அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
நான் கலந்து கொள்ளும் விழா நடக்க இருந்த இடத்தின் பின்னே ஓர் உயர்ந்த கோபுரம் தென்பட்டது. ஐம்பது அறுபதடி இருக்கும். அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். என்ன கோயில் என்று பார்க்கலாம் என்று போனேன். ஓர் இனிய அதிர்ச்சி.
அது தமிழ்த்தாய்க் கோயில்! ஆம் தமிழ்நாட்டில் தமிழ்த் தாய்க்கு கோயில் இருக்கிறது. காரைக்குடியில் மட்டுமே இருக்கிறது. அண்மைக்காலத்தில் கட்டப்பட்டதுதான். தன்னைக் கம்பன் அடிப்பொடி என்றழைத்துக் கொண்ட திரு.சா.கணேசன் முயற்சியில் கட்டப்பட்ட கோயில். சிறிய கோயில்தான். ஆனால் அதைக் கட்டவே 18 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 1975ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்ட கோயில் 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அடிக்கல் நாட்டியதும் கலைஞர், திறந்து வைத்ததும் அவர்தான் (அவர் ஆட்சியில் இல்லாத போதும் அவரையே திறந்து வைக்க அழைத்திருப்பது துணிச்சலான செயல்தான்!)
மூன்று படிகள் ஏறிப்போனதுமே கருவறை வந்து விடுகிறது. அறுகோணமாக அமைந்த கருவறை. அதில் வலக்காலை மடித்து, இடக்காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறாள் தமிழன்னை. நான்கு கைகள். மேலிருக்கும் வலக்கையில் அறிவுச் சுடர். கீழிருக்கும் வலக்கையில் ருத்திராட்சம் போல ஒரு மணியாரம். மேல் இடக்கையில் ஒரு யாழ். கீழ் இடக்கையில் சுவடிகள். கிரீடம் இருக்கிறது. கீரிடத்தின் உச்சியில் பாண்டியர் சின்னமான இரு மீன்கள். பின்னுள்ள திருவாச்சியின் இடப்புறமும், வலப்புறமும் சோழ சேரர்களது சின்னங்களான புலி-வில். ஆறடிக்கும் மேலிருக்கும் கருங்கல் சிலை. கோயில் சிலைகளைப் போல எண்ணை தடவிக் கறுக்க வைத்திருக்கிறார்கள்.அந்த மினுமினுப்பு இப்போதும் இருக்கிறது. பூசை எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. மாலையோ, பூக்களையோ, தீபங்களையோ நான் பார்க்கவில்லை.
அன்னையின் காலடியில் வலப்புறத்தில் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நிற்கிறார்கள். தனித்தனி சிலைகள். இரண்டு அடி இருக்கலாம். அகத்தியர் குள்ளமாக, முன் தள்ளிய தொந்தியும், அடர்ந்து நீண்ட தாடியுமாக இருக்கிறார். தொல்காப்பியர் சற்று உயரமாக, தாடியில்லாமல், உச்சியில் கொண்டையாக முடிந்த முடியோடு இருக்கிறார்கள். இருவருமே நம்மைக் கைகூப்பித் தொழுகிறார்கள். கருவறைக்கு வெளியே வரித்தாய், ஒலித்தாய் என இரு மங்கையர் காவற் பெண்டுகளாக இருக்கிறார்கள்.
தமிழ்க் கோயிலில் இன்னும் மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. அன்னையின் வலப்புறமாக இருப்பது வள்ளுவன் சந்நிதி. இதுவும் அறுகோணம்தான். ஆனால் அன்னையின் சந்நிதியைவிட சிறியது. சென்னைவாசிகள், எழுபதுகளில் நகரப் பேருந்துகளில் பார்த்திருக்கும் அதே சாயலில் இருக்கிறார் வள்ளுவர். கன்னியாகுமரி போலில்லாமல் உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். இடப்புறம் இருக்கும் சந்நிதி கம்பனுடையது. மேல்துண்டை நெஞ்சுக்குக் குறுக்கே வீசிப்போட்டு, சப்பணம் இட்டு கையில் எழுத்தாணியுடன் இருக்கிறார். மூன்றாவது சந்நிதி கருவறையின் பின்னே உள்ளது. அது இளங்கோவின் சந்நிதி. எல்லாச் சிலைகளுமே லட்சணமாக இருக்கின்றன.ஆனால் இருப்பனவற்றிலேயே மிக அழகான சிலை இளங்கோவினுடயதுதான். மொட்டைத் தலையோடு முகத்தில் முறுவல் தவழ வலக்காலை குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கிறார். முகத்தில் இளமை பொலிகிறது.
பேசுகிற மொழியைக் கும்பிடுகிற தெய்வமாகப் பார்ப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத உணர்ச்சித் தீவிரம் - சென்டிமென்ட்- என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அந்தக் கற்பனை எனக்குப் பிடித்திருந்தது. அந்த சிலைகளுக்குப் பின்னுள்ள கற்பனை எனக்குப் பிடித்திருந்தது. அவற்றை வடிக்க உந்திய அழகுணர்ச்சி எனக்குப் பிடித்திருந்தது. அந்தக் கற்பனையை கல்லில் வடிக்கக் காசு கொடுக்க முன்வந்த வள்ளல் தன்மை எனக்குப் பிடித்திருந்தது.
செட்டி நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் காசில் கெட்டி என்று தமிழ்நாட்டில் சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் தமிழ்க்கல்விக்கு, தமிழ் இசைக்கு, தமிழ் இறையியலுக்கு, தமிழ் இதழியலுக்கு, தமிழ்பதிப்புலகிற்கு, தமிழர் வணிகத்திற்கு, தமிழர் தொழில் வளர்ச்சிக்கு, ஏன் தமிழ் சினிமாவிற்குக்கூட அளித்திருக்கிற கொடைகள் ஏராளம். 1948ல் 10 லட்சரூபாய் பனமும், 300 ஏக்கர் நிலமும் அரசுக்குக் கொடையாகக் கொடுத்து காரைக்குடிக்கு மத்திய மின் வேதியல் ஆய்வு நிறுவனத்தைக் கொண்டு வந்தார் அழகப்பர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேணிய தமிழறிஞர்களின் பட்டியல் பெரியது. ஒரு அண்ணாமலை அரசர், அழகப்பர், ஆர்.கே.சண்முகம், ஏ.எம். முருகப்பர், சக்தி கோவிந்தன், சின்ன அண்ணாமலை, சா.கணேசன், குமுதம் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ஏ.வி.மெய்யப்பன், கண்ணதாசன், மனோரமா இல்லாமல் இருந்திருந்தால் தமிழர் வாழ்வு எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நான் சொல்வதன் அர்த்தம் புரியும்.
நகரத்தார்கள் சிங்கப்பூருக்கு எப்போது வந்து குடியேறினார்கள் எனத் தெரியவில்லை. சிங்கப்பூரின் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1824ல் நடந்ததாகத் தெரிகிறது. அப்போதிருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 756.'இவர்களில் பெரும்பாலனோர் கண்ணியமான வணிகர்கள்' என்று பக்லி என்ற நூலாசிரியர் எழுதுகிறார். இந்த கண்ணியமான வணிகர்களில் பலர் நகரத்தாராக இருந்திருக்கலாம். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு செட்டியார் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற ஒரு வர்த்தக சபை உருவாக்கப்படுகிறது. இந்த வணிகர்கள் சிங்கப்பூர் ஆற்றின் அருகே உள்ள கடைத் தெருவில் கிட்டங்கிகள் எனப்படும் சேமிப்புக் கிடங்குகள் வைத்திருந்ததாகவும் பின்னால் நகர் சீரமைப்பின் போது அவை கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும் படித்திருக்கிறேன்.
சிங்கை செட்டியார்களின் வரலாற்றைப் பற்றி யாரேனும் ஆய்வுகள் செய்திருக்கிறார்களா?
இது நான் சிங்கப்பூர் தமிழ் முரசில் எழுதியது. அதற்குப் பின் கிடைத்த சில தகவல்கள் நாளை
"ஏ.வி.மெய்யப்பன், கண்ணதாசன், மனோரமா இல்லாமல் இருந்திருந்தால் தமிழர் வாழ்வு எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்."
ReplyDeleteதமிழ்ச் சினிமாவின் மாபெரும் மனோரமா ஆச்சியையா குறிப்பிடுகிறீர்கள். எனக்குத் தெரிந்து அவர் அவ்வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அல்லது வேறு யாராவது மனோரமாவைக் குறிப்பிடுகிறீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பு மாலன்,
ReplyDeleteதமிழ்தாய் கோயிலைப் பற்றி எழுதியதற்கு நன்றி.
இங்கே கம்பன் மணிவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். மேத்தா, வாலி, புலமைப்பித்தன் போன்ற பலர் பங்கேற்ற கவியரங்கங்கள் முன்பு நடைபெற்றுள்ளன.
தற்பொழுது கம்பன் விழா நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை.
அன்புடன்
ராஜ்குமார்
மாலன்,
ReplyDelete12 வருடங்கள் காரைக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தாலும் இன்னும் தமிழ்த்தாய் கோவிலுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. உங்களிடம் கோவிலின் புகைப்படம் இருக்கின்றதா? இருப்பின் வெளியிடுங்களேன்.
நன்றி.
வந்தியத்தேவன்.
நன்றி திரு மாலன், பெருமையாக இருக்கிறது.
ReplyDeleteஆச்சி மனோரமா நகரத்தார்களின் ஊரான பள்ளத்தூரில் பிறந்து
வளர்ந்தவர் ஆனால் நகரத்தாரைச் சேர்ந்தவரில்லை