர்த்தி போன்ற நண்பர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தப் பதிவை வெளியிடுகிறேன்

அருட்தந்தை திஸ்ஸா பாலசூரியா என்ற இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் 1990ம் ஆண்டு Mary and Human Liberation (மேரியும் மனிதகுல விடுதலையும்) என்று ஒரு நூல் எழுதினார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடும் மன உறுதி வாய்ந்த ஒரு பெண்ணாக அதில் மேரி சித்தரிக்கப்பட்டிருந்தார்.இதற்கு மாறாக, திருச்சபை, மேரியை ஒரு சாதுவான, அடங்கிப் போன பெண்ணாக சித்தரிக்கிறது என்று அவர் குறைப்பட்டுக் கொண்டார். " புதிய ஏற்பாட்டின் முதல் பெண் பூசாரி" (""the first priest of the New Testament along with Jesus.") என்றும் அவர் மேரியைக் குறிப்பிட்டிருந்தார். பெண்களுக்கு தேவாலயங்களில் பூசை செய்யும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறை கூவல் விடுத்திருந்தார்.

1994ம் ஆண்டு, வாடிகன் அவரது நூல் குறித்து ஓர் ஆய்வைத் துவக்கியது. அவரது கருத்துக்கள் பிழையானவை என்று அது அறிவித்தது. கிறிஸ்துவத்தில் நம்பிக்கை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் பிரமாணம் ஒன்றில் கையெழுத்திட்டு அனுப்புமாறு அவரைக் கோரியது. வீடு பேறு அடைய ஞானஸ்நானம் அவசியம், மேரி கன்னியாக இருந்து இயேசுவைப் பிறப்பித்தார், (immaculate conception of Mary), அவர் தன் உடம்போடு சொர்க்கம் போனார், ஆதமும் ஏவாளும் முதற்பாவம் புரிந்தார்கள் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு என்று உறுதி அளிக்கமாறு அவர் கோரப்பட்டார். அந்தப் பிரமாணப்பத்திரத்தில், "பெண்களுக்கு தேவாலயங்களில் பூசை செய்ய உரிமை அளிக்கத் திருச்சபை எந்த விதத்திலும் அதிகாரம் கொண்டலதல்ல " ( "The Church has no authority whatsoever to confer priestly ordination on women.") என்று ஒரு வாக்கியமும் இடம் பெற்றிருந்ததாக அப்போது வெளியான பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

பாலசூரியா பிரமாணத்தில் கையெழுத்துவிட மறுத்துவிட்டார். பிரமாணப் பத்திரத்தில் சில மாற்றங்களைச் செய்தால் கையெழுத்திடத் தயார் என்றும் தெரிவித்தார். வாடிகன் அதை ஏற்க மறுத்தது. அவர் அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடவேண்டும் என்று மறுபடியும் வலியுறுத்தியது. அவர் மீண்டும் மறுத்தார். வாடிகனில் இருந்த மதகுருமார்களின் உயர்நிலை அமைப்பு அவரை கிறித்துவத்திலிருந்து விலக்கி வைத்தது. அவர் அப்போது போப்பாண்டவராக இருந்த இரண்டாம் ஜான் பாலிடம் மேல் முறையீடு செய்தார். இதெல்லாம் 1996ம் ஆண்டு நடைபெற்றது. 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் போப்பாண்டவர் அவரை கிறித்துவத்திலிருந்து நீக்கியது சரிதான் என்று தீர்ப்பளித்தார்.

தேவாலயங்களில் சடங்குகளையும் பூசைகளையும் நடத்த பெண்களை நியமிப்பது குறித்த சர்ச்சை 70களிலேயே துவங்கிவிட்டது. இங்கிலாந்திலுள்ள திருச்சபை பெண்களை பூசாரிகளை நியமனம் செய்வது குறித்து பரிசீலித்துக் கொண்டிருந்தபோது, அதைக் குறித்து கவலை தெரிவித்து, போப்பாண்டவர் ஆறாம் பால், கான்டபரித் திருச்சபையின் பேராயருக்கு (Archbishop of Canterbury) 1975ம் ஆண்டு ஒரு கடிதம் அனுப்பினார். " பெண்களை பூசாரிகளாக நியமிப்பது சில அடிப்படையான காரணங்களினால் ஏற்புடையது அல்ல எனத் திருச்சபை, கருதுகிறது. அந்தக் காரணங்களாவன:
ஏசு தன்னுடைய சீடர்களை ஆண்களிலிருந்தே தேர்ந்தெடுத்தார் என்று நமது புனித நூல்களில் குறிப்பிட்டுள்ள முன்னுதாரணம்; ஏசுவைப் பின்பற்றி திருச்சபையும் இதையே தொடர்ந்து வருகிறது. தேவாலாயங்களில் பூசை செய்வதிலிருந்து பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுவது என்பது கடவுள் திருச்சபைக்கு வகுத்தளித்த திட்டம் என திருச்சபை உறுதியாக நம்புகிறது."

பால் தொடர்பான பிரசினைகளில் ( பெண்களுக்கு பூசை உரிமை, மணமான பூசாரிகள், செயற்கை முறைக் கருத்தடை, கருக்கலைப்பு, திருமணத்திற்கு முன் பாலுறவு, தன் பால் விழைவு (homosex) ) ஒரு முற்போக்கான பார்வை வேண்டும் என்ற குரல்கள் கிறித்துவத்தில் 90களுக்குப் பின் அதிக அளவில் எழுந்து வருகின்றன. இவற்றில் பல பெண்களோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவை. வாடிகன் இந்த விஷயங்களில் முற்போக்கான பார்வையை மேற்கொள்ள முன் வந்தால் கிறித்துவத்தின் முகம் மாறும்.

10 comments:

வசந்தன்(Vasanthan) said...

நல்ல பதிவு மாலன்! கருக்கலைப்புப் பற்றி அன்னை திரேசா கொண்டிருந்த நிலைப்பாடு போன்றவற்றையும் சேர்த்து இன்னும் முழுமையான ஒரு நீண்ட கட்டுரையை எதிர்பார்க்கிறேன். மேலும் கிறிஸ்தவர்கள் என்று பொதுமைப்படுத்தாமல் கத்தோலிக்கத் திருச்சபை என்று வந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். நீங்கள் கூறியவை கத்தோலிக்கத் திருச்சபை பற்றியது. ஏனைய கிறிஸ்தவ கிளை அமைப்புக்களையும் விமர்சனத்துக்குட்படுத்த வேண்டும். அத்தோடு எப்படி தன் பிடிவாதத்திலிருந்து ஓரளவாவது திருச்சபை இறங்கி வந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டலாம். படிப்படியான மாற்றங்களைச் சுட்டுவதன் மூலம் (நற்கருணை அளிக்க கன்னியாஸ்திரிகளை அனுமதித்து இன்று குடும்பப் பெண்களை அனுமதிக்குமளவுக்கு வந்த மாற்றம்) எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றம் பற்றிய விவாதத்துக்கு அது துணையாயிருக்கும்.

மதங்கள் என்பதே பெண் விசயத்தில் ஒரே மாதிரியான பார்வை கொண்டவை தான். அதன் அடக்குமுறை வடிவங்களும் தளங்களும் வேறுபடும்.

வசந்தன்(Vasanthan) said...

//பிராடஸ்டண்ட், பெந்தொகோஸ் சபை போன்றவைகளில் இந்த மாதாந்திர தொந்தரவுகள் பெண்கள் சர்சுக்கு போவதை தடுப்பதில்லை. //

கத்தோலிக்கமும் தடுப்பதில்லை. சொல்லப்போனால் மாதாந்திர தொந்தரவைப்பற்றி திருச்சபை எதுவுங் கதைப்பதில்லை என்றே நினைக்கிறேன். பெண்களை தடுப்பதற்கு ஒருபோதும் அதை அவர்கள் கோட்பாடு ரீதியாக கருவியாய்ப் பாவிப்பதில்லை. மாறாக மாலன் சொன்ன வாதம் தான் வலுவானது. அதாவது இயேசு தன் சீடர்களைத் தெரிவு செய்ததிலிருந்து அதன் விளக்கத்தைத் தொடங்குகிறார்கள். மேலும் மாதாவை வணக்கத்துக்குரியவர் அல்லர் என்ற கோட்பாட்டை இன்றளவும் போதிக்கிறார்கள். (ஆனால் மக்களுக்கு "வணக்கத்துக்குரியவரல்லர் ஆனால் மன்றாடப்படக்கூடியவர்" என்பதற்கான வித்தியாசம் இன்னும் பிடிபடவில்லை. இயேசுவை வணங்குகிறார் களோ இல்லையோ மாதாவை வணங்குவார்கள்)

Anonymous said...

வி ஹெச் பி தலைவர் மணியனின் கருத்துக்கும் மாலனின் கருத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Aruna Srinivasan said...

நேற்றுதான் யூ பத்திரிகைக்காக ஒரு கிறிஸ்துவ பாதிரியாரிடம் "பெண்களும் கிறிஸ்துவமும்" பற்றி பேசிக்கொண்டிருந்தேன் :-) அதனால் மேலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அந்தப் பாதிரி, Church of South India பிரிவினைச் சார்ந்தவர். அவர்கள் பிரிவு கிறிஸ்துவத்தில் பெண்களுக்கு மிக மதிப்புண்டு என்று நிலை நாட்ட மிகவும் முயன்றார். அவர் கூற்றுபடி ஓரளவு இந்த CSI பிரிவு மதத்தினரில் பெண்கள் பிஷப் கூட ஆகலாம் எல்லா பூஜையிலும் கலந்து கொல்ளலாம்; வழி நின்று நடத்தலாம். தற்போது இந்த தென்னிந்திய வட்டாரத்திற்கு முழுமைக்கும் பொது செயலாளராக ( General secretrary) இருப்பது ஒரு பெண் பாதிரிதான். இந்த அமைப்பை Synod என்று சொல்லுகிறார்கள். இங்கு பொது செயலாளருக்குதான் பொதுவாக நிர்வாக பொறுப்புகள். ஆனால் தலைமை அதிகாரி ( CEO) பதவியில் இருப்பது ஒரு ஆண் பிஷப். ஏனென்றால் இந்தப் பொறுப்பில் ஒரு பிஷப்தாம் இருக்க முடியுமாம். பெண் பிஷப்புகள் தற்போது இல்லாததால் அவர்கள் CEO ஆக தற்போது இல்லை என்றார். ஆனால் பெண்கள் பிஷப்பாக வர தடையேதும் இல்லையென்பதால் பிற்காலத்தில் CEO கூட ஒரு பெண்ணாக இருக்கலாம் என்றார்.

இவர் கூறியதில் இன்னும் சில சுவாரசியமாக இருந்தன. ஆரம்பத்தில் கடவுளை ஆண் என்றுதான் குறிப்பிட்டு வந்தனர். ( Father என்று) ஆனால் தற்போது Common Parent பெற்றோர் என்று தொழுகைகளில் குறிப்பிடுகிறார்களாம். அதேபோல் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைபட்டபோது, ஆண்கள் ஓடிவிட்ட நிலையில் கடைசி வரை கூட இருந்தது பெண் சிஷ்யைகள்தாம். பின்னர் அவர் உயிர்த்தெழுந்ததி ஓடிவந்து அறிவித்ததும் மேரி மேக்டலின் என்ற பெண்ணே. அதேபோல் இன்று சர்ச் தொழுகைகளில் Kingdom of God என்று சொல்வதில்லையாம். பதிலாக Reign of God என்று பொதுவாக சொல்கிறார்களாம்.

இவர் சொல்வதிலிருந்து ஒன்று புரிகிறது. மதப் பழக்கங்கள், செயல்பாடுகள், கொள்கைகள் காலத்திற்கேற்ப மாறி வந்துள்ளன. ஆணாதிக்கம் இருந்த கடந்த காலத்தில் கடவுள் ஆணாக பாவிக்கப்பட்டார். இப்போது "பெற்றோராக" கருதப்படுகிறார்.

பொதுவாக எல்லா மதத்திலுமே அந்தந்த கலாசார, காலத்தின் தாக்கங்கள் பெரிதும் இருந்தன; இருக்கின்றன.

அருணா

Anonymous said...

இங்கே மாலன் பதிவு..., அருணா பதிவு இரண்டும் சேர்ந்து குழப்புகின்றன. இயேசுவுக்கு பெண் சீடர்கள் உண்டா, இல்லையா? மாலன் இல்லை என்கிறார். அருணா உண்டு என்கிறார். யாராவது தௌதவு படுத்துங்கள்!

- ரமேஷ்

வசந்தன்(Vasanthan) said...

இது வார்த்தைப்பிரயோகங்களில் உள்ளது. இயேசு தெரிந்தெடுத்த பன்னிரண்டு பேருமே ஆண்கள் தாம். ஆனால் அவர் ஒருமுறை கல்லெறிதலிலிருந்து காப்பாற்றியதாகச் சொல்லப்பட்ட மதலேன் மரியாள் உட்பட அவர்மேல் விசுவாசம் கொண்ட பெண்கள் இருந்தார்கள். அவர் இறக்கும்போது கடைசிவரை இருந்த ஆண் என்றால் அது இயேசுவால் தெரிந்தெடுக்கப்பட்ட அருளப்பர் மட்டுமே. மதலேன் மரியாளையோ மற்றவர்களையோ இயேசுவின் சிஸ்யைகளாகச் சொல்வதில்லை.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

i dont think that church, particularly the catholic church will undergo such a change soon.
the church condemns abortion, opposes distribution of condoms
and suggests abstience as a solution to AIDS.it is hand in glove with conservative governments on many such issues.
Catholics for Free Choice a group which questions the church's stand on abortion has been severly criticised by church and church supporters.moreover church enjoys the status of a state in the UN.It
has influenced the stand of some
countries on cloning.it may give some space to women but that will
be a restricted space.

Narain Rajagopalan said...

ரவி சீனிவாஸின் கருத்துகளோடு பெருமளவு ஒத்துப் போகிறேன். உலகின் எல்லா மதங்களுமே பெண்களுக்கு எதிரானவைதான் என்பது தொடர்ந்து நிருபணமாகிவருகிறது. எங்கோ கவிதையில் படித்தது, என்னவாய் இருந்தாலும், ஒரு கிறிஸ்துவ பெண் போப் ஆக முடியாது. ஒரு இஸ்லாமிய பெண் மெளல்வியாக முடியாது. ஒரு இந்து பெண் மதத்தலைவி ஆக இயலாது. (இதில் எனக்கு மாற்றுக்கருத்துகளுண்டு) கிறிஸ்துவ அடிப்படைவாதத்தினைப்பற்றி ஏற்கனவே, பத்ரியின் பதிவில் எழுதியிருக்கிறேன். அன்னை தெரசாவிற்கு அளிக்கப்பட்ட மரியாதை கூட (என்ன பட்டம் குடுத்தார்கள் என்று நினைவில்லை) மிக தாமதமாக, உலக மக்களின் அழுத்தத்திற்கு பிறகே தரப்பட்டது. அடிப்படைவாத கிறிஸ்துவம் தான் இன்றைக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய அரசியல் சக்தியாய் உருவெடுத்துள்ளது என்பது இப்பதிவோடு சம்பந்தமில்லாவிட்டாலும், மிக அபாயகரமான தகவல். கூடுதல் தகவலாய், இந்தியா வந்துப்போன கண்டலீசா ரைஸ் ஒரு பாதிரியாரின் மகள் என்று எங்கோ படித்த நினைவு.

[இதற்காக நான் மாதா அமிர்தானந்தமாயியை எல்லாம் மதத்தலைவி, ஆன்மிக குரு என்றெல்லாம் சொல்லவில்லை, மாதாவினைப் பற்றி ஏற்கனவே பால் சக்கரியா, தெஹல்காவில் கிழித்துவிட்டார் ;-)]

ஜோ/Joe said...

இயேசு தன்னுடைய பல சீடர்களிடமிருந்து 12 அப்போஸ்தலர்களை ஆண்களாக இருக்குமாறு தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தெளிவாக தெரியவில்லை..ஆனால் அன்றைய சமுதாய சூழலில் நாடோடியாக பல இடங்களுக்கு சுற்றி போதனை செய்யும் போது எப்போதும் உடனிருக்க ,நினைத்த இடத்தில் தங்க பெண்களுக்குள்ள சிரமங்கள் காரணமாக கொள்ளப்பட்டிருக்கலாம்.

சிறில் அலெக்ஸ் said...

எல்லா மதங்களுமே மனித-கடவுள் உறவை கட்டுப்படுத்துகின்றன. இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை. கடவுளையும் அவர் சார்ந்த கொள்கை, நம்பிக்கைகளை வறையறுப்பதே ஒரு மூடநம்பிக்கையாகத்தான் இருக்க முடியும்.

அண்மையில் கத்தோலிக்க திருச்சபை தன் நம்பிக்கை கோட்பாட்டில் ஒரு (பெரிய) மாற்றம் கொண்டுவந்துள்ளது. 'லிம்போ' எனப்படும் பரலோகத்திற்கு மாற்று இடம் ஒன்று இருப்பதாக நம்பப்பட்டுவந்தது இப்போது அது இல்லை (http://cvalex.blogspot.com/2006/01/limbo-gonemany-more-to-go.html)

இதைப்போல பல மாற்றங்களை அதன் வாழ்நாளில் செய்துள்ளது...இன்னும் செய்யும் என்பது என் நம்பிக்கை.

//அன்னை தெரசாவிற்கு அளிக்கப்பட்ட மரியாதை கூட (என்ன பட்டம் குடுத்தார்கள் என்று நினைவில்லை) மிக தாமதமாக, உலக மக்களின் அழுத்தத்திற்கு பிறகே தரப்பட்டது. //

இது உண்மையாகத்தெரியவில்லை. இவருக்காக விதிகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. இருந்தாலும், அன்னையை புனிதராக (இந்தப்பட்டம்தான் வழங்கப்படைருக்கிறது) கருத நாம் யாரையும் கேட்கத் தேவையில்லை.

மாலன்: 'Immaculate Conception of Mary' என்பதற்கு 'ஜென்ம பாவமில்லாமல்(original sin) உற்பவித்த மரியாள் எனப்பொருள். அதாவது மரியாள் பிறக்கும்போதே (மற்றவர்கள் போலல்லாது) பாவமற்றிருந்தாள் என்பதே பொருள்.