Monday, January 12, 2009

திருமங்கலம் தரும் செய்தி

திருமங்கலம் தேர்தல் முடிவுகள் டில்லிப் பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஆசிரியர்களில் ஒருவரான அதிதி படோனிஸ், எப்படி, எப்படி என்று தொலைபேசியில் வியப்புக் கொப்பளிக்கக் கேட்டதையும், வேறு சிலர் இதை நாங்கள் எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்டதையும் வைத்துப் பார்க்கும் போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் நாட்டிலும் சிலருக்கு ஆச்சரியங்கள் இருக்கலாம். .

எனக்கு ஆச்சரியங்கள் இல்லை. ஆனால் இந்த முடிவை நான் எதிர்பார்த்திருந்தேன் எனவும் சொல்ல முடியாது. I was keeping my fingers crossed.

எதிர்பார்த்ததைப் போல இது தனது அரசின் சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றி என்று கருணாநிதியும், பணநாயகம் ஜனநாயகத்தைத் தோற்கடித்துவிட்டது என்று ஜெயலலிதாவும் அவரது கூட்டணிக் கட்சியினரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

பணம் கொடுத்தார்கள், மிரட்டினார்கள் அதனால் ஆளும் கட்சிக்கு வாக்களித்துவிட்டார்கள் எனச் சொல்வது மக்களை அவமானப்படுத்துவது மட்டுமல்ல அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும். வாக்கு வித்தியாசத்தைக் கவனிக்கும் போது (40 ஆயிரத்திற்கு சற்றுக் குறைவு) இது வெறும் பணத்தால் மட்டும் ஈட்டப்பட்ட வெற்றி அல்ல எனத் தோன்றுகிறது.

வாக்குச் சாவடிகளில் அதிகாரிகளாக மத்திய அரசின் ஊழியர்கள், வீடியோ பதிவு, துணை ராணுவப் படை, மூன்றடுக்குப் பாதுகாப்பு, நுண் தேர்தல் பார்வையாளர்கள், அன்னியர்கள் வெளியேற்றம், ஊருக்கு வரும் பாதைகள் சீலிடப்பட்டது, நரேஷ் குப்தாவின் அதிரடி விஜயம், ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு இவையெல்லாம் தேர்தல் பெருமளவிற்கு- சென்னையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் போல் இல்லாமல்- நடுநிலையோடு நடந்திருக்கிறது என்றுதான் எண்ண வைக்கிறது.

திமுக இந்த இடைத் தேர்தல் அறிவிப்பை உற்சாகமாகவோ, நம்பிக்கையோடோ வரவேற்கவில்லை. வேண்டாத விருந்தாளியாகத்தான் கருதியது. மாநிலத் தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆனையம் எல்லாவற்றையும் கருணாநிதி நேரிடையாகவோ மறைமுகமாகவோ சாடிக் கொண்டிருந்தார்.

அவரது கூட்டணியும் விரிசல் கண்டிருந்தது. இடதுசாரிகள் எதிரணிக்குப் போய்விட்டிருந்தார்கள்.பாமக நடுநிலை என்று சொல்லி ஒதுங்கியது. விடுதலைச் சிறுத்தைகள் பிணக்குக் கொண்டு ஒதுங்கி நிற்பதாகச் செய்திகள் சொல்லின (திருமாவளவன் அதை மறுத்தாலும் அவர் பிரசாரத்திற்குப் போகவில்லை) காங்கிரஸ் மட்டுமே கூட்டணியில் மிஞ்சி நின்றது. ஆனால் இலங்கைத் தமிழர் பிரசினையில் அது மேற்கொண்ட நிலை காரணமாக அது மதிப்பிழந்து விட்டதாகவும், அது ஒரு சுமை (liability என்றும் ஒரு கருத்து உலவியது. லதா, ஸ்டாலின் குழுவின் வேட்பாளர் எனவும், அதனால் அழகிரிக்கு அதிருப்தி எனவும் செய்திகள் வந்தன

மின்வெட்டு, விலைவாசி, உரத் தட்டுப்பாடு என பல பிரசினைகள் ஆளுங்கட்சிக்கு எதிராக இருந்தன.

ஆனால் இதற்கப்புறமும் திமுக வென்றிருக்கிறது. அதுவும் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்! எப்படி?

ஒரு ரூபாய் அரிசி, 'இலவச' நிலம், அரசின் பல இலவசங்கள் மக்களிடம் அரசுக்கு நல்ல பெயரை வாங்கி இருக்கலாம்.( இதில் ஒரு கவனிக்க வேண்டிய அம்சம், திருமங்கலத்தில் இன்னும் கலர் டிவி விநியோகம் நடக்கவில்லை. நேற்றுவரை அது எதிர்கட்சி எம்.எல்.ஏ தொகுதி)

அண்மையில் தில்லியிலும், மத்திய பிரதேசத்திலும் அதற்கு முன்பு குஜராத்திலும் நடந்தது போல நல்லாட்சி என்பது anti incumbency யை அர்த்தமிழக்கச் செய்து விடுகிறது என்பது மறுபடியும் திருமங்கலத்தில் மெய்ப்பிக்கப்பட்டு இருக்கலாம்.

இதெல்லாம் இருக்கலாம்தான்.

ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது.

ஊடகங்களுக்கும் அடித்தள மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாகி இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கும் வெகுஜனங்களுக்குமிடையே ஆன இடைவெளி போல.

ஊடகங்களும் மெய்யான பிரசினைகளை (real issue) விட்டுவிட்டு அவர்கள் எதை முக்கியம் எனக் கருதுகிறார்களோ அதைப் பேசுகிறார்கள் எனத் தோன்றுகிறது.

ஆம் அப்படித்தானென்றால் இது கவலைக்குரிய விஷயம்.

6 comments:

  1. Can DMK's Thirumangalam win be compared against 2005 ADMK's Kancheepuram and Gummudipoondi byelections victory?

    ReplyDelete
  2. 1,53000 வாக்காளர்களில் 1,38000 பேர் வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போதே என்ன நடந்திருக்கிறது என்பதை ஒரு பாமரனும் புரிந்து கொள்ள முடியும்.

    "நல்லாட்சி என்பது anti incumbency யை அர்த்தமிழக்கச் செய்து விடுகிறது என்பது மறுபடியும் திருமங்கலத்தில் மெய்ப்பிக்கப்பட்டு இருக்கலாம்."
    திருமங்கலத்தில் நிரூபிக்கப்பட்டிருப்பது அழகிரியின் பிடி மதுரையில் எவ்வளவுக்கு இருக்கிறது என்பதையே மறுபடியும் காட்டியிருக்கிறது.

    ReplyDelete
  3. மக்கள் யதார்த்தமானவர்கள். இன்னும் 3ஆண்டுகள் ஆட்சியில் இருக்கப் போகிற கட்சிக்கு வாக்களிப்பார்களா அல்லது சட்டசபை வெளிநடப்பை மட்டுமே கடமையாய் செய்து வரும் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பார்களா? யாரால் தொகுதிக்கு, மக்களுக்கு லாபம்?

    ReplyDelete
  4. >>Can DMK's Thirumangalam win be compared against 2005 ADMK's Kancheepuram and Gummudipoondi byelections victory<<

    Bala, the manner of electoneering has similarities as can be seen from Vaiko's allegations (appeared in The Hindu dated April 28 2005).For that matter most of the election campaigns during bye elections are similiar, more so with the behaviour of the ruling party.
    Vaiko alleges election code violation in Kancheepuram

    MAYILADUTURAI: The Marumalarchi Dravida Munnetra Kazhagam leader, Vaiko, has alleged that with several Ministers camping in Kancheepuram, the police were acting as an organ of the ruling party and foisting false cases on Dravida Munnetra Kazhagam functionaries.

    Talking to The Hindu here on Wednesday, Mr. Vaiko said that despite the strictures given by a Madras High Court judge regarding the attitude and behaviour of the Ministers in the Chennai Corporation ward by-elections, the ruling party had not learnt any lesson and the Ministers were "continuing to violate the model code."

    The Assembly by-elections in Kancheepuram and Gummidipoondi would once again demonstrate the abuse of official machinery, role of muscle and money power and the ruling party would go to any extent to snatch a victory. " We have set the ball in motion, organising a meeting of MDMK workers in Kancheepuram and I could see a spontaneous emotional spirit of our party cadres dedicating themselves for the victory of the DMK candidate," he said.

    Mr. Vaiko recalled the Mayiladuturai Assembly by-election campaign carried out by him and Ko.Si. Mani in May 1984 to fight the abuse of power by the ruling party for which `a false case was foisted' against them. He said that after 19 years the case was given a fresh life when he was a POTA detenu in Vellore jail. He pointed out that the DMK won the Mayiladuturai by-election. Similarly, the DMK would win both the Kancheepuram and Gummidipoondi seats .

    ps:Vaiko was with DMK alliance at that time

    ReplyDelete
  5. இடைத்தேர்தல் என்பது பெரும்பாலும் ஆளும்கட்சிக்கே சாதகமான தீர்ப்பாகப் போகிறது, இல்லையா?

    ReplyDelete
  6. என்ன சொல்கிறீர்கள் மாலன்? திமுகவின் நல்லாட்சியை பார்த்து மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றா?.89 சதவீத வாக்கு பதிவே சொல்கிறதே மக்கள் எதற்கோ கட்டுபட்டு இருந்திருக்கிறார்கள் என்று. அது பணம் தான். அதை சொல்வது மக்களை அவமானப் படுத்துவதாக இருககாது. அது தான் உண்மை நிலை. என்ன தான் நல்லாட்சி புரிந்தாலும் தங்கள் கட்சிக்கு எதிராக எந்த தொண்டனும் சீக்கிறம் மாற மாட்டான். அவனுக்கு தனி பட்ட ஆதாயம் பெரிய அளவில் கிடைக்காத வரையில். அப்ப்டி அவனுக்கு ஆதாயம் கிடைத்த்தால் தான் மாற்றி வாக்களித்திருக்கிறார்கள். சிறிய கூட்டணியை வைத்தே அன்று மதிமுக வென்றது. ஆனால் இப்போது அவர்களிடன் கூட்டணி பலம் இருக்கிறது. அன்றைக்கு எதிராக இருந்த கம்யூனிஸ்ட்கள் இன்று அவர்களுக்கு ஆதரவு. பாமகவின் மறைமுக ஆதரவும் உண்டு.

    திமுகவின் ஆட்சியை பார்த்து வாக்களித்திருந்தால் நிச்சயம் திமுக தோற்றிருக்கும். இன்றுவரையில் கிராமப் புறங்களில் முழுதாக மின்வெட்டு சீரடையவில்லை. மேலும் திருமங்கலம் மதிமுக வசம் இருந்ததால் இலவச நிலம் மற்றும் டிவி சரியாக விநியோகிக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது.

    ஆகவே திமுகவின் வெற்றி முழுக்க முழுக்க பண பலத்தினால் தான்.

    ReplyDelete

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறையையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கில்லை. பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும்.நீக்கப்பட்ட விவரம் பின்னூட்டத்தில் குறிப்பிடப்படும்