1 day ago
Friday, February 20, 2009
காக்கிச் சட்டைகளும் கருப்புக் அங்கிகளும்
கறுப்பு அங்கிகளும் 'விக்'களும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இவர் இன்னார் எனத் தெரியாத (annonimty) தோற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் 17ம் நூற்றாண்டில் நீதித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒரு குறிப்பு சொல்கிறது நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் அவர்களை இன்னார் என இனம் கண்டு கொள்ளவே உதவியிருக்கின்றன.
காக்கி என்ற இந்துஸ்தானி சொல்லுக்கு புழுதி என்று பொருள் என்றாலும் அதை அதிகாரத்தின் அடையாளமாக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்கள். நேற்றைய உயர்நீதிமன்றச் சம்பவங்கள் காக்கியின் பெருமைகளை புழுதிக்கு அனுப்பியிருக்கின்றன
என்ன நடந்திருக்கும்?
இன்று சட்ட மன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் சட்ட அமைச்சர் துரைமுருகன் " சுப்ரமணியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு வக்கீல் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற வக்கீல்கள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் 19-ம் தேதி (நேற்று) இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த வக்கீல்கள், சுப்ரமணியசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், புகார் மனு ஒன்றை தருவதற்காக ஐகோர்ட் வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு வந்துள்ளனர். சுப்ரமணியசாமி மீது தாங்கள் கொடுக்க வந்த புகாரை பதிவு செய்துவிட்டு, அதன்பிறகு தங்களை கைது செய்யுமாறு கூறியுள்ளனர். இதனை ஏற்று அவர்கள் கொடுத்த புகார் மனுவை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது." என்கிறார்.
சுப்ரமண்ய சாமி மீது முட்டை வீசுகிற சம்பவம் நடந்ததற்கு அவர் வக்கீல் ஒருவரை ஜாதிப் பெயரைச் சொல்லியதுதான் காரணம் என்று வக்கீல்கள் கூறுகின்றனர். ஆனால் இது அந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் ஒரு அறிக்கை, உச்ச நீதி மன்றத்தில் சாமி முறையீடு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் தொழில் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகள், ஆகியவற்றின் காரணமாக நிலைமை முற்றியவுடன் தங்களைத் தற்காத்துக் கொள்ள, ஒரு பின் யோசனையாக (after thought) சம்பந்தப்பட்ட வக்கீல்கள் இப்போது ஜாதி பிரசினையைக் கிளப்புகின்றனர் என்றே எனக்குத் தோன்றுகிறது, என் சந்தேகத்திற்கான காரணங்கள்:
சாமி ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டிருப்பார் என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், அப்படி இழிவு செய்யப்பபட்டதும் திட்டப்பட்டவரின் உடனடி 'ரியாக்ஷன்' என்னவாக இருக்கும்? கைகலப்பு, கன்னத்தில் அறைதல், சட்டையைப் பிடித்தல், புஷ் செய்தியாளர் சந்திப்பில் நடந்தது போல் காலணி வீச்சு, இப்படி ஏதாவது ஒன்று நடந்திருக்கும்.
ஆனால் சம்பவத்தில் அழுகிய முட்டைகள் வீசப்பட்டிருக்கின்றன. வழக்கறிஞர்கள் சாதரணமாக, நீதிமன்றங்களுக்கு கேஸ்கட்டுகள், சட்டநூல்கள் மற்றும் தங்களது ஜூனியர்களுடன் வருவார்கள். கூ முட்டைகளோடு வருவார்களா?
2."நீதிமன்றத்தின் ஒரு வாயிலின் கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டது.
அதன் பின்னர், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திடீரென சில வழக்கறிஞர்கள் மறைத்து வைத்திருந்த அழுகிய முட்டைகளை எடுத்து சுப்பிரமணியன் சுவாமி மீது வீசத் தொடங்கினர். இந்த சம்பவத்தைப் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை எதிர்பார்க்காத சுவாமியின் மெய்க்காப்பாளர்கள் (சி.ஆர்.பி.எப். போலீஸார்) நீதிமன்றத்தின் மற்றொரு வாயில் வழியாக உள்ளே நுழைந்தனர்.
அதற்குள் சுவாமி மீதும், அவருக்கு எதிரே இருந்த டேபிள்கள் மீதும் முட்டைகள் விழுந்து உடைந்தன. அதன் பிறகு, சுவாமி நீதிபதிகளின் அருகேயிருந்த இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.
இதன்காரணமாக, சுமார் 15 நிமிடங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நீதிபதி கே. சந்துரு ""எதற்கும் ஒரு எல்லை உண்டு'' என்று வழக்கறிஞர்களைப் பார்த்து எச்சரித்தார்."
இது சம்பவம் பற்றி தினமணியில் வெளியான செய்தி. (18/2/09)
நீதி மன்றத்தின் கதவுகள் உள்புறமாகத் தாழிடப்பட்டன என்ற செய்தி தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
3. இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகக் கோஷம் எழுப்பப்பட்டது என்ற செய்தியும், தாக்குதலுக்குக் காரணம் அவர் ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியது அல்ல என்பதைக் காட்டுகிறது.
4. இந்த சம்பவம் குறித்து தினமணிக்குப் பேட்டியளித்த, வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவைத் தலைவர், கே. பாலு, "வழக்கறிஞர்கள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நீதி மன்ற புறக்க ணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று அரசுத் தரப்பி ல் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் ரீதியாகப் பயன்பெறவே சுப்பிரமணியன் சுவாமி நீதி மன்றத்துக்கு வந்துள்ளார்" எனக் குற்றம் சாட்டுகிறார்.
எனவே வழக்கறிஞர்களின் ஆத்திரம் சாமி நீதிமன்றப் புறக்கணிப்பை ஆதரிக்காமல், நீதிமன்றத்திற்கு வழக்காட வந்துதான், ஜாதிப் பிரசினை அல்ல.
இப்படி ஜாதியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, கற்பனையான ஒரு புகாரைப் பதிவு செய்ய வற்புறுத்தியதே ஒரு நீதியற்ற செயல். அப்படி அந்தப் புகாரைப் பதிவு செய்தால் எங்களை கைது செய்து கொள்ளலாம் எனப் பேரம் பேசியது இன்னொரு நியாயமற்ற செயல். அப்படிப் பதிவு செய்த பின்னும் அவர்கள் தங்கள் வாக்கைக் காப்பாற்றவில்லை என்பதை துரைமுருகனின் அறிக்கையிலுள்ள இந்த வரிகள் காட்டுகின்றன:
"சுப்ரமணியசாமி மீது தாங்கள் கொடுக்க வந்த புகாரை பதிவு செய்துவிட்டு, அதன்பிறகு தங்களை கைது செய்யுமாறு கூறியுள்ளனர். இதனை ஏற்று அவர்கள் கொடுத்த புகார் மனுவை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின் சுப்ரமணியசாமியை கைது செய்துவிட்டு பின்னர் தங்களை கைது செய்ய வேண்டும் என்றனர்"
இவற்றிலிருந்து என்ன நடந்திருக்குமென்பதை ஊகிக்க முடிகிறது:
1.புலிகள் விமர்சகரான சாமி, இலங்கைப் பிரசினைக்காக நீதி மன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடக்கும் போது நீதி மன்றம் வந்ததை சில வழக்கறிஞர்களால் பொறுக்க முடியவில்லை
2. அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு வன்முறையில் இறங்குகிறார்கள்.
3. பின்னர் அதன் விளைவுகளை எண்ணி அஞ்சி பின் யோசனையாக ஒரு காரணத்தைக் 'கண்டுபிடிக்கிறார்கள்'
4.சாமி மீது புகார் பதிவு செய்தால் எங்களை கைது செய்து கொள்ளலாம் எனப் பேரம் பேசுகிறார்கள்
5.அது உண்மையில் ஒரு தந்திரம். போலீஸ் கைது செய்ய முற்படும் போது அதை எதிர்த்து வன்முறையில் இறங்குகிறார்கள்.
6.வன்முறையைக் கட்டுப்படுத்த சிரமப்படும் போலீஸ் கண்மண் தெரியாமல் புகுந்து விளாச வன்முறை மேலும் வளர்கிறது.
'இலங்கைத் தமிழர்கள் ஈழம் பெறுவதற்காக நாங்கள் எதையும் இழக்கத்தயார்' என்பதுதான் வழக்கறிஞர்களது உண்மையான நிலை என்றால், அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? " நீ தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசி வருகிறாய். அது பொறுக்கமாட்டாமல் முட்டை அடித்தேன். நீ என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள், அதற்கான விளைவை ஏற்க நான் தயார் " என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தண்டனையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்கள் செய்வதையும் செய்துவிட்டு இப்போது அதற்கு ஜாதி முலாம் பூசி ஒளிந்து கொள்ள முயல்கிறார்கள்
சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர் கொள்ள வழக்கறிஞர்கள் அஞ்சுகிறார்கள், தங்கள் செயலுக்கான பொறுப்பை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் (Not owning responsibility for their own actions) என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் தங்கள் செயலுக்குப் பொறுப்பேற்க மறுப்பதற்குக் காரணம் அவர்கள் அந்த செயல்களை அறிவின் பாற்பட்டு செய்யவில்லை, உணர்ச்சி வேகத்தில் செய்கிறார்கள் என்பதே.
சிந்தித்துச் செயல்படுகிற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக இருந்தால், வீதியிலிறங்கிக் கோஷம் போடுவதன் மூலம், சாலையில் உட்கார்ந்து மறியல் செய்வதன் மூலம், நீதிமன்றப் புறக்கணிப்பு மூலம் ராஜபக்க்ஷேயைப் பணிய வைக்க முடியாது, அதற்கு டிப்ளமேட்டிக் சானல்கள் எனப்படும் தூதரகங்கள் மூலம் லாபி செய்ய வேண்டும், தா.பாண்டியன் சொன்னதைப் போல சர்வதேச நீதி மன்றத்தில் மனித உரிமை மீறல் என வழக்குத் தொடுக்க வேண்டும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழ்கிற மக்கள், அறிவு ஜீவிகளிடம் இலங்கை அரசுக்கு எதிரான கருத்தை உருவாக்க வேண்டும், ஊடகங்களில் எழுத வேண்டும் என்பது போன்ற அறிவு சார்ந்த நிலைகளை எடுத்திருப்பார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் ஏற்கனவே பல விதங்களில் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் சூழலில் அவர்கள் மத்தியிலேயே கூச்சல் போடுவது எதைக் கருதி? வழக்குகள் தள்ளிப் போவதால் சம்பந்தப்பட்ட வாதி/பிரதிவாதிகளின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்வதைத் தவிர வேறு இதனால் என்ன நடந்து விடும்? தேர்வுகள் தள்ளிப் போவதால் மாணவர்களின் அதிருப்தியை சம்பாதிக் கொள்வதை அன்றி வேறு என்ன பலன் கிடைத்து விடும்? இது மக்களிடமிருந்து அவர்கள் அன்னியப்படுவதற்கு உதவுமே அன்றி மக்களைத் திரட்ட உதவாது. மக்களைத் திரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஏற்கனவே அவர்கள் இலங்கை பிரசினையில் வழக்கறிஞர்கள் வெளிப்படுத்தும் உணர்வில்தான் இருக்கிறார்கள்.
இதன் மூலம் அரசை சங்கடப்படுத்துவது, அல்லது திமுகவை வீட்டுக்கு அனுப்புவதுதான் நோக்கம் என்றால் அதுவும் அவர்களது நோக்கத்திற்கே எதிராய் முடியும். திமுக ஆட்சி வீழ்ந்தால் அடுத்த அரசு அமைய எப்படியும் 4 முதல் 6 வார காலமெடுக்கும். அதற்குள் இலங்கையில் நிலைமை எப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது. திமுக போய் ஜெயலலிதா வந்தால் அவரிடமிருந்து புலிகளுக்கு ஆதரவு கிடைக்காது. திமுகவாலேயே மத்திய அரசை ஓரளவிற்கு மேல் நிர்பந்திக்க முடியவில்லை என்னும் போது , பா.ம.கவோ, மதிமமுகவோ, விடுதலைச் சிறுத்தைகளோ அதைத் தனியாகப் பணிய வைத்து விடமுடியுமா?
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் அர்த்தம் இல்லை. அதிலும் அது வன்முறை வடிவம் எடுப்பதென்பது கண்டனத்திற்குரியது.
அவர்கள் சட்டம் தன் வேலையைச் செய்ய அனுமதித்து நீதி மன்றங்களுக்குத் திரும்பட்டும்.
காவல்துறை மீது தவறேயில்லையா?
நிச்சியமாக இருக்கிறது.குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்களை வீடு தேடிச் சென்று கைது செய்திருக்கலாம்.அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து கொள்ள அவகாசம் அளித்தது காவல்துறையின் திறமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
"The FIR (against Swamy) was finally registered after a couple of hours . It seemed the tension had been defused, when all of a sudden, two companies (roughly 200 men) of Swift Action Group, a wing of the armed reserve police reached the spot around 3:15 pm. Blostered by the presence of SAG police made a bid to arrest 20 lawyers who were identified as those involved in the attack on Subramaniam Swamy. As lawyers shoved the SAG personnel went beserk and pelted stones. என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா (20/2/09)
வழக்கமான காவல்துறையால் கையாளப்பட வேண்டிய விஷயத்திற்கு SAGயை அனுப்ப உத்தரவிட்டது ஏன்? உத்தரவிட்டது யார்? சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டபோது கையைக் கட்டிக் கொண்டிருக்க உத்தரவிட்டதும் இப்போது கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்க உத்தரவிட்டதும் ஒரே நபரா? அப்படியானால் அது -
யார் ?
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பிரச்சினையை சரியாக அலசியிருக்கிறீர்கள். இதற்கும் சாதி முலாம் பூசி மெழுகலாம் என்று சிலர் எண்ணுவது சரியில்லை!
நீதித்துறை மீதே பொதுமக்களுக்கு மரியாதையும், நம்பிக்கையும் குலையும் வகையில், சமீபத்தில் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. லாயர்கள் ஒரு பேருந்தை ஹைஜாக் செய்தது நினைவுக்கு வருகிறது.
எ.அ.பாலா
இதற்கும் சாதி முலாம் பூசி மெழுகலாம் என்று சிலர் எண்ணுவது சரியில்லை!
அருமையாக அலசி இருக்கிறேர்கள் ..மாலன் சார் .......
இலங்கையில் நடக்கும் வன்முறைகளை எதிர்த்து இங்கு வன்முறை ஆட்டம் ஆடினால்
அதனால் யாருக்கு பயன் .நமக்குதான் இழப்பே ஒழிய இலங்கை தமிழர்குக்கு எந்த நன்மையும் ஏற்ப்பட போவதில்லை. இதை யாரும் உணர்வதாக தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துகொல்வதுதான் வாடிக்கையாகிவிட்டது.
ஊகமெல்லாம் வேண்டாம் மாலன் சார், ஒப்புதல் வாக்குமூலங்களே இங்கே இணையத்தில்நிறையக் கிடைக்கின்றன. ஒரு சாம்பிளுக்கு, இந்த வலைப் பதிவில் இருந்து,
http://vinavu.wordpress.com/2009/02/17/sswamy1/
hats off Maalan, you have analysed the issue very well as always.
No one here to beleive the lawyers's statement of caste.
But some says the real reason is lot of cases (revenues) are not coming to court and police do the arbitration (katta panchaayatthu) in police station itslsef.
Please write about this.
கடந்த சில காலமாக காக்கி சட்டையும்
கருப்பு அங்கியும் கை கலப்பில் ஈடு பட்டு
காயப்பட்டு நிற்கின்றன.
காசை இவர்களிடம் தொலைத்துவிட்டு
மக்கள் ரத்த கண்ணீர்
வடித்துக்கொண்டிருக்கின்றனர்
இவர்கள் நடத்தும் யுத்தத்தில் அப்பாவி மக்கள்
அல்லல்பட்டு கொண்டிருக்கின்றனர்
இவர்கள் மெத்த படித்தவர்கள்
சட்டம் தெரிந்தவர்கள்
இருவர் வாதத்தையும் கேட்டு
தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் யார் பக்கம்
நியாயம் உள்ளது என்பது குறித்து கருத்து
சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்
அரசு செய்வதறியாமல் குழம்பி போய் உள்ளது
இந்த பிரச்சினை விரைவில் தீர்ந்தால்
அனைவருக்கும் நல்லது.
.
கடந்த சில காலமாக காக்கி சட்டையும்
கருப்பு அங்கியும் கை கலப்பில் ஈடு பட்டு
காயப்பட்டு நிற்கின்றன.
காசை இவர்களிடம் தொலைத்துவிட்டு
மக்கள் ரத்த கண்ணீர்
வடித்துக்கொண்டிருக்கின்றனர்
இவர்கள் நடத்தும் யுத்தத்தில் அப்பாவி மக்கள்
அல்லல்பட்டு கொண்டிருக்கின்றனர்
இவர்கள் மெத்த படித்தவர்கள்
சட்டம் தெரிந்தவர்கள்
இருவர் வாதத்தையும் கேட்டு
தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் யார் பக்கம்
நியாயம் உள்ளது என்பது குறித்து கருத்து
சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்
அரசு செய்வதறியாமல் குழம்பி போய் உள்ளது
இந்த பிரச்சினை விரைவில் தீர்ந்தால்
அனைவருக்கும் நல்லது.
.
//If you are realy interested resign your job and go to srilnaka and fight for Tamil, Tamil eelam etc.//
http://salemsenthil.blogspot.com/2009_02_01_archive.html
இதில் குப்பன் யாஹூ கூரியுருப்பது சரியா?
Post a Comment