தேர்தல் காலச் சிந்தனைகள்
தேர்தல் பற்றிய
என் கருத்துக்களையும் கணிப்புகளையும் கேட்கும் ஆவலில் மும்பைப் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த வாரம் வந்திருந்தார். உள்ளே நுழையும்
போதே, “ஸ்ஸ்…ப்பா! என்ன வெயில் இப்பவே இப்படி என்றால் மேயில் எப்படி இருக்குமோ?” என்ற
உரக்க முணுமுணுத்துக் கொண்டார்.
கோடைச் சூட்டோடு
தேர்தல் வெப்பமும் சேர்த்து கொண்டால் என்னவாகும் என்பது அவரது கவலையாக இருந்தது.
வெப்பத்தில் மெழுகு
உருகும். இரும்பு இறுகும். இது இயற்கை விதி. ஆனால் ஆவியாகும் நீரைப் போலக் கண்ணுக்குத் தெரியாமல் போகிறவர்களைப் பற்றி பத்திரிகைகள் கண்ண்டுகொள்வதே
இல்லை என்றேன்
“யார் அவர்கள்?”
“கட்சித் தொண்டர்கள்தான்”
என்றேன்.
தேர்தலுக்குத்
தேர்தல் சிறப்பிதழ் போடும் பத்திரிகைகள் கடந்த தேர்தல்களை அலசும் நடக்கும் தேர்தலைக்
கணிக்கும். இறந்த தலைவர்களை நினைத்துக் கொள்ளும். இருக்கும் தலைவர்களை விதந்து பேசும்.
ஆனால் தலைவர்களைப் போல வெற்றியினால் பலனோ, தோல்வியினால் மன உரமோ பெறாமல் இரண்டு மாத
காலத்தை அவர்களுக்காகச் செலவிட்ட தொண்டர்கள் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சிலநாள்களில்
ஆவியான நீரைப் போல மறக்கப்பட்டுவிடுவார்கள்
மறக்கப்படுவது
கூட மன்னிக்கப்படலாம். ஆனால் தோல்வி கண்ட கடசியின் தொண்டர்கள் அவமானத்தில் புழுங்கி,
அச்சத்தில் கலங்குவதை எத்தனை பேர் எண்ணிப் பார்த்திருக்கிறோம்?
தேர்தல் வெற்றிகள்
ஆனந்தக் களிப்பில் மட்டுமல்ல, அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்ளும் தருணங்களாகவும்
அமைந்து விடுவதுண்டு. எந்த நேரமும் தான் தாக்கப்படலாம் என்ற நிலையில் உள்ள தோற்ற கட்சித்
தொண்டனின் மனநிலை எப்படி இருக்கும்?
“மனைவி மிகவும்
கெஞ்சினாள்;எல்லாரையும் போய்ப் பார்த்துவிட்டு வரச் சொன்னாள். ”நீங்கள் ராப்பகலா ஓடியாடி
உழைத்தீங்களே, அவரைப் பார்த்துச் சொல்லிட்டு வாங்க” என்று கேட்டிருந்தாள்….அவனாகப்
போகவில்லை. ஆனால் அதற்குள் அவருக்கு நிச்சியம் தகவல் எட்டியிருக்கும். அவர் காரைப்
போட்டுக்க் கொண்டு வந்திருக்கக் கூடும். ஆனால் வரவில்லை. தோற்றிருந்தால் என்ன, வந்திருக்கலாம்.
ஆனால் அந்த மனிதனும் வீட்டில் முடங்கிக் கிடந்திருப்பான். அவனும் யாரிடமும் பேசாமல்,
பத்திரிகைகளைப் பார்க்க மனமில்லாமல் –தைரியமில்லாமல்- ஒரு சாய்வு நாற்காலியில் விழுந்து
கிடப்பான்.மனைவியை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் உட்கார்ந்திருப்பான். குழந்தைகள்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தால் அதைப் பொறுக்க முடியாமல் எரிந்து விழுந்து கொண்டிருப்பான்.
பத்திரிகைக்காரர்கள் வந்து கேட்டால், ‘பெரிய அநீதி நடந்து விட்டது” எனக் கூறியிருக்கக்
கூடும். என்ன பெரிய அநீதி நடந்து விட்டது? சில ஆயிரம் ரூபாய்கள் இந்த மூன்று நான்கு
வாரங்களில் கணக்கு வழக்கில்லாமல் செலவழிந்திருக்கும். அந்தச் சில ஆயிரம் ரூபாய்களை
வெற்றி பெற்றிருந்தால் பல மடங்காகப் பெருக்கித் திரும்பப் பெற்றிருக்க முடியும்.வெற்றிக்கும்
தோல்விக்கும் அது ஒன்றுதான் அந்த மனிதனுக்கு வித்தியாசம் இவனைப் போல் தலையுடைவதை எதிர்பார்த்து,
எலும்புகள் நொறுங்குவதை எதிர்பார்த்து, குழந்தை குட்டிகள் தாக்கப்படுவதை எதிர்பார்த்து,
ஏன் உயிரே கூட இழக்க நேரிடும் என்பதை எதிர்பார்த்து இருட்டில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கப்
போவதில்லை”
1971ல் எழுதப்பட்ட
“காத்திருத்தல்” என்ற சிறுகதையில் அசோகமித்திரன் வர்ணிக்கும் மனநிலை இது. கதை என்றாலும்
இது கற்பனை அல்ல. 1967 தேர்தலின் போது காங்கிரஸ் தொண்டர்களிடமும், 1991 தேர்தலின் போது
திமுக தொண்டர்களிடமும் இந்த மனநிலை நிலவியதை நேரடியாக அறிவேன்
இந்திய ஜனநாயகத்தின்
எழுதப்படாத பக்கம் தோல்விக்குப் பின் எழும் மன நிலை. அந்த வன்முறையின் ரத்தக் கறைகள்.
தொண்டர் குடும்பங்களின் கண்ணீர் சுவடுகள்
வரலாறு என்பதே
வென்றவர்களின் கதைதானே? தொண்டர்களின் கதையா அது?
கடைசிப் பக்கம் கல்கி 3.4.2016
No comments:
Post a Comment
இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறையையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கில்லை. பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும்.நீக்கப்பட்ட விவரம் பின்னூட்டத்தில் குறிப்பிடப்படும்