வசவாளர்களுக்கு நன்றி.
கடந்த பதிவில் நான் என் கருத்தாக எஅதையும் எழுதியிருக்கவில்லை.(பின்னூட்ட templateஆக எழுதப்பட்டிருந்த 'மொக்கை'யைத் தவிர.) நான் செய்திருந்ததெல்லாம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருந்த செய்தியை மொழி பெயர்த்திருந்தது மட்டுமே. அதை சரிபார்த்துக்கொள்ள உதவியாக செய்தியின் மூலத்தின் URLஐயும் வெளியிட்டிருந்தேன்.செய்தியின் புகைப்படத்தையும் பிரசுரித்திருந்தேன்.
அப்படியிருந்தும் அநேகமாக அத்தனை கணைகளும் என்னை நோக்கி எய்யப்பட்டிருக்கின்றன. செய்தி பொய்யானது என்றோ, மிகையானது என்றோ, கருதுகிறவர்கள் அதை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியாவை நோக்கி அல்லவா தங்களது சினத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மொழிபெயர்த்தவனைத் தாக்க முற்படுவதேன்?
ஒருவேளை இந்தச் செய்தியே கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கக் கூடாது எனக் கருதுகிறார்களோ? . டைம்ஸ் ஆப் இந்தியா இந்தியாவில், விற்பனையில், ஆங்கில தினசரிகளில் முதலிடத்தில் இருக்கும் நாளிதழ்,(7.9 மில்லியன் பிரதிகள்) உலகில் உள்ள பெரிய தினசரிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய இதழ் (24 வது இடம்) கருத்துலகில், கொள்கை வகுப்பவர்களிடத்தில், படித்த நகர்ப்புற மத்திய தர வர்க்கத்திடையே (குறிப்பாக வட இந்தியாவில்) தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை கொண்ட இதழ். என்றாலும் இந்தப் பத்திரிகை தமிழ்நாட்டில் அதிகம் படிக்கப்படுவதில்லை. இந்தச் செய்தி தமிழ்ப் பதிவர்களில் பலருக்குக் கவலையும், சிலருக்கு சிந்தனையையும் தரக்கூடும், எனவே அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என நான் கருதி மொழி பெயர்த்து வெளியிட்டேன். அதற்கு இத்தனை மொத்தா?
யாரும் பத்திரிகைகளில் படிக்கும் எந்த செய்தியையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை.(ஏற்றுக் கொள்ளவும் கூடாது என்பது என் கருத்து) அதை அவரவர்களிடம் இருக்கும் முன் கூட்டிய தீர்மானங்களோடுதான் அணுகுகிறார்கள். இந்தச் செய்தியையே எத்தனை விதமான கோணத்தில் அணுகலாம் எனச் சூசகமாகக் கோடி காட்ட இடப்பட்டதுதான் அந்த 'மொக்கை'ப் பின்னூட்ட டெம்பிளேட்.
இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்று ஒரு கருத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுகள் அதை மெய்ப்பித்து வருகின்றன. அங்கு காந்தியை அடி முட்டாள் என்று எழுதலாம். இங்கிருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதால்தான் அண்ணா(துரை) திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார் என்னும் பொருள்பட (மூலநூலைக் குறிப்பிடாமல்) மேற்கோளிடலாம். பாரதியை, வள்ளலாரை, இன்றுள்ள அரசியல் தலைவர்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். திருக்குறளை மலத்தோடு ஒப்பிடும் மேற்கோளைப் பதிவு செய்யலாம்.எவரையும் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டலாம். பெண்களை மலினப்படுத்தும் பாலுறவுச் சொற்களை இறைக்கலாம். என் தாயைப் புணருவேன் என்று சொன்னது கூட எனக்கு வருத்தமில்லை, ஆனால் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டிவிட்டானே என்று அங்கலாய்க்கலாம். விவாதத்திற்கே சம்பந்தம் இல்லாமல், ஒரு பத்திரிகையாசிரியரின் மகளைப் பற்றி விமர்சிக்கலாம். வதந்தியின் அடிப்படையில் ஊகத்தின் பேரில் இன்னார் இந்தப் பட்டறையில் கலந்து கொள்கிறார் எனத் தனிமனிதத் தாக்குதல் நடத்தலாம். பெண்பதிவர்கள் படத்தைப் பார்த்து இரட்டை அர்த்தத்தில் பின்னூட்டம் போடலாம். ஆனால்-
ஒரு பிரபலமான நாளிதழில் வந்த செய்தியை, கருத்துக் கலக்காமல், ஆதாரத்துடன் மொழி பெயர்த்துப் போடக்கூடாது. ஏனெனில் அந்தச் செய்தி விடுதலைப் புலிகளைப் பற்றியது!
வாழ்க பதிவுலகின் கட்டற்ற சுதந்திரம்!
/அப்படியிருந்தும் அநேகமாக அத்தனை கணைகளும் என்னை நோக்கி எய்யப்பட்டிருக்கின்றன. செய்தி பொய்யானது என்றோ, மிகையானது என்றோ, கருதுகிறவர்கள் அதை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியாவை நோக்கி அல்லவா தங்களது சினத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மொழிபெயர்த்தவனைத் தாக்க முற்படுவதேன்?/
ReplyDeleteHundreds of articles are being written every day. It is the question of selection, Malan, selection.
//இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்று ஒரு கருத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாகத் தமிழ் வலைப்பதிவுகள் அதை மெய்ப்பித்து வருகின்றன. அங்கு காந்தியை அடி முட்டாள் என்று எழுதலாம். இங்கிருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதால்தான் அண்ணா(துரை) திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார் என்னும் பொருள்பட (மூலநூலைக் குறிப்பிடாமல்) மேற்கோளிடலாம். பாரதியை, வள்ளலாரை, இன்றுள்ள அரசியல் தலைவர்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். திருக்குறளை மலத்தோடு ஒப்பிடும் மேற்கோளைப் பதிவு செய்யலாம்.எவரையும் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டலாம். பெண்களை மலினப்படுத்தும் பாலுறவுச் சொற்களை இறைக்கலாம். என் தாயைப் புணருவேன் என்று சொன்னது கூட எனக்கு வருத்தமில்லை, ஆனால் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டிவிட்டானே என்று அங்கலாய்க்கலாம். விவாதத்திற்கே சம்பந்தம் இல்லாமல், ஒரு பத்திரிகையாசிரியரின் மகளைப் பற்றி விமர்சிக்கலாம். வதந்தியின் அடிப்படையில் ஊகத்தின் பேரில் இன்னார் இந்தப் பட்டறையில் கலந்து கொள்கிறார் எனத் தனிமனிதத் தாக்குதல் நடத்தலாம். பெண்பதிவர்கள் படத்தைப் பார்த்து இரட்டை அர்த்தத்தில் பின்னூட்டம் போடலாம். ஆனால்-
ReplyDeleteஒரு பிரபலமான நாளிதழில் வந்த செய்தியை, கருத்துக் கலக்காமல், ஆதாரத்துடன் மொழி பெயர்த்துப் போடக்கூடாது. ஏனெனில் அந்தச் செய்தி விடுதலைப் புலிகளைப் பற்றியது!
வாழ்க பதிவுலகின் கட்டற்ற சுதந்திரம்!//
மாலன் ஸார்.. இங்கே எழுதுபவர்களில் அநேகம் பேர் இளைஞர்கள். இளைஞர்களுக்கு எது பிடிக்கும் துப்பாக்கிதானே.. எதிரி என்று நினைத்து ஒருவனை வீழ்த்தி வெற்றி முழக்கத்தோடு நாலாபுறமும் ஒரு பார்வை பார்த்தால்தான் அவன் ஹீரோ என்கிற சினிமாத்தனமான சிந்தனைகளில் நமது இளைஞர்கள் தங்களது முகத்தை மூடிக் கொண்டுவிட்டார்கள். இப்போது இவர்களது ஹீரோ வன்முறைதான்..
எந்த ரூபத்தில் துப்பாக்கி வெடித்தாலும் அது வன்முறைதான். இது அவரவர்கள் மீது பாயும்போதுதான் தெரியும். அதுவரையிலும் புரியவே புரியாது.. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக அதிகம் பேர் வலையுலகில் இருப்பது இப்படித்தான்.
கட்டற்ற சுதந்திரத்தின் விளைவுகளை நீங்களே எழுதிவிட்டீர்கள். உண்மைதான்.. ஆனாலும் உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு இந்த விளையாட்டு மைதானம் ஏற்றதல்ல என்பது எனது கருத்து.
பேசியோ எழுதியோ புரிய வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது வீண் வேலை.. விட்டுவிடுங்கள்..
மாலன்,
ReplyDeleteமுந்தையப்பதிவில் உடன்பாடோ இல்லையோ அது உங்கள் கருத்து சுதந்திரம் , மேலும் பார்ப்பதற்கு எல்லாம் எதிர் வினை கருத்து என்று இழுத்து போவதா என நான் பின்னூட்டமிடவில்லை. ஆனால் உங்களுக்கு என்று இல்லை அனைவருக்கும் கட்டற்ற சுதந்திரம் உண்டு. நீங்கள் எழுதுங்கள். அதே போல இப்படி மொத்துவதும அவர்கள் சுதந்திரம் என விட்டு விடுங்களேன்!
நீங்கள் இங்கே குறிப்பிட்ட பலவற்றையும் பார்க்கும் போது வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என தெரிகிறது. மகிழ்ச்சி!
இங்கே மொக்கை, கும்மி , ஆபாசம் , சாதியம் , கடவுள் மறுப்பு , தனி நபர் தாக்குதல் , குழு சேர்த்தல் அனைத்தும் இருக்கும், முரண்பாடுகளின் மூட்டையாக இருந்தாலும் , தொடர்ந்து இயங்கும் ஒரு தனித்துவமான வேற்றுமையில் ஒற்றுமை (என்ன ஒரு முரண்பாட்டு தத்துவம்!) காணும் கட்டற்ற சுதந்திரம் கொண்டவர்களின் வசிப்பிடம் என்பதை புரிந்து கொண்டால் , எல்லாருக்கும் இங்கே இடம் இருக்கிறது என்பதும் விளங்கும்!
மப்படிச்சுட்டு மைக் புடிச்சு பேசி பொட்காஸ்ட் கூட பண்ணலாம்! - இத விட்டுட்டீங்க மாலன்!
ReplyDeleteசரி லூஸ்ல விடுங்க. அது சரி தாய்லாந்து விசயத்தில நடந்த குளருபடி நாழே நாட்களில் புஷ்வனமானது. அதுபோலத்தான் இதுவும்னு நாங்க நெனைக்கிறோம். ஆனாலும் நீங்க மெள்றதுக்கு புலிமார்க் சூயிங்கம் தான் பிடிக்கும்னு அடம்பிடிக்கறீங்க பாத்தீங்களா.. அது தான் சுதந்திரம்.. சாரி தந்திரம்!
புலி வாலைப் பிடித்த நாயர் என்று ஒரு சொலவடை சொல்வார்களே, அது போல இருக்கிறது. நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்.
ReplyDeleteலக்கிலுக் சொன்ன மாதிரி, இது டைம்ஸ் பத்திரிகையின் கற்பனை என்று உங்கள் கருத்தைப் பதியவில்லை என்பதே பெரும்பாலானோரின் கோபமாக இருக்க வேண்டும்.
அனுபவம் என்பது சீப்பு ; தலை வழுக்கையான பிறகே அது கிடைக்கும
ReplyDeleteஎன்பார் கவியரசர் கண்ணதாசன்.
வலைப் பதிவில் 81% இளைஞர்கள்.
மற்றவர்களின் கருத்தை அல்லது சொல்ல வருவதை- atleast - கேட்கும் பக்குவம் கூட பலருக்கு இல்லை
அதுதான் வலைப் பதிவுகளின் சாபக்கேடு.
நதி எப்போதும் புறப்படும் இடத்தில் வேகமாகத்தான் இருக்கும். டெல்டா
பகுதியை அடைந்த பிறகுதான் அதன் வேகம் தனியும்
ஆகவே தூற்றதல்களையும் - போற்றுதல்களையும் சமமாகப் பாவியுங்கள் நண்பரே - எல்லாம் சரியாகிவிடும்!
மாலன்,இப்பதிவின் கருத்து சுதந்திரம் பற்றிய உங்கள் கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியவையே.
ReplyDeleteஈழத்தில் நடக்கின்ற ஒரு இனத்தின் மீதான அரசே முன்னின்று நடத்தும் தாக்குதல் எந்த அளவிற்கு கண்டனம் செய்யப் பட வேண்டுமோ,அதே அளவிற்கு,ஈழத்தில் சூழ்நிலை மாறிவிடக் கூடாது என்ற வகையில் நடக்கும்,நடத்தப்படும் காரியங்களும் கண்டுக்கப்பட வேண்டியவை,நடத்துபவர் எவராக இருப்பினும் !
//அடிப்படையில் வாசகன்; அறியப்பட்ட பத்திரிகையாளன்; அதிகம் எழுதாத எழுத்தாளன்; என்றாலும் நினைக்கப்படுபவன்//
ReplyDeleteஅன்புள்ள மாலன்,
உங்களைப் பற்றி எழுதியுள்ளவற்றை கடந்த இடுகையில் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். ஒரு வாசகனாக செய்தியை வாசித்து, ஒரு பத்திரிகையாளனாக, ஆங்கிலம் தெரியாத வாசகர்களுக்காக, ஒரு செய்தியை உள்ளtதை உள்ளபடியே தமிழ் வடிவில் கொடுத்திருக்கிறீர்கள். கூடவே அதிகம் எழுதாத எழுத்தாளனாக கற்பனை வளமிக்க டெம்பெளேட் கவிதை எழுதியிருக்கிறீர்கள். ஏன் ஃ ஐ விட்டுவிட்டீர்கள். அந்த விடுபட்ட டெம்ப்ளேட் பின்னூட்டத்தை தான் எழுதலாம் என்றிருந்தேன். இப்படி ஏமாற்றிவிட்டீர்களே. :-(
எல்லாவற்றையும் விட அப்பதிவுக்கு நான் உங்களை பாராட்ட விரும்புவது உங்களிடமிருந்து புதிதாக வெளிப்பட்டுள்ள நகைச்சுவை. எப்போதும் சீரியசாக எழுதும் இலக்கியவாதிகள் இரண்டு பேரையும் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறீர்களே, அதுதான் அவ்விடுகையின் வெற்றியே :-)).
இனி உங்களைப் பற்றிய விவரத்தில் 'அதிகம் எழுதாத எழுத்தாளன்;" என்பதை உங்கள் புதிய விருப்பமான "அதிகம் எழுதாத நகைச்சுவை எழுத்தாளன்;" என்று மாற்றிக்கொள்ளலாம். :-))
சரி வசவர்களுக்கு ஒரு பதிவு. இனி கேட்கப்பட்டிருந்த நியாயமான கேள்விகளுக்குத் தனியாக ஒரு இடுகையை எழுத இருக்கிறீர்களா?
ReplyDeleteவலைப்பதிவுகளில் "பர்சனல் டச்" இருக்கவேண்டும் என்று உபதேசித்த ஒரு பத்திரிகையாளர், கத்துக்குட்டியைப் போல எதையோ வெட்டி ஒட்டிப் போட்டுவிட்டு இப்படி சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டிருப்பதைக் காணப் பரிதாபமாக இருக்கிறது. அல்லது உண்மையிலேயே இதில் உங்களது 'பர்சனல்' ஆசை ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
சரி, டைம்ஸ் ஆப் இந்தியா, முன்னணி ப்ளா ப்ளாவைத் தூக்கி நிறுத்த, சிந்தனையைத் தூண்டும் வண்ணம் வரும் அவர்களது செய்திகளைத் தமிழர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவேண்டியது சரிதான். ஆனால் எந்தச் செய்தியை என்ற தேர்வில் ஏதோ ஒன்று துருத்திக் கொண்டு தெரிகிறதே, அதுதான் இங்கு பிரச்சினை.
மற்றபடி அந்தப் பத்திரிகையாளர் மகளை எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படித் தூக்கிக்கொண்டே திரியப் போகிறீர்கள்? இறக்கி விட்டுவிடுங்கள் :))
//டைம்ஸ் ஆப் இந்தியா இந்தியாவில், விற்பனையில், ஆங்கில தினசரிகளில் முதலிடத்தில் இருக்கும் நாளிதழ்,(7.9 மில்லியன் பிரதிகள்) உலகில் உள்ள பெரிய தினசரிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய இதழ் (24 வது இடம்) கருத்துலகில், கொள்கை வகுப்பவர்களிடத்தில், படித்த நகர்ப்புற மத்திய தர வர்க்கத்திடையே (குறிப்பாக வட இந்தியாவில்) தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை கொண்ட இதழ். //
ReplyDeleteஅதென்னவோ உண்மைதான். ஆனா, அதிகமா விற்பனையாவதாலேயே அது சிறந்த தினசரி என்றும், அதில் வருவன யாவும் உண்மை என்றும் அர்த்தமல்ல.
கடந்த பதிவு உங்கள் கருத்து சுதந்திரம்! ஆனால், "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிக்கைக்கு நீங்கள் இந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்பது தான் எனது ஆதங்கம்!
ReplyDeleteபெங்களூர் பதிப்பை மூன்று வருடங்களுக்கும் மேலாக வாசிப்பவன் என்பதால், எனது கருத்தை இங்கு பதிய விரும்புகிறேன்.
பெங்களூரில் ஆங்கில நாளிதழ்களில் இது நம்பர் 1 தான்... மாற்று கருத்தில்லை. ஆனால், அது "பெங்களூர் டைம்ஸ்" எனப்படும் இணைப்புக்காகத்தான் என்பது இங்கு ஊரறிந்த ரகசியம்.
மேலும் பெங்களூரைப் பொருத்த வரை கன்னடம் தெரியாத மக்கள் தொகை கொஞ்சம் அதிகம் என்பதால், பெங்களூர் செய்திகளான எந்த கட்டிடத்தை BMP இடிக்கப் போகிறது. எந்த சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளார்கள் போன்ற தினச் செய்திகளை மற்ற ஆங்கில நாளிதழ்களைக் காட்டிலும் இப்பத்திரிக்கை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறது. அதனாலும் இதன் விற்பனை அதிகம்.
பெங்களூரில் ஒரு கன்னட நாளிதழால் தமிழர்களுக்கெதிராக எவ்வளவு எழுத முடியுமா அதை விட ஒரு படி மேலேயே இந்த ஆங்கில நாளிதழ் அவர்களின் உணர்வுகளைத் தூண்டி காசு பார்க்கிறது. எப்பொழுதெல்லாம் தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட முடியுமோ அப்பொழுதெல்லாம் வெளியிட்டு சந்தோசப்பட்டுக் கொள்வார்கள். தமிழ்நாட்டுக் கலாசாரத்தை "தமிழ் தலிபானிஸம்" என்று வருணித்ததும் உண்டு.
அவர்கள் அடிக்கடி வெளியிடும் இந்திய மெட்ரோ நகரங்களில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் சர்வேக்களில் கூட வெகு அரிதாகத் தான் "சென்னை"யை பார்க்கமுடியும். ஏனெனில் சென்னையில் அவர்கள் கல்லா நிறையவில்லை.
புணைவுச் செய்திகள் எழுதுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். சமீபத்திய இங்கிலாந்து விமான நிலைய தகர்ப்பு முயற்சியில் பயங்கர தீவிரவாதியாக, பெரிய சூத்திரதாரியாக, பக்கம் பக்கமாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் சித்தரிக்கப்பட்ட டாக்டர் அனீஃப், அடுத்த 15 நாளில் அதே பத்திரிக்கையில் Hero Status அடைந்தார். இதுபோல எந்த ஒரு அடிப்படையும் இல்லாமால் தப்பாக வெளியிடப்பட்ட செய்திகளை, பின்னாட்களில் அவர்களே மாற்றி வெளியிட்டாலும் அதற்கு தனது பழைய செய்தியின் மேற்கோளையோ, அதற்கான விளக்கமோ, வருத்தமோ எந்நாளும் வந்ததில்லை.
"டைம்ஸ் ஆஃப் இந்தியாவி"ன் முரண்பாட்டிற்கு அதிகம் சிரமப்பட வேண்டாம், ஒரு மாத நாளிதழை பழைய பேப்பர் கடையில் போடாமலே இருந்ததால் போதும் ஆதாரம் சிக்கி விடும். இது போல ஒவ்வொரு நாளும் படித்து நண்பர்களுடன் பேசிய நாட்கள் தான் அதிகம்.
விசயம் இப்படியிருக்க தாங்கள் அப்பத்திரிக்கைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்பதே என் ஆதங்கம்! இதனால என்னால் என்னைத் தடுக்க முடியவில்லை பின்னூட்டம் இடுவதிலிருந்து!
உங்களது கடந்த இடுகையைப் போய்ப் பார்த்தேன். 27 பின்னூட்டங்கள் வந்துள்ளன. அவற்றுள் 4 அல்லது 5ஐ மட்டுமே வசவு என்ற வட்டத்துக்குள் கொண்டுவரலாம். அவையும் உங்களது எழுத்துக்களின் தென்படும் கனிவுடன் ஒப்பிடுகையில் வேண்டுமானால் வசவு என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வேறுபல பதிவுகளின் பின்னூட்டங்களில் வைக்கப் படும் வசை அடிப்படையில் பார்க்கப் போனால் இந்த வசை ஒன்றுமேயில்லை. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் கொடுத்த டெம்ப்ளேட்டுகளைக் கூட அவை விஞ்சி நிற்கவில்லை. உண்மை இப்படியிருக்க, மொத்தமாக எல்லாப் பின்னூட்டங்களையும் வசவுகள் என்று நிராகரித்து, பதிலளிக்காமல், உங்கள் மீது அனுதாபப் படவைக்கிறீர்கள். அதனால்தானோ என்னவோ அந்த இடுகையைக் கூட இங்கு இணைப்புத் தரவில்லையோ?
ReplyDeleteசந்தடிசாக்கில் இன்னொரு பொய்யையும் சொல்லி இருக்கிறீர்கள். விடுதலைப் புலிகளைப் பற்றிய எந்த எதிர்மறைச் செய்தியையும் பதிவுகளில் ஆதாரத்துடன் கூட வெளியிட முடியாது என்று. முதலில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த உடனே அது எப்படி ஆதாரமாகி விட்டது என்று கேட்கலாம், விட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் பற்றி ஆதரவாகவும், விமர்சித்தும், எதிர்மறையாகவும் எத்தனையோ பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இரண்டு பக்கமும் மிகைப் படுத்தப் பட்ட எழுத்துக்களை யாருமே பொருட் படுத்துவதில்லை என்பது தான் உண்மை. ஓரளவுக்காவது உண்மையிருந்து, வெற்றுக் கூச்சல் (புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ) இல்லாமல் எழுதப்படும் எழுத்துக்களை படிக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமாக இரயாகரன், மயூரன் போன்றவர்கள் எழுதும் விமர்சனங்களைப் பெரும்பாலானவர்கள் படிக்கத்தான் செய்கிறார்கள்.
பெரும்பாலான பொருள்களில் ஓரளவுக்கு ஆதாரங்களின் அடிப்படையில் சிந்தனையைத் தூண்டும் விதமாகத்தான் நீங்களும் எழுதிவந்திருக்கிறீர்கள். அந்த எதிர்பார்ப்பில்தான் நீங்கள் இப்படி முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்வது பலருக்கும் வியப்பை அளிக்கிறது. பெயரிலியின் மேலுள்ள அளவிலாத கோபமோ, அல்லது என்.இராம் மேலுள்ள அளவிலாத காதலினாலோ, தத்துபித்து என்று நடந்து கொள்வது வியப்பாக இருக்கிறது.
இப்பொழுது விடுதலைப் புலிகள் பற்றி ஒரு முக்கியமான ஆய்வுக்கு வருவோம். தமிழ் வலைப் பதிவுகளில் ஈழப் போராட்டத்தின் மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் செயல் பாட்டின் மேலும், (கருத்து வேறுபாடும், விமர்சனங்களும் இருந்தாலும் கூட) பெரும் ஆதரவும், நம்பிக்கையும் இருக்கிறது. இங்கு ஈழத்தமிழர்களை விட்டு விடுவோம். இந்தியத் தமிழர்களை மட்டுமே கருத்தில் கொள்வோம். ஓரு இரண்டாயிரம் பேர் இயங்கும் வலைப் பதிவுகளில் கூட இந்த நிலைமையென்றால், தமிழ்நாட்டில் என்ன நிலைமையிருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம் வரும் எனக்கே பொதுவாகச் சந்திக்கும் எத்தனையோ மக்களில் ஈழப் பிரச்னையில் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். புலிகளை வெளிப்படையாக ஆதரித்துப் பேசுவதால் ஏற்படும் அவப் பெயருக்குப் பயப்படுபவர்கள் கூட புலிகளை ஈழமக்களின் உண்மையான அல்லது குறைந்தபட்சம் தேவையான பிரதிநிதிகளாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் உங்கள் மரியாதையை இழந்தாவது நீங்கள் காப்பாற்ற நினைக்கும் இந்துப் பத்திரிகையும், மற்ற கபட பத்திரிகைகளும், இந்த உண்மையை மறைத்து எவ்வளவு பெரிய பொய்களை உருவாக்கி வெளியிடுகின்றன? எதற்கெல்லாமோ மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கணிப்பை வெளியிடும் பத்திரிகைகள் ஈழப் பிரச்னையில் தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கணிப்பை வெளியிடுவதில்லை ஏன்? கோயபல்ஸுகளின் பொய்கள் அம்பலமாகி விடும் என்பதால்தானே?
உண்மை இப்படியிருக்க, முழுக்க ஊகங்களின் அடிப்படையில் எழுதப் பட்ட ஒரு பொய்க்கட்டுரையை மொழி பெயர்த்து நீங்கள் போட்டால் உங்களுக்கு என்ன ஆச்சு என்று பரிதாபப் படுவதும், கோபப்படுவதும் உங்கள் மேல் இங்கிருந்த மதிப்புக்காகத்தான் என்று புரிந்து கொள்ளாமல், "அப்படி மதிக்கவெல்லாம் வேண்டாம். நான் எழுதுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்" என்று சொல்வது போல் இருக்கிறது. கூடிய விரைவில் அதுதான் நடக்கப் போகிறது.
நன்றி - சொ. சங்கரபாண்டி
ஒவ்வொரு முறையும் புதிய புதிய முறைகளில் வாதங்களை திசை திருப்பி விடுவதில் உங்களை யாராலும் மிஞ்ச முடியாது. உங்களின் இந்த அசாத்திய திறமைக்கு இரசிகனாகவே நான் ஆகிவிட்டேன். சென்ற முறை பெயரிலி, "இராம் மகளை விமர்சித்தார்" என்றீர்கள்.
ReplyDeleteஇந்த முறை உங்களுக்கு வந்த "பின்னூட்டங்கள் எல்லாம் வசைகள் என்க்றீர்கள்."
உங்களுக்கு இணை நீங்கள்தான் மாலன். வாழ்க உம் திசைதிருப்பல் தொண்டு. வளர்க உம் இரசிக் கூட்டம்.
Sir,
ReplyDeletethere are people who have black and white view-points (with no allowance for shades of grey) ;
they firmly believe that all actions and ideals of LTTE are always correct, above board and holy ; while all actions and ideas of Sri Lankan government are always evil, chauvinsitic and inhuamn. good guys vs bad guys or villains. simple tamil movie concepts. no one can argue with dogmatics and unrealists...
same with RSS, DK, CPM, VHP types.
"us vs them" syndrome...
'and those who are not with us are always against us'
கொஞ்சம் பிரபலமான எல்லோருக்குமே இலைமறை காயாய்த் தேங்கியிருக்கும் நோய்க்கூறின் வெளிப்பாடுதான் மாலனின் வசவாளர்களுக்கு வணக்கம் என்கிற இந்தப் பதிவு அதாவது வசவு வரவேண்டும் என்று எதிர்பார்த்தே பதிவிடுவது அது வந்தவுடனே பார்த்தாயா பார்த்தாயா நான் சொன்ன மாதிரி திட்டுகிறார்களே என்று பரிதாபத்தை வாங்கிக் கட்டுவது இதற்கு மேலும் யாராவது ஏதாவது சொன்னால் நான் போகிறேன் போகிறேன் என்று அறிக்கை விடுவது
ReplyDelete.முன்னைய பதிவு பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை.நேர்மையான கேள்விகளுக்கு மாலன் என்றுமே பதிலளிப்பதில்லை அவரது நோக்கமே வசவு வரவேண்டும் என்பதாக இருக்கும் போது முன்னைய பதிவு அவருக்கு வெற்றி என்றே சொல்லவேண்டும்.வந்த ஓரிரண்டு பின்னூட்டங்களை மட்டும் வைத்து மொத்தப் பின்னூட்டங்களிலும் உள்ள நியாயமான கேள்விகளையும் ஒதுக்கி நீ என்ன கேட்கிறது நான் என்ன பதில் சொல்கிறது என்ற பெரிய மனித நோய்க்கூறைப் புரிந்து கொண்டாலும் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை
பத்திரிகையை வாசிப்பவர்கள் எல்லோரும் தீர்க்கமான முடிவுகளுடன் தான் வாசிக்கிறார்கள் என்கிறீர்களே.ஒரு பத்திரிகையாளனின் கடமை என்ன என்று நினைக்கிறீர்கள்?ஒரு செய்தியை செய்தியாக வெளியிடுவதா அல்லது தனது திணிப்புக்களுடனும் திரிப்புக்களுடனும் வெளியிடுவதா?பத்திரிகையாளனுக்குச் சார்புகள் எதிர்ப்புகள் இருக்கக் கூடாது என்று நான் கூற வரவில்லை ஆனால் பத்திரிகா தர்மம் என்று ஒன்று இருப்பதாக நீங்கள் கருதினால் அது எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்(வழமை போல பதில் வராது என்று தெரியும் இருந்தாலும் சும்மா கேட்டு வைப்போமே எனக்கும் அனுதாப வாக்குகள் கொஞ்சமாவது விழுமல்லவா?)
அதை விட முக்கியமான கேள்வி எதிர்க்காமல் இருப்பது என்பது சார்பாக இருத்தலும்தான் அதனாலேயே விடுதலைப் புலிகளை எதிர்க்கிறேன் என்கிறீர்கள் உங்கள் கூற்று நியாயமானதுதான் இலங்கை இராணுவம்/அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் வன்முறைகள் பற்றி இன அழிப்புப் பற்றி உங்கள் எதிர்ப்பை எங்காவது பதிவு செய்து வைத்திருக்கிறீர்களா என்று அறிய ஆவல் எனக்குத் தெரிந்து இலங்கை அரசாங்கத்தையோ இராணுவத்தையோ நீங்கள் செல்லமாகவேனும் கடிந்தெழுதி நான் வாசித்ததில்லை அப்படி ஏதாவது இருந்தால் சுட்டி கொடுங்களேன் இந்தப் பதிவை எனக்கு அனுப்பி வாசிக்கும் படி சொன்ன நண்பருக்கு அதை அனுப்பி பார்த்தாயா நான் சொன்னேனே மாலன் நேர்மையான பத்திரிகையாளன் இயக்கத்தை திட்டுவதைப் போலவே அவர் அரசாங்கத்தையும் திட்டுகிறார் இந்தா ஆதாரம் என்று கொடுத்து விடுகிறேன்
எம்.கே குமாரின் எழுத்துக்கள் உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா திண்ணையில் நான்காம் நாயகம் என்று ஒரு கதை எழுதி இருக்கிறார் உங்களைப் போன்ற பத்திரிகையாளருக்குச் சமர்ப்பணம் செய்யப்படவேண்டிய கதை படித்துப் பாருங்கள்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10708305&format=html
திரு. மாலன் அவர்களே,
ReplyDelete“இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்று ஒரு கருத்துச் சொல்லப்பட்டு வருகிறது” என்று எழுதியிருக்கிறீர்கள். இது தவறு. இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்பது கருத்தல்ல, அது ஒரு உண்மை. இணையத்தின் அடிப்படை தன்மையால் விளைந்த இச் சுதந்திரம் மட்டுப்படுத்த இயலாதது. எனவே இது குறித்து நீங்கள் புலம்புவது தானியங்களைக் காய வைத்த ஒருவன் மழையைப் பற்றி புலம்புவது போல. புலம்புவதால் மழை நிற்கப் போவதில்லை. புலம்புவதை நிறுத்தி விட்டு முடிந்த வரையில் தானியங்களைக் காத்துக் கொள்ள முயற்சி செய்வது நல்லது.
“ஒரு பிரபலமான நாளிதழில் வந்த செய்தியை, கருத்துக் கலக்காமல், ஆதாரத்துடன் மொழி பெயர்த்துப் போடக்கூடாது. ஏனெனில் அந்தச் செய்தி விடுதலைப் புலிகளைப் பற்றியது!” என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்களை மொழி பெயர்த்துப் போடக் கூடாது என்று எவரும் சொன்னதாக தோன்றவில்லை. சொன்னாலும் நீங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. மொழி பெயர்த்து அதை இணையத்தில் இட்ட பின் உங்கள் பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை நீங்கள் வெளியிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்கள் பதிவைப் பற்றி பிற தளங்களில் செய்யப்படும் எதிர்வினைகளை நீங்கள் பொருட்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. சுருங்கச் சொல்லின் இணையத்தில் எல்லோருக்கும் இருக்கும் கருத்துச் சுதந்திரம் உங்களுக்கும் உள்ளது. ஒரு வேளை, இந்த சமன்தான் – அதாவது பிரபல பத்திரிகையாளர் திரு. மாலனும், பேர் தெரியாத ஏ.வி.எஸ். போன்றவர்களும் இணையத்தில் கருத்துக்களை விருப்பப்பட்ட விதத்தில் எழுதி, பிரசுரித்துக் கொள்ளலாம் – என்ற நிலைதான் கட்டற்ற சுதந்திரத்தை விட தங்களை அதிகம் தொந்தரவு செய்கிறதோ என்று தோன்றுகிறது. உண்மை உங்கள் மனசாட்சி மட்டுமே அறியும்.