இந்தியாவில் மாநிலங்கள் எப்படி அரசியலில் பன்முகத்தன்மையை பிரதிநித்துவப்படுத்துகின்றனவோ அதே போல், மதங்கள் அக உலக நம்பிக்கைகளின் குறியீடாக அமைந்துள்ளன. பெரும்பான்மையான இந்தியர்களால் பின்பற்றப்படும் இந்து மதம் என்பதே பன்முகத் தன்மை கொண்ட ஒரு நிறுவனம்.
அந்த மதத்தின் ஒரு சிறப்பம்சம் இந்து என்பவன் எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்கக் கூடாது என்பதை மதம் வரையறுக்கவோ வலியுறுத்தவோ இல்லை என்பது. இந்து என்பவன் மதச் சின்னங்களைக் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும், இன்ன கடவுளைத்தான் வழிபட வேண்டும், கடவுளின் உருவம் இப்படி இருக்க வேண்டும், வழிபாடு இந்த முறையில்தான் அமைய வேண்டும், பிரார்த்தனைகள் இந்த மொழியில் இருக்க வேண்டும், தினம் அல்லது வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் கோவிலுக்கு வந்தாக வேண்டும், இன்னின்ன குடும்பத்தினர் இந்த இடத்திலுள்ள கோவிலைச் சேர்ந்தவர்கள் என்று எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
இந்து யார் என்ற கேள்விக்கு ஒற்றைவரியில் ஓர் வரையறையைத் தந்துவிடமுடியாது. அல்லாவை வணங்குகிறவர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவைக் கும்பிடுகிறவர்கள் கிறிஸ்துவர்கள் என்று சொல்வதைப் போல சிவனை வணங்குகிறவர்கள் இந்துக்கள் அல்லது விஷ்ணுவைக் கும்பிடுகிறவர்கள் இந்துக்கள் என வரையறை செய்துவிடமுடியாது.சிவனை மட்டும் கும்பிடுகிற இந்துக்கள் இருக்கிறார்கள். விஷ்ணுவை மட்டும் கும்பிடுகிற இந்துக்கள் இருக்கிறார்கள். இருவரையும் வணங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இருவரும் இணைந்த ஐயப்பனையோ சங்கர நாராயணனையோ வணங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இந்தத் தெய்வங்களை அல்லாமல் பெண் தெய்வங்களை முதன்மைப் படுத்தி வணங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களல்லாத கருப்பசாமியையோ, முனியனையோ, சுடலைமாடனையோ வணங்குகிறவர்களும் இந்துக்கள்தான்.
இறைவனை/இறைவியை மட்டுமல்லாது இயற்கையையும் வழிபடுகிற வழக்கம் இந்து மதத்தில் இருக்கிறது.ரிக்வேதத்தின் சில பகுதிகளை மொழி பெயர்த்தால் அவை இயற்கை மீதான கவிதைகளாக அமைந்துவிடும்.(வாசிக்க: பாரதியின் மொழிபெயர்ப்புகள்).விலங்குகள், பறவைகள் இவைகள் கூட தெய்வாம்சம் பொருந்தியதாக அந்த மதத்தில் கருதப்படுகிறது. மனிதர்களுடைய எல்லா வழக்கங்களும், ஒழுக்கங்களும் கடவுள்கள் மீது ஏற்றிச் சொல்லபடுவதையும் இந்துமதம் தடுப்பதில்லை.
வேதத்தின் அடிப்படையில் தங்களை இந்துக்களாக அறிவித்து கொள்கிறவர்கள் இருக்கிறார்கள்.வேதங்களைத் தர்க்க ரீதியான கேள்விகளோடு எதிர்கொள்ளும் உபநிஷத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள்.இதிகாசப் புராணக் கதைகளில் வடும் பாத்திரங்களைத் தங்கள் ஆதர்சங்களாக ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள். மதச் சடங்குகளை செய்வதன் மூலம் தாங்கள் இந்துக்கள் எனக் கருதிக் கொள்பவர்களும் உண்டு. சடங்குகளை நிராகரித்து, ஆனால் கடவுளை மறுக்காத இந்துக்களும் உள்ளனர். இந்துமதம் ஒரு வாழ்க்கை முறை என டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு நூல் எழுதியிருக்கிறார். நமது மரபுகளைச் சுட்டி கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியிருக்கிறார்.
எனவே இந்து யார் என்பதை ஒற்றை வரியில் வரையறுத்துவிட முடியாது. இதைச் செய்பவன்தான் இந்து, இதைச் செய்யாததால் இவன் இந்து அல்ல எனச் சொல்லிவிட முடியாது. சுருக்கமாகச் சொன்னால் இந்துமதம் ஒரு பன்முகத்தன்மைக்கு இடமளிக்கிறது. ஒருவன் தான் தீவிரமாக வழிபடும் கடவுள் உருவத்திற்கு, வழிபடும் முறைக்கு மாற்றாக வேறு ஒன்றை வழிபடுவனாக இருந்தால் அவனை நிராகரிக்க வேண்டியதில்லை என்ற அணுகுமுறையை இந்து மதம் கொண்டிருக்கிறது..
ஆனால் இந்துத்வம் என்ற கருத்தியலை தனது அடிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கிற பாஜக இந்து என்பதை ஒரு ஒற்றை அடையாளமாக்க முயல்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்று அது பன்முகத் தன்மையை மறுத்துப் பேசுகிறது. சாராம்சத்தில் இது, காங்கிரஸ் மாநிலங்களிடையேயான வேறுபாடுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிகரானது. இதன் மூலம் பாஜக ஒரு வாக்கு வங்கி அரசியலைக் கட்டமைக்கப் முயற்சிக்கிறது.
எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பையும் சகோதரத்துவத்தையும்தான் போதிக்கின்றன. ஆனால் மதம், அரசியல் அதிகாரம் பெற முயலும் போது அங்கு ஒரு வெறித்தனம் பிறந்துவிடுகிறது.. அன்பே சிவம் என்று சொல்லும் இந்துக்கள்தான் சமணர்களைக் கழுவேற்றினார்கள்; சிறு புழு பூச்சிக்குக்கூட துன்பம் ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதும் சமணம் திருநாவுக்கரசரை கல்லில் கட்டிக் கடலில் எறிந்தார்கள். சகோதரத்துவம் பேசும் இஸ்லாமின் தீவிரவாதிகள் பாஹியான் புத்தர் சிலையைப் பெயர்த்தெறிந்தார்கள். பெளத்தர்கள் இலங்கையை ரத்தக் காடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலுவைப் போர்களும், யூத அரேபியரிடையான மோதல்களும் வரலாற்றில் பதிந்து கிடக்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைந்தது மதம் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற வேட்கை. பாஜக அது போன்ற ஒரு வேட்கையைக் கொண்டிருக்கிறது
இந்து என்ற ஒற்றை அடையாளத்தை அது வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்து மதத்தின் இன்னொரு அம்சமான ஜாதிப் பிரிவுகள், அந்தப் பிரிவுகளின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகள், இந்திய சமூகத்தில் வேரோடிக்கிடக்கிறது. அதன் நீட்சியாக இன்று அரசியலிலும் வாக்கு வங்கிகள் ஜாதி ரீதியாகப் பிரிந்து கிடக்கின்றன.
நீ இந்து என்று சுட்டிக்காட்ட[ப்படும் போது அதை உணர்ச்சி பூர்வமாக ஏற்கும் ஒருவன் அதை மறுத்து இல்லை நான் நாடார், நான் தலித், நான் பிராமணன் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.ஏனெனில் ஜாதிகள் என்பவை இந்து மதத்தின் உள்ளே அடங்கிய ஒன்று (sun-culture) என்பதையும் அவர்கள் நம்புகிறார்கள்.
ஒருவகையில் இது இந்தியன் என்ற (pan nationalist) அடையாளத்தின் உள்ளடங்கிய ஒரு அடையாளம் தமிழன் என காங்கிரஸ் வலியுறுத்துவதைப் போன்றது.
இந்து என்ற ஒற்றை அடையாளத்தைப் பயன்படுத்துவதன்.மூலம் அரசியல் ரீதியாகப் பலனடைந்திருப்பதால் அதை மேலும் பாஜக தீவீரப்படுத்துகிறது.
1984ல் பாஜக நாடாளுமன்றத்தில் இரண்டே இடங்களைப் பெற்றிருந்தது. ராமர் கோயில் பிரசினையை அது கையில் எடுத்துக் கொண்ட பிறகு 1998ல் ஆட்சியமைக்கும் அளவிற்கு வளர்ந்தது. அதே போல 2002ல் குஜராத்தில் கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடந்தேறிய வன்முறைகள் 2007ல் அது ஆட்சியில் தொடர உதவின.
இந்த அனுபவத்தின் காரணமாக மத உணர்வுகள் கூர்மையாக்கப்பட்ட ஒரு நிலையிலேயே (Charged) மக்களை வைத்திருக்க பாஜக முற்படுகிறது. இது இந்தியாவிற்கு நல்லதல்ல என நான் கருதுகிறேன். இந்தியாவின் பன்முகத் தன்மை சீர்கெடுமானால் இந்தியா சமூகம் அமைதி கெடும், வன்முறை கிளம்பும். குறிப்பாக கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு இவற்றில் ஒரு விரைந்து இந்தியா முன்னேற வேண்டிய ஒரு காலகட்டத்தில் இது போன்று நாட்டை உணர்ச்சி வெறியேற்றிப் பிளவு படுத்துவது என்பது பெருந்தீங்காக முடியும்.
பாஜக இன்னொரு ஏமாற்று வேலையிலும் முனைந்திருக்கிறது.அது இந்தத் தேர்தலில் முன்வைக்கும் தேர்தல் அறிக்கை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சி எடுப்பது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குவது என்பவற்றையும் பேசுகிறது. இவற்றையெல்லாம் பாஜகவின் தனி ஆட்சி அமைந்தால் மட்டுமே செய்ய இயலும்.அது பாஜகவிற்கும் தெரியும்.1998லும், 1999லும் அது ஆட்சியில் அமரும் முன்னர் இந்த மூன்றையும் பற்றிப் பேசியது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் இந்த விஷயங்களில் அதனால் ஏதும் செய்ய இயலவில்லை. அப்போது அது , இது எங்களது தனிப்பட்ட ஆட்சியல்ல, தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆட்சி, எனவே கூட்டணிக் கட்சிகளின் சம்மதம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என அது விளக்கமளித்தது. இந்தத் தேர்தலிலும் அதன் தலைவர்கள் பாஜக தனித்து ஆட்சிக்கு வராது, எங்கள் கூட்டணி வேண்டுமானால் ஆட்சி அமைக்கலாம் எனப் பேசி வருகிறார்கள். கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்றால் அவர்கள் இந்த மூன்று விஷயங்களையும் நிறைவேற்றுவார்கள்? முடியாது எனத் தெரிந்தும் அவர்கள் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் நான் முன் சொன்னது போல இந்து என்ற ஒற்றை அடையாளத்தை முன்நிறுத்தி, வாக்களர்களை ஒரு உணர்ச்சி பூர்வமான நிலையில் வைத்திருப்பதுதான்.
பாஜக முக்கியமான பிரசினை என இந்தத் தேர்தலில் முன்னிறுத்துவது 'பயங்கரவாதம்'. மும்பையில் நவம்பரில் நடந்த சம்பவங்களை அது சுட்டிக் காட்டி, காங்கிரஸ் அரசிடம் பயங்கரவாதத்தை அடக்க வலிமையான சட்டமோ, கொள்கைகளோ, திட்டமோ இல்லை என வாதிடுகிறது. ஆனால் பாஜக ஆட்சியில் இருந்த போது அதனிடம் இது குறித்து எந்த விதமான அணுகுமுறை இருந்தது. காந்தகாருக்கு விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தில், அன்று பாஜகவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் தீவீரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவித்து தன்னுடன் அழைத்துச் சென்று ஒப்படைக்கவில்லையா? நாடாளுமன்றத்தின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் பாஜக ஆட்சியில்தான் நடந்தது.
பயங்கரவாதத்தைக் கையாளும் விஷயத்தில் பாஜக காங்கிரஸ் இரண்டுமே இரட்டை வேஷம் போடுகின்றன என்பது என் கருத்து. நாடாளுமன்ற சம்பவத்தில் குற்றவாசியாக நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்ட அப்சல் குரு மீதான தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அது தொடர்பான கோப்பு தில்லியின் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீக்ஷீத் அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதச் செயல்களுக்குப் பணம் வரும் வாசல் எனக் கருதப்படும் பங்கேற்புப் பத்திரங்கள் (Participatory Notes) என்ற முறையை அறிமுகப்படுத்தியவர் ப.சிதம்பரம்.
இரண்டு கட்சிகளுமே பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் எது என அறிந்து கொள்ளவோ அதில் அவர்கள் இழைத்த தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளவோ தயாராக இல்லை. நாட்டின்/சமூகத்தின் பன்முகத் தன்மை அங்கீகரிக்க மறுக்கப்படும் போது தீவிரவாதம் பிறக்கிறது. அதை அதிகாரத்தை அடக்குமுறையைக் கொண்டு அடக்கிவிட முடியும் என நினைப்பது புரையோடிப் போன புண்ணை புனுகு பூசி குணப்படுத்த முனைவது போன்றது.
பாஜக அதிகாரம் பெறுவது என்பது காங்கிரஸ் அதிகாரம் பெறுவதற்கு மாற்றாக ஆகாது என்பது என் கருத்து. பன்முகத் தன்மையை மறுப்பதிலும் மற்ற பல பிரசினைகளைக் கையாளுவதிலும் இரண்டும் ஒரே பார்வையைக் கொண்டிருக்கின்றன, அணுகுமுறைகளில் மாற்றம் இருக்கலாம்.
கும்பகோணம் டிகிரி காபிக்கும், ப்ரூ இன்ஸ்டண்ட் காபிக்கும் சுவை வேறாக இருக்கலாம். ஆனால் இரண்டின் உள்ளடக்கமும் ஒன்றே. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
.
உங்கள் தர்க்கத்தில் ஒரு தவறு இருப்பதை எல்லோரும் காண்பார்கள்.
ReplyDeleteகும்பகோணம் டிக்ரி காஃபி நூறு சதவிகிதம் பீபெர்ரி காபிப்பொடி. அசல் காஃபி. ப்ரூ நகல்தான். 60 சதவிகிதம் மலிவுச் சரக்குக் காஃபி பொடியும் 40 சதவிகிதம் சிக்கரியும் கலந்தது. பா.ஜ.க. கும்பகோணம் டிக்ரி காஃபி என்பது அறிதலா?
ஓ! ஒரு கப் காபிக்குள் இத்தனை சமாசாரங்கள் இருக்கிறதா? அடியேன் அறியேன்
ReplyDeleteஅந்த உதாரணத்தைக் கை விடுகிறேன்.
பழைய உதாரணத்தையே வைத்துக் கொள்ளலாம்: இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
மாலன்
வழவழா கொழகொழா.
ReplyDeleteபாஜக பற்றி சொல்லப் பட்ட இந்த எல்லா ”வாதங்களுக்கும்” ஏற்கனவே பதில் தரப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.
பாஜகவும் சங்கபரிவாரமும் ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்று கூறுவது உண்மை தான். ஆனால் அது “ஒற்றைப் படை” சிந்தனை அல்ல. இந்துமதத்தின் பன்முகத்தன்மை அத்தனையும் ஏற்றுக் கொண்டு அதில் ஆன்மிக ரீதியாக ஒருமையையும், சமூக ரீதியாக ஒற்றுமையையும் காண விழையும் சித்தாந்தம் அது. “செப்பு மொழி பதினெட்டுடையாள் அதில் சிந்தனை *ஒன்றுடையாள்*” என்று பாரதி சொன்னது போல. சொல்லப் போனால் இன,மொழி, பிராந்திய வாதங்கள் அனைத்தையும் தவிர்த்த, நெகிழ்ச்சித் தன்மையுடன் கூட, ஜனநாயக அடிப்படையிலான, இந்திய கலாசாரத்தில், மரபில் வேரூன்றிய அரசியல் சித்தாந்தம் இது ஒன்று தான்.
பாஜக பயங்கரவாதத்தை ஒழிக்க என்ன செய்தது என்பது சொத்தையான கேள்வி.
காங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம் என்ற எனது பதிவில் (http://jataayu.blogspot.com/2009/03/blog-post.html) சொன்னதை இங்கு கூறவிரும்புகிறேன் -
”2004 முதல் 2008ன் இறுதி வரை இந்தக் கொடூரத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும், இவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளை வேட்டையாடித் தண்டிக்கவும் ஒரு உருப்படியான நடவடிக்கையைக் கூட, சிறிதளவும் உங்கள் அரசு எடுக்கவில்லை. 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு தான் உலுக்கினாற்போல விழித்துக் கொண்டு அடிப்படையான பாதுகாப்பு உள்கட்டமைப்பு விஷயங்களைப் பற்றி யோசிக்கவே ஆரம்பிக்கிறது அரசு. எத்தகைய கிரிமினல்தனமான மெத்தனம்!
ஆனால் இந்தத் தேர்தல் பிரசாரத்தில், தீவிரவாத்தைப் பற்றி எழும் ஒவ்வொரு விவாத்த்திலும், இதற்கு முன்பு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாராளுமன்ற தாக்குதல் நடக்கவில்லையா? கண்டஹார் விமானக் கடத்தல் நடக்கவில்லையா என்பதையே மொண்ணைத் தனமாகக் கேட்கிறீர்களே, இதற்கு என்ன பொருள்? அப்போது சில இந்தியர்கள் மாண்டார்களே, இப்போது அதைப் போல 10 மடங்கு இந்தியர்கள் தான் மடிந்திருக்கிறார்கள்..நீங்களூம் கொஞ்சம் செத்துப் போனால் தான் என்னவாம் என்று மக்களைக் கேட்கிறீர்களா? அதுவும், பாராளுமன்றத் தாக்குதலுக்காக மரண தண்டனை விதிக்கப் பட்ட அப்சலின் தண்டனையை நிறைவேற்றக் கூட வக்கில்லாத ஒரு அரசின் சார்பாக? ஆஸ்திரேலியாவில் தீவிரவாதத் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்ட முகமது ஹனீஃபின் குடும்பத்தினரை டிவியில் பார்த்து “அன்று இரவு முழுக்க எனக்குத் தூக்கம் வரவில்லை” என்று தழுதழுத்த குரலில் உருக்கமாக சொன்னீர்கள். ஆனால் இந்தத் தீவிரவாத்த் தாக்குதல்களில் தங்கள் துணையை, குழந்தைகளை, சுற்றத்தாரை, நண்பர்களை இழந்த இந்தியக் குடிமக்களான தாயருக்கும், தந்தையருக்கும், மக்களுக்கும் அதே போன்று அழுத்தமாக ஆறுதல் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? உங்களுக்கே வெளிச்சம். ஆனால் இதெல்லாம் இந்த்த் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு மறந்து விடவில்லை என்பது நினைவிருக்கட்டும்.”