Thursday, July 19, 2007

கதையல்ல, வாழ்க்கை

அப்பாவா?
நசீமாவால் நம்பத்தான் முடியவில்லை.கையிலிருந்த தொலைபேசியை மறுபடியும் பார்த்தார். அதற்குள் மறுமுனை ஹலோ, ஹலோ என்று சிலமுறை கூப்பிட்டுவிட்டது.
"லைன்லதான் இருக்கேன் சொல்லுங்க"
"உங்க அப்பா உயிரோடுதான் இருக்கிறார்"
"அப்படியா? எங்கே?" கேட்கும் போதே அவரது குரல் உடைந்தது. தனது எட்டு வயதில் அப்பாவைப் பிரிந்து, இதோ இப்போது 24 வருடங்கள் ஆகப்போகிறது. அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. இப்போது சென்னையில் இருக்கும் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் சவுதி அரேபியாவில் இருக்கும் தன்னைக் கூப்பிட்டு அப்பா உயிரோடுதான் இருக்கிறார் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

"நீங்களே அவர் கிட்ட பேசுங்க" என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி சொன்னபோதும் நசீமாவிற்கு நம்பிக்கை ஏற்படவில்லை.சந்தேகம்தான் தோன்றியது. அப்பாவிடம் பேசுவதா? அவருக்குக் காதும் கேட்காது, வாயும் பேசவராது.

ஆனால் நசீமா பேசினார். அப்பா இப்போதும் பேசவில்லை. ஆனால் நசீமா பேசுவதைப் புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சுக்குப் பதிலாக எழுப்பிய சப்தங்கள் உணர்த்தின.

நசீமாவின் கதை சினிமா போன்றது. அது பின்னோக்கி ஓடி 24 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இப்ராஹிம் ஷெரீப்பிற்கு மூன்றும் பெண்கள். மும்தாஜ், ஷம்ஷாத், நசீமா. அவர் அப்போது காஞ்சிபுரத்தில் பீடி சுற்றும் கூலியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். சிரம ஜீவனம்தான். மனைவி ரோகயா பீவி டி.பியில் இறந்த பிறகு அந்த வாழ்க்கை இன்னும் கடினமானது. அவர்தான் மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

மூன்று குழந்தைகளிலும் அவருக்கு கடைக்குட்டியான நசீமாமீது கொள்ளைப் பிரியம். தனது சிரமமான வாழ்க்கைக்கு நடுவேயும் அவளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஆனால் விதி வேறு திட்டங்கள் வைத்திருந்தது.

நசீமாவிற்கு எட்டு வயதான போது, ஷெரீபின் உறவினர் ஒருவர் காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தார். நசீமாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி தன்னுடன் அழைத்துப் போவதாகச் சொன்னார். ஷெரீபிற்கு மகளைப் பிரிய விருப்பமில்லை. நாம்தான் இப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம், நம் குழந்தையாவது எங்கேயாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ, அரை மனதாக சம்மதித்தார்.

அந்த உறவினர் நசீமாவை சென்னையில் ஒரு தம்பதியிடம் விற்றுப் பணத்தை வாங்கிக் கொண்டு காணாமல் போய்விட்டார். நசீமாவை விலை கொடுத்து வாங்கிய தம்பதி போலீஸ்காரத் தம்பதி. கணவன் மனைவி இருவருமே காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். எட்டு வயதுக் குழந்தையின் தலையில் அத்தனை வேலைகளையும் சுமத்தினார்கள். அது செய்ய முடியாமல் திணறிய போது அதட்டினார்கள், அடித்தார்கள், உதைத்தார்கள், கையில் சூடு கூட வைத்தார்கள்.

செல்லக் குழந்தையாக வளர்ந்த நசீமாவால் கொடுமை தாங்க முடியவில்லை. தினம் வீதியில் வந்து காய்கறி விற்கும் ஒரு வண்டிக்காரரின் உதவியுடன் தப்பிவிட்டார்.

வீடு எங்கே என்று கேட்ட போது அண்ணா நகர் என்று சொன்னார் நசீமா. வண்டிக்காரர் நசீமாவை அண்ணாநகரில் கொண்டுவிடச் சொன்னார். நசீமா சொன்னது காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாநகர் என்ற குடிசைப்பகுதியை. ஆனால் இந்த அண்ணாநகர் சென்னையில் பங்களாக்கள் நிறைந்த அண்ணா நகர். அடுக்கு மாடிக் கட்டிடங்களும், நொடிக்கொரு கார் விரைகிற அகன்ற வீதிகளுமாக இருந்த இது அவருக்குப் பரிச்சயமான அண்ணாநகராக இல்லை

.இனி என்ன செய்வது என்ற கவலை எழுந்தது. மீண்டும் அந்தக் கொடுமைக்கார தம்பதியிடம் மாட்டிக் கொண்டுவிடுவோமோ என்ற அச்சம் அவரை அரித்தது. பயத்திலும் ஏமாற்றத்திலும் அழுகை பொங்கிப் பொங்கி வந்தது.

வீதியில் அழுது கொண்டிருந்த குழந்தையை அந்த தம்பதிகள் பார்த்தார்கள் அவர்கள் மைசூரிலிருந்து வந்து சென்னையில் குடியேறியிருந்த பிராமண வகுப்பைச் சேர்ந்த தம்பதிகள். அவர்கள் நசீமாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் தேற்றினார்கள். அதற்குள் நசீமாவின் குடும்பம் காஞ்சிபுரத்தை விட்டகன்று, வேலூருக்கோ, ஆற்காடுக்கோ குடிபெயர்ந்திருந்தது. அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

நசீமாவை அந்த பிராமணத் தம்பதிகளே பிரியத்தைக் கொட்டி மகளைப் போல வளர்த்தார்கள். நசீமாவின் வாழ்வில் அந்த நாட்கள் ஒரு பொற்காலம். தங்கள் வழக்கங்கள் எதையும் நசீமா மீது திணிக்கவில்லை. நசீமா தனது மத நம்பிக்கைகளைக் கைவிடுமபடியும் வற்புறுத்தவில்லை. நசீமா தங்கள் மத வழக்கப்படி பர்தா அணிய விரும்பியபோது அதைத் தடுக்கவும் இல்லை.

சில ஆண்டுகளில் ஒருயுவதியாக மலர்ந்துவிட்ட நசீமாவை அவரது வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பணக்கார இஸ்லாமியக் குடும்பததைச் சேர்ந்த சையத் மணக்க விரும்பினார். அந்தத் தம்பதிகள் அந்த வரனைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்டு நன்கு விசாரித்து அறிந்து கொண்டனர். " என்னை அழைத்து நசீமாவின் முன் நடக்கச் சொல்லிக் கூடப் பார்த்தார்கள், எனக்கு ஏதும் ஊனம் இல்லையே என உறுதிப்படுத்திக் கொள்ள" என்கிறார் சையத்.

திருமணத்திற்குப் பின் நசீமாவும் சையத்தும் வெளிநாட்டில் குடியேறி வாழத் தொடங்கினார்கள். அப்போது நசீமாவிற்கு 20 வயது. வசதியான வாழ்க்கையை உடல் அனுபவித்தாலும் மனதில் வறுமையில் வாடிய நாட்களின் ஞாபகம் வந்து போய்க் கொண்டிருந்தது. அவ்வளவு வறுமையிலும் தன்னை ஒரு ராஜகுமாரி போல கவனித்துக் கொண்ட அப்பாவின் நினைவுகள் வந்து வதைக்கத் துவங்கின. மழை நாட்களில் தன் காலில் சேறு படிந்துவிடக் கூடாது என்ற அக்கறையில், தன்னை தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு ஸ்கூலில் கொண்டு விட்ட அன்பை நினைத்தால், காலில் செருப்பை மாட்டும் போது, கண்கள் பொங்கும்.

அப்பாவைத் தேடித் தரும்படி கணவனை நச்சரிக்கத் தொடங்கினார் நசீமா. கணவரது பிசினஸ் பார்ட்னர், சென்னை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.கூடவே ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கும் கடிதம் எழுதினார்கள். துப்பறியும் நிறுவனத்தினர், முதலில் சைபுனீசாவை, அவர்தான் நசீமாவை விற்ற உறவினர், தேடிக் கண்டுபிடித்தனர். அவர் மூலம் இப்ராஹிம் ஷெரீப்பைக் கண்டுபிடித்தனர்.

நசீமா இப்போது நெகிழ்ந்து போயிருக்கிறார். என் கணவருக்கு இருப்பதைப் போல எனக்கும் இப்போது ஒரு குடும்பம் இருக்கிறது என்கிறார். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து.

*

இது கதை அல்ல. வாழ்க்கை. அண்மையில் ஜெயா மேனன் சேகரித்து இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியிட்டிருந்த தகவல்களைக் கதை வடிவில் தந்திருக்கிறேன்.
வாழ்க்கைதான் எத்தனை ஆச்சரியங்கள் நிறைந்தது!

நன்றி: ஜெயா மேனன்/ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

7 comments:

  1. //மழை நாட்களில் தன் காலில் சேறு படிந்துவிடக் கூடாது என்ற அக்கறையில், தன்னை தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு ஸ்கூலில் கொண்டு விட்ட அன்பை நினைத்தால், காலில் செருப்பை மாட்டும் போது, கண்கள் பொங்கும்.//

    :-((

    ஏழையாகவே இருந்தாலும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் என்றும் இளவரசர்(அரசி) தான்.

    வறுமையும் வயிறும் சில சமயம் பெற்றோர்களை கொடியவர்களாக்கி விடுகிறது.

    சில நாட்களுக்கு முன்மருத்துவம் செய்யப் பணம் இல்லாமல் ஒருவர் தன் பெண் குழந்தையை ஆற்றில் வீசிய கதை படித்தீர்களா? அவளும் நாளை இப்படி அப்பாவைத் தேடலாம்.

    :-(((

    ReplyDelete
  2. It's such a touching story , thnak you for sharing with us Maalan.

    ReplyDelete
  3. Anonymous4:22 pm

    சமீபத்தில் இது போல ஒரு பெண் ஐரோப்பாவிலிருந்து வந்து கோவை மற்றும் கேரளாவில் தன்பெற்றோரைத் தேடி கிடைக்காமல் சோகத்துடன் திரும்பிச் சென்றதை படித்தது நினைவிருக்கிறது

    நசீமாவுக்கு குடும்பம் திரும்பக் கிடைத்திருக்கிறது. எங்கே சென்றாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தன் குடும்பம் தன் ரத்தங்கள் என்ற உணர்வு வரும் என்பதை உணர்த்துகிறது.

    ReplyDelete
  4. ஒரு அழகிய (மசாலா இல்லாத) முழு நீள திரைப்படமே எடுக்கலாம் இந்த கதையை மூலமாக வைத்து. நெகிழ்ச்சியான சம்பவம்.

    ReplyDelete
  5. //அப்பாவிடம் பேசுவதா? அவருக்குக் காதும் கேட்காது, வாயும் பேசவராது.

    ஆனால் நசீமா பேசினார். அப்பா இப்போதும் பேசவில்லை. ஆனால் நசீமா பேசுவதைப் புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சுக்குப் பதிலாக எழுப்பிய சப்தங்கள் உணர்த்தின.// காது கேட்காத அப்பா எப்படி நசீமா பேசுவதைப் புரிந்துக் கொண்டார்?

    இதே போல் ஒரு சம்பவம் துபாயில் நடந்தது. 15 வருடத்திற்கு முன்பு ஓடிப்போன அப்பா இறந்த பிறகு மகனிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் பேட்டியை ஆசிப் எடுக்கும் போது அந்த மகன் தனக்கு பெரிய சந்தோஷமில்லை ஏனென்றால் இப்படி ஒரு அப்பா இருந்ததையே மறந்துவிட்டேன் என்றார். ஆனாலும் இறந்தவருக்கு இறுதி சடங்கை செய்ய தவறவில்லை.

    ReplyDelete
  6. என்னைக் கேட்டால், அந்த பிராமண
    தம்பதிகள், தி கிரேட்!
    நசீமா அவர்களைப்பார்க்க ஆவல்
    தெரிவித்தாரா என்று தெரிந்து
    கொள்ள ஆசை.

    ReplyDelete
  7. மாலன் அவர்களே...

    படித்துவிட்டு...சிறுது நேரம்..கண்ணை மூடி உட்கார்ந்து விட்டேன்...அப்பா இறந்த போது..மும்பையிலிருந்து சவப்பெட்டியில் அவரின் உடலை எடுத்து வந்ததை பார்த்தும் கூட.... அவர் உயிரோடு தான் இருக்கிறார் என்று செய்தி வருவதைப் போல் அடிக்கடி கணவு வரும்....அவர் இறந்து 17 வருடங்கள் ஆகி விட்டது.. 2 அல்லது 3 வருடங்களாகத்தான் அந்த கணவு வருவதில்லை...ஹ்ம்ம்..

    கண் முன்னே ஒரு குறும்படம் பார்த்தைப் போல் இருந்தது..

    ReplyDelete

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறையையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கில்லை. பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும்.நீக்கப்பட்ட விவரம் பின்னூட்டத்தில் குறிப்பிடப்படும்