Saturday, February 27, 2016

தனிமை தவறல்ல!


அந்தப் பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். சொல்லிலோ அமிலம். சொத்தைப் பறித்துக் கொண்ட பங்காளியை ஏசுவது போல ஆங்காரத்தோடு அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அது அரசியல் மேடை. அண்மையில் நடந்து முடிந்த மாநாடு.

ஆட்சியைப் பற்றித் தொடங்கிய அனல் பேச்சு, சர்ரென்று சரிந்து தனிநபர் தாக்குதலாகத் திரிந்தது. குடும்பம் என்ற ஒன்று இருந்தால்தான் ஆண்களை மதிக்க தெரியும். உனக்கு குடும்பம் என ஒன்று இல்லை அதனால் ஆண்களை மதிப்பதில்லை என்று அவர் ஆளுங்கட்சித் தலைவரைச் சாடிக் கொண்டிருந்தார்.

ஒருவரது ஆட்சியை விமர்சிப்பதும், அவரது தனிப்பட்ட வாழ்வை விமர்சிப்பதும் ஒன்றல்ல. ஆனால் பெண்களது தலைமையை விமர்சிக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது அவர்களது தனி வாழ்க்கைதான். அரசியலில் மட்டுமல்ல, அலுவலகத்திலும் கூட.

திருமணம், குடும்பம் என்ற அமைப்போடு பெண்களைப் பிணைத்தே பார்க்கிற மனோபாவம் இங்கு காலங்காலமாக நுட்பமாகவும் திறமையாகவும் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. நடுவயதைத் தாண்டிய பெண்களிடம் பலர் சர்வசாதாரணமாகக் கேட்கும் கேள்வி, “உங்க ஹஸ்பெண்ட் என்ன செய்கிறார்?” மேலதிகாரியிலிருந்து, மேசையில் டீ கொண்டு வந்து வைக்கும் பணியாள் வரை இதைப் பெண்களிடம் கேட்கத் தயங்குவதில்லை.

பெண்கள் தனியாக இருப்பது அவர்கள் விருப்பம், உரிமை என்பதைத் தமிழ்ச் சமூகம் இன்னமும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே பாரதியும், அதற்குப் பின் பெரியாரும் இதனை அழுத்தம் திருத்தமாக எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள்.

குடும்பம் துறந்து அல்லது தவிர்த்து வாழும் பெண்களைப் பற்றிய ஆண்களின் மனோபாவம்தான் அன்றைக்கு ஆங்காரத்தோடு பேசிய பெண்ணின் குரலில் ஒலித்தது. பெண்ணுக்குள் ஆணும், ஆணுக்குள் பெண்ணும் இருப்பதில் அதிசயமில்லை. ஆனால் யாராயினும்  அரசியல் மேடைகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பது என் போன்ற சாதாரணக் குடிமகன்களின் எதிர்பார்ப்பு.

கருத்து மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கண்ணியமாக பேச எழுத நடந்து கொள்வது ஒன்றும் அத்தனை கடினமானதல்ல. அதனை இரு தலைமுறைகளுக்கு முந்தைய தலைவர்கள் அதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார்கள்
தி.மு.. தோன்றிய இரண்டொரு ஆண்டுகட்குப் பின்பு ஒரு நாள் அண்ணா, சம்பத், நான் மூவரும் இருக்கிறோம். அப்போது வெளியாகிய ரு திரைப்படத்தில் சிதம்பரம் ஜெயராமன் எது வேண்டும் சொல் மனமேஎன்று ஒரு பாடலை அற்புதமாகப் பாடியிருந்தார். அது எப்போதும் என் செவிப்புலனை நிறைந்திருந்தது. நான் தனியே உட்கார்ந்து ஒரு சிறு தாளில் எழுதத் தொடங்கினேன்.

எது வேண்டும் என் தலைவா - தலைவா
மதிவேண்டும் என்ற உம் கொள்கையா - இல்லை
மணம் வேண்டி நின்ற உம் வேட்கையா
பணி செய்வோர் விசுவாசமா - இல்லை
மணியம்மை சகவாசமா?

இதைப் படித்துப் பார்த்த சம்பத் சட்டென்று அந்தத் தாளை உருவி அண்ணாவிடம் தந்தார். அண்ணாவின் முகம் மாறியது. சேச்சே, இது மாதிரி எழுதாதய்யா, என்று கண்டித்துவிட்டு அந்தத்தாளை கிழித்து றிந்துவிட்டார்.  (அண்ணா சில நினைவுகள் - கவிஞர் கருணாநந்தம்)

 அரசியலை விமர்சிப்பதற்குத் தனிப்பட்ட வாழ்வை ஆயுதமாகப் பயன்படுத்தாத தலைமை அடுத்த தலைமுறையிலாவது அரும்பட்டும். முதிய தலைமுறைக்கும் ஒரு விண்ணப்பம்.: தனிமையைத் தேர்ந்தெடுக்கும் பெண்களை ஏளனமாக எண்ணுவதை இனியேனும் கைவிடுங்கள்.


மற்றவரது மனங்களை மதிக்கத் தெரிந்தவர்களே எப்போதும் மதிக்கப்படுவார்கள்

கடைசிப் பக்கம்:
கல்கி மார்ச் 6 2016 

Saturday, February 20, 2016

வெற்றி என்பது…..

கடைசிப் பக்கம்:: மாலன்
வெற்றி என்பது…..

“உங்களுக்கு என்னப்பா, மூன்றே பருவங்கள்தான் வெப்பம், அதிக வெப்பம், மிக அதிக வெப்பம். அங்கே, அமெரிக்காவில் அப்படியா?  வீட்டு வாசலில் மூன்றடிக்குப் பனி விழுந்து கிடக்கிறது. அம்மாவிற்கு ஒத்துக்காது . சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்!” என்றார் நண்பர்  நான் புன்னகைத்தேன். சியாச்சின் என் எண்ணங்களில் சிரித்துக் கொண்டிருந்தது

பூமிக்கு இரு துருவங்கள் என பூகோளப் பாடப் புத்தகங்கள் நமக்குச் சொல்லியிருக்கின்றன. மூன்றாவதாகவும் ஒரு ‘துருவம்’ உண்டு. அது சியாச்சின். உண்மையில் அது துருவம் அல்ல. அதாவது ஒரு முனையல்ல. அது ஓர் பனிகட்டி..உலகின் மிகப் பிரம்மாண்டமான பனிக் கட்டிகளில் ஒன்று (72 கீ.மீ நீளம்) சுற்றிலும் நெடிதுயர்ந்து நிற்கும் பனிச்சிகரங்கள் சுழன்றடிக்கும் காற்றின் மூலம் ஓயாது பனி தூவிக் கொண்டிருப்பதால் இந்தப் பனிகட்டியில் உள்ள பனியின் ஆழமும் அளவும் துருவப் பகுதிகளுக்கு நிகரானது என்பதால் இது ‘மூன்றாம் துருவம்’

இந்த மூன்றாம் துருவத்தில், ஹனுமந்தப்பா புதையுண்ட போது மூன்றடிக்கு அல்ல, முப்பது அடிக்குப் பனி குவிந்து கிடந்தது. அவரையும் அவரது சகாக்களையும் மீட்டெடுக்க நடந்த முயற்சி மனித ஆற்றலின் சிகரம். மனத் திண்மையின் உச்சம். மரணத்தைத் துச்சமாக மதித்து நடந்த ஓரு போராட்டம்.

19,500 அடி உயரத்தில் இருக்கிறது சியாச்சின். அந்த வெள்ளிப் பனிமலையில் உலவுவது கிடக்கட்டும், மூச்சுவிடுவதே சிரமம். ஏனெனில் காற்றில் ஆக்சிஜன் குறைவு. மைனஸ்55 டிகிரி குளிர். சுழன்றடிக்கும் காற்று. பெய்வதும் நிற்பதுமான பனிமழை. பதினைந்து நிமிடத்திற்கு மேல் அந்தப் பனி வெளியில் நிற்க முடியாது

புதைந்து கிடக்கும் உடல்களை மீட்க வேண்டுமானால் உறைந்து கிடக்கும் பனியை உடைக்க வேண்டும். அதுவோ கான்கீரிட்டை விடக் கடினமாக இருந்தது  இறுகிக் கிடந்த பனியை உடைப்பது அத்தனை எளிதாய் இல்லை. அங்குலம் அங்குலமாகச் செதுக்கித்தான் அகற்ற வேண்டும்.

அசரவில்லை நம் ராணுவம்.150 ராணுவ வீரர்கள் களமிறங்கினார்கள். 20, 20 பேர் கொண்ட குழுவாகப் பிரித்துக் கொண்டார்கள். ஒவ்வொரு குழுவும் அரைமணிநேரம் வேலை செய்யும். பின் ஓய்வு.பின் வேலை.

இயந்திரத் துளைப்பான்கள், மின்சார ரம்பங்கள், ஆழத்தில் ஊடுருவித் தேடும் ரேடார்கள், ரேடியோ அலைகள் மூலம் கண்டறியும் சாதனங்கள் என ஹெலிகாப்டர்கள் 200 நடை போய் எடுத்து வந்தன. அத்தோடு அவர்கள், டாட், மிஷா இரு நண்பர்களையும் அழைத்து வந்தார்கள். இருவரும் மோப்ப நாய்கள்!. என்றைக்கும் நாய்கள்தானே மனிதனின் ‘பெஸ்ட் பிரண்ட்!’
  
ஒருநாளல்ல, இருநாளல்ல, ஐந்து நாள்கள் போராடினார்கள். அந்த ஐந்துநாளும் பனிப்பாறைகளின் இடுக்கில் இருந்த காற்றை சுவாசித்துக் கொண்டு ஹனுமந்தப்பா உயிரைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தார். ஐந்தாம் நாள் அந்திமாலையில், அவரை வெற்றிகரமாக வெளியே கொண்டு வந்து விட்டார்கள். காத்திருந்த ஒரு மருத்துவர் குழு அங்கேயே அவருக்கு சிகிச்சை அளித்தது. காரணம் இருட்டிவிட்டதால் ஹெலிகாப்டர்கள் பறக்க முடியாத நிலை. இருள் விலகியதும் புறப்பட்டார்கள். பனிமழை. 150 அடிக்கு அப்பால் பார்க்க முடியாது. மலைகளுக்கு இடையிலான குறுகிய வெளியில், சுழன்றடிக்கும் காற்றில் அங்குலம் அங்குலமாக முன்னேறி சமவெளியில் வந்திறங்கியது ஹெலிகாப்டர்.

பனிவெளியில் மீட்டுப் பாதுகாத்தவரை, புதுதில்லியில் பறிகொடுத்தோம்   

வெற்றி என்பதின் அளவு கோல், அருமை மாணவர்களே, முடிவுகளில் அல்ல. முயற்சிகளில்தான் இருக்கிறது

-கல்கி  

Tuesday, February 16, 2016

திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமையானதா?

தேர்தல் 2016

இது எங்களுக்குக் கிடைத்த பொங்கல் பரிசு என்று, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலிருந்து 2013-இல் தி.மு.க. வெளியேறியபோது குதூகலித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இப்போது காதலர் தினத்திற்கு முன்னதாக காங்கிரஸிற்கு இன்னொரு பரிசு கிடைத்துள்ளது. அது தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி.

 இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்த தில்லியிலிருந்து வந்த குலாம் நபி ஆசாத்தை கருணாநிதியின் வீட்டு வாசலில் நின்று வரவேற்றவர், காங்கிரஸ் தலைமையிலான அரசால் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்று பிணையில் மீண்ட கனிமொழி. வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 2ஜி அலை ஒதுக்கீட்டில், காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தெரிந்தே எல்லாம் நடந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் தனது கருத்தை வெளியிட்டு இரண்டு நாள்கள் கூட ஆகவில்லை; கூட்டணி ஏற்பட்டுவிட்டது.

 காங்கிரஸ், தி.மு.க. இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி, கருத்தொற்றுமையினாலோ, கொள்கைப் பிடிப்பினாலோ, பரஸ்பர அபிமானத்தினலோ ஏற்பட்டுவிடவில்லை. (ராகுல் காந்தி சென்னைக்குப் பலமுறை வந்தபோதும் ஒருமுறை கூட கருணாநிதியைச் சந்தித்ததில்லை). என்றபோதிலும், இந்தக் கூட்டணி இரண்டு கட்சிகளுக்கும் அவசியம் தேவைப்படும் ஒன்றாகிவிட்டது. காரணம் இந்தத் தேர்தல், தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல, survival-ஐயும் தீர்மானிக்கும் தேர்தல்.

 இதைவிடக் கடுமையான முரண்பாடுகளைக் கொண்டிருந்த காலங்களில் கூட இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துக் கொண்டிருந்திருக்கின்றன. எந்த இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்பட்டு, நெருக்கடிநிலையால் "மிசா' கொடுமைகளுக்கு உள்ளானதோ, அதே இந்திராவின் தலைமையில் அமைந்த காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டு 1980 தேர்தலைச் சந்தித்தது. இலங்கையில் நடைபெற்ற போர் குறித்த முரணான கருத்துகளைக் கொண்டிருந்த போதும் இரண்டு கட்சிகளும் கூட்டணி கண்டே 2009 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன.

 கடந்த காலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட்ட தருணங்களில் அது அவற்றிற்கு ஆட்சி அதிகாரங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. 1971 மக்களவைத் தேர்தலில் அது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரúஸாடு கூட்டணி வைத்துக் கொண்டபோது, எதிரணியில் காமராஜரைத் தவிர எவரும் வெற்றி பெறவில்லை. 1980 மக்களவைத் தேர்தலிலும் அது 37 இடங்களைப் பெற்றது. 

 ஆனால் அன்றிருந்த காங்கிரúஸா, அன்று காங்கிரஸிற்கு இருந்த தலைமையோ, இன்றில்லை. இன்னும் சொல்லப்போனால் அன்றிருந்த தி.மு.க.வும் இன்றில்லை. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்ட போது சுமார் 20 சதவீத வாக்குகளைப் பெற்றது (19.8).
 அதே காங்கிரஸ், (மூப்பனார் தலைமையில் பிளவுபட்டு அவர் மறைவுக்குப் பின் மீண்டும் ஒருங்கிணைந்த காங்கிரஸ்) 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போது பெற்ற வாக்குகள் வெறும் 4.3% அதன் பின், 2014 நவம்பரில் கட்சி உடைந்து ஜி.கே.வாசன் தலைமையில் ஓர் அணியினர் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மாநிலக் காங்கிரஸைத் தொடங்கியிருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 இந்தச் சூழ்நிலையில் எழும் கேள்வி திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் அளவு வலிமை கொண்டதா?

 பழைய கணக்குகளுக்குள் போகாமல், 2001-லிருந்து பார்த்தால், தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால், மும்முனைப் போட்டி என்றால் குறைந்தபட்சம், பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேல் பெற வேண்டும். நான்கு முனைப் போட்டி என்றால் 45% வாக்குகளைப் பெற வேண்டும். அதற்குமேல் போட்டி அதிகரித்தால் இந்த அளவு குறையலாம். ஆனால், 2001-க்குப் பின் அதிகபட்சமாக நான்கு முனைப் போட்டிதான் நடைபெற்றிருக்கிறது (சுயேச்சைகள் நீங்கலாக).
 இந்த 45-இலிருந்து 50% என்பதை தமிழ்நாட்டில் அ.தி.மு.க. உள்பட எந்தக் கட்சியாலும், தனித்து அடைய முடியாது. அதனால்தான் பெரிய கட்சிகளுக்கும்கூட கூட்டணிகள் தேவைப்படுகின்றன.
 கூட்டணிகள் செய்யக் கூடிய "மாஜிக்' அலாதியானது. 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வாக்குகள், தி.மு.க. பெற்ற வாக்குகளை விட அதிகம். அ.தி.மு.க. ஒரு கோடியே ஏழு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றது. தி.மு.க.வுக்கு 87 லட்சத்து 28 ஆயிரம். அதாவது, 20 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தும் அ.தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 

 காரணம், திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 15 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தது. அதாவது, திமுக தனது பலத்தினால் அல்ல, கூட்டணிக் கட்சிகளின் வெற்றியால் ஆட்சியைப் பிடித்தது. (இதனால்தான் ஜெயலலிதா அதை "மைனாரிட்டி' திமுக ஆட்சி என்று சொல்லி வந்தார்.) அதைப் போன்ற மாஜிக்கை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் நிகழ்த்துமா?

 கடந்த இரு தேர்தல்களை (2011 சட்டப் பேரவை, 2014 மக்களவை) வைத்துப் பார்க்கும் போது திமுகவின் பலம் 22 அல்லது 23 சதவீதம் இருக்கலாம். 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 22.4%. இது காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., கொங்குநாடு மக்கள் கட்சி ஆகியவற்றோடு கூட்டணி வைத்துப் பெற்ற வாக்குகள். 2014 மக்களவைத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 23.6%. அப்போது, காங்கிரஸும் பா.ம.க.வும் அதனுடன் இல்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவை அதனுடன் இருந்தன என்ற போதும் அதனுடைய வாக்கு 1 சதவீதம் அளவிற்கே உதவியது.

 இந்தப் புள்ளி விவரம் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. 1. பா.ம.க. வெளியேறியதால் தி.மு.க. பெரிதாக எதையும் இழந்து விடவில்லை. 2. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போதும் இல்லாத போதும் அதன் வாக்கு சதவீதம் பெரிதாக மாற்றமடைந்து விடவில்லை. 

 பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் கூட்டணியில் இருந்தபோது, 2011-இல் தி.மு.க. பெற்ற வாக்குகளையே, இன்று அவை அதனுடன் இல்லாத போதும் அடிப்படையாக எடுத்துக் கொண்டால் கூட தி.மு.க.வின் பலம் 23 சதவீதம். 2011-இல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 9%. தனித்து நின்ற மக்களவைத் தேர்தலில் 4.3 சதவீதம் பெற்றது. இவை த.மா.கா. பிரிந்து செல்லும் முன் பெற்றவை. 

 இன்றைய நிலையில், அதிகபட்சமாக காங்கிரஸின் வாக்கை 6 சதவீதம் என எடுத்துக் கொண்டால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் பலம் 23+6=29%. இது ஆட்சியமைப்பதற்குத் தேவைப்படும் 45 சதவீதத்திற்கு வெகு தொலைவில் உள்ளது. இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டிக்கும் மேலாக போட்டியிருக்கும் என வைத்துக் கொண்டாலும் எப்படியும் 40 சதவீதமாவது வேண்டியிருக்கும்.

 ஒருவேளை, தே.மு.தி.க.வும் இந்தக் கூட்டணிக்கு வருமானால் நிலைமை எப்படி மாறும்? தி.மு.க. கூட்டணியில் இதுவரை தே.மு.தி.க. போட்டியிட்டதில்லை. அதனால், தி.மு.க.வின் உறவு அதற்கு எத்தனை தூரம் வாக்குகளாக மாறும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. 

 அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையோடு கூட்டணி வைத்துப் போட்டியிட்ட 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் சுமார் 8% (7.9). இந்தக் கட்சிகள் எதுவுமில்லாமல், பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு இணைந்து 2014 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தபோது அது பெற்ற வாக்குகள் 5%. கடந்த தேர்தலுக்குப் பின் கட்சி பிளவு கண்டிருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் அதற்கு அதே 8% வாக்குகள் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட திமுக கூட்டணி 37 சதவீத வாக்குகள் பெறலாம்.

 சரி, அ.தி.மு.க. நிலை எப்படி?
 எந்தக் கட்சியோடும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் 2014 தேர்தலில் அது தனித்துப் போட்டியிட்ட மக்களவைத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 44.3%. ஆட்சியிலிருந்துகொண்டு தேர்தலைச் சந்திப்பதால் அதன் வாக்கு வீதத்தில் சரிவு (anti incumbency) ஏற்பட்டிருக்கலாம் என்று வைத்துக் கொண்டால் கூட, அந்த சரிவு 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்குமா என்பதை இப்போது கணிக்க இயலவில்லை. 

 2006-இல் அது ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த போது கூட தி.மு.க.வை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. முன்னரே சொன்னது போல் அப்போது தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது அதனோடு கூட்டணியில் இருந்த பா.ம.க., மற்றும் இடதுசாரிகள் இப்போது தி.மு.க. கூட்டணியில் இல்லை. அவர்கள் பெற்ற வாக்குகள் சுமார் 10 சதவீதம். அதை தே.மு.தி.க. ஈடுகட்டுமா என்பதைப் பொறுத்து முடிவுகள் இருக்கும். 

 கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். களப்பணி, பரப்புரை, பணபலம், ஜாதி ஆதரவு, வேட்பாளரின் செல்வாக்கு, கோஷ்டிப் பூசல் இவற்றோடு உள்ளூர் நிலவரங்களும் இந்தத் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
களப்பணி, பரப்புரை, பணபலம், ஜாதி ஆதரவு, வேட்பாளரின் செல்வாக்கு, கோஷ்டிப் பூசல் இவற்றோடு உள்ளூர் நிலவரங்களும் இந்தத் தேர்தலின் முடிவுகளை தீர்மானிக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
தினமணி 16.2.2016

Sunday, February 14, 2016

புஸ்வாணமான அதிர்வேட்டு!

தேர்தல் 2016
புஸ்வாணமான அதிர்வேட்டு!

மதுரையில் வசித்தவர்களுக்குத் தெரியும். அம்மனும் சுவாமியும், அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் நகர்வலம் வரும் முன், ஓரடி உயரமுள்ள கள்ளிப் பலகைகளால் செய்த டயர் வண்டி ஒன்று வரும். அதிலிருந்து எதையோ எடுத்துப் பற்ற வைப்பார்கள். வெடி ஒன்று உரத்து வெடித்து ஊரையே அதிர வைக்கும். அந்த அதிர் வேட்டுக்குப் பின்னர்தான் மேளம், யானை, கொடி, குடை. எல்லாம். அநேகமாகத் தமிழகத்தின் கோயில் நகரங்களில் எல்லாம் இதுதான் வழக்கம்

தமிழகத்தில் தேர்தல் ஊர்வலம் தெருவிற்கு வரும் முன், அதிர் வேட்டுப் போடும் வேலை பத்திரிகைகளுக்கு. அவை பற்றவைப்பதில் சில புஸ்வாணமாகப் புகைந்து அவிந்துவிடுவதும் உண்டு. சில வண்ணக் கோலங்களை வானில் இறைத்துவிட்டு சாம்பலாய் உதிர்ந்து சரிந்து விடுவதுமுண்டு. ஊசிப்பட்டாசாய் ஒரு சில வெடிக்கும் என்றாலும் அதிர்வேட்டுகள்தான் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும்

அப்படித் திரும்பிப் பார்க்கச் செய்த  அதிர்வேட்டு ஒன்று நேற்று புஸ்வாணமாகப் புகைந்து விட்டது . அது திமுக-பாஜக கூட்டணி ஒன்று உருவாகும் என்று ஊடகங்கள் பரப்பிய என்ற ஊகம். அன்பர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே காங்கிரஸ் –திமுக கூட்டணி பற்றிய அறிவிப்பு வந்து விட்டது

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையின் மகன் திருமணம் வரும் 17ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. கட்சியின் தலைவர் அமித்ஷா அதில் கலந்து கொள்கிறார். “ இதையொட்டி திமுக தலைமையுடன் அமித்ஷா பேசுவதற்கான ஏற்பாடுகளை திமுக-பாஜக தலைவர்கள் செய்து வருகின்றனர்” என்று தினமணி செய்தி வெளியிட்டிருந்தது .

அப்போது அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் பாஜகவுடன்  கூட்டணி குறித்த பேச்சு  வார்த்தைகள் உறுதிப்படும் என்ற ஊகங்கள் உலவின . உறுதிப்படும்? அப்படியானால் இந்தக் கூட்டணி குறித்து முன்பே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டிருக்கிறதா?

கடந்த மூன்றுமாதங்களாகவே ஸ்டாலின் தலைமையில் பாரதிய ஜனதாவும் திமுகவும் கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. அதற்கு கவிஞர்தான் தூதர். தமிழிசையும் குருமூர்த்தியும் எதிர்ப்பு, இல.கணேசன் ஆதரவு. இந்தப்பக்கம் கனிமொழியின் நிபந்தனைகள். இதையெல்லாம் கேரளத்தின் அத்தனை இதழாளர்களும் தண்ணியடித்தால் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தனர்.”  என்று மலையாள உலகை நன்கறிந்த ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார்.

இருவாரங்களுக்கு முன் எர்ணாகுளத்திற்கு வந்த அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்தனர். “தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை எடுக்கும் உரிமையை என்னிடமே விட்டுவிடுங்கள்” என்று அவர்களிடம் தெரிவித்திருந்தார் அமித்ஷா.

அதற்குச் சில நாள்கள் முன்பாக சுப்ரமணிய சுவாமி, கருணாநிதி விலகிக் கொண்டு ஸ்டாலினை முதல்வராக அறிவித்தால், திமுக-பாஜக-தேமுதிக கூட்டணி ஏற்பட வாய்ப்புண்டு என்பதைப் போன்று தனது ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். எதிர்பார்த்தபடியே இது சலசலப்புகளை ஏற்படுத்தியது. ஸ்டாலினின் விருப்பப்படிதான் இந்த யோசனை வைக்கப்படுகிறது என்று சிலரும், விஜயகாந்தின் மனநிலையை ஆழம் பார்க்கக் கருணாநிதியின் ஆலோசனையின் பேரில்தான் இது கூறப்பட்டுள்ளது என்றும், கட்சிக்குள்ளும் குடும்பத்திலும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு ஏதும் எழாமல் இருக்க, ஒரு சாக்காகப் பயனபடுத்திக் கொள்ளும் நோக்கில் இது பேசப்படுகிறது என்றும் ஊடக வட்டாரங்களில் ஊகங்கள் மிதந்தன.

நேற்று (பதிவிட்ட நாள் 11.2.16) இதழாளர் ஒருவரிடம் பேசினேன். [சினிமா விவாதத்தில்தான்] இந்தத்தேர்தலில் 2 சதவீதம்தான் வாக்கு மாறுபாடு இருக்கும். அதன்பொருட்டே மூன்றாம் அணி என்று சொன்னார். ஆனால் திமுகவுக்கு அது ஒரு பிரச்சினையே அல்ல.அவர்களின் பிரச்சினை பணப்பட்டுவாடாவும் கள்ளவாக்கும்தான். காபந்து அரசாக அதிமுக இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே மத்திய அரசின் ஆதரவு தேவை, மத்திய அரசு உண்மையாகவே கடிவாளம் பற்றவும் வேண்டும், இல்லையேல் வெற்றிவாய்ப்பே இல்லை என்றார்என்று ஜெயமோகன் வேறு ஒரு காரணம் சொல்கிறார்.

சுவாமியின் கருத்தை நிராகரிப்பது போல் தமிழக பாஜகவில் எதிர்வினைகள் இல்லை. அது அவருடைய சொந்தக் கருத்தாக இருக்கலாம். ஆனால் கட்சித் தலைமைதான் உரிய முடிவெடுக்கும் என்பதுதான் அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிடும் பதில். ஆனால் சுவாமி எல்லோரையும் கலந்து கொண்டுதான் அந்தக் கருத்தை வெளியிட்டார் என அவருக்கு நெருக்கமான ஆசிர்வாதம் ஆச்சாரி சொல்கிறார். இல.கணேசன் இன்னும் ஒருபடி மேலே போய், “ இதில் எங்களுக்கு என்ன பிரச்சினை? விடுதலை ஆசிரியர் வீரமணி போன்றவர்களுக்குத்தான் பிரச்சினை” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்தார்

ஆனால் பாஜகவோடு உறவு இல்லை என்று ஸ்டாலின் மறுத்தார். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த புதனன்று (10/2/16) சென்னை வந்திருந்தார். அவர் பாஜகவிற்கு நெருக்கமான ஆன்மீகத் தலைவர் எனக் கருதப்படுபவர். பாஜக அரசால் இந்தாண்டு பத்மவிபூஷன் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தனது சென்னைப் பயணத்தின் போது ஸ்டாலினை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்தார். அவர் பாஜக தலைமையிடமிருந்து ஏதேனும் செய்தி கொண்டு வந்திருக்கக் கூடும் என்ற ஊகங்கள் கசிந்தன. ஆனால் “"தமிழக சட்டப்பேரவை தேர்தலை திமுகவும் பாஜகவும் ஓரணியில் சேர்ந்து சந்திக்க எவ்வித வாய்ப்பும் இல்லை. பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை.
ஆனால், யாரெல்லாம் எங்களை அரசியலில் தீண்டத்தகாதவர்கள் போல் பாவித்தார்களோ அவர்களெல்லாம் எங்களை நோக்கி படையெடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எங்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதில் விருப்பம் இருப்பதாக பாஜகவிடம் இருந்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வரவில்லை. எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஸ்டாலின்.

ஒருவேளை அமித்ஷா கருணாநிதி சந்திப்பு வரும் 17ஆம் தேதி நடக்குமானால் அதற்கு முன் கருணாநிதியைச் சந்தித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் கருதியது . இதற்காக  13ஆம் தேதியன்று குலாம் நபி ஆசாத் சென்னை வந்து  கருணாநிதியை சந்தித்தார். அவரை வாசலில் நின்று வரவேற்றவர், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியினால் வழக்குப் போடப்பட்டு சிறை சென்று மீண்ட கனிமொழி!

திமுக –காங்கிரஸ் கூட்டணி அமைந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஆனால் ஒன்று தெளிவாகப் புலனாகிறது. தமிழகத்தில் தேசியக் கட்சிகள்  மாநிலக் கட்சிகளைச் சார்ந்து இருக்கிறது என்பது மறுபடியும் இந்தத் தேர்தலில் நிரூபணமாகிறது.


தமிழ் முரசு (சிங்கப்பூர்) 14.2.2016

Saturday, February 13, 2016

தேர்தல் 2016
ஸ்டாலினுடன் ஒரு சந்திப்பு

234 தொகுதிகளிலும் நமக்கு நாமே பயணத்தை முடித்த பின் நேற்று பத்திரிகையாளர்களுடன் நடத்திய உரையாடலுக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.முதல் கேள்வி எழுப்பும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நானெழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இன்றைய நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. எனவே அதைத் தனியாக விவரிக்கப் போவதில்லை. (நாளிதழ்கள் வாசிக்காத நண்பர்களுக்காக அவை கீழே தனியே தரப்பட்டுள்ளன.)

எல்லோருக்கும் மொத்தமாக ஒரு எலக்‌ஷன் கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்து நாற்காலியில் அமர்ந்து விடாமல், ஸ்டாலின் அறைக்குள் நுழைந்ததும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்துக் கை குலுக்கினார். செய்தியாளர்கள் அருகிலேயே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவரது பயணம் பற்றி தயாரிக்கப்பட்டிருந்த குறும்படத்தைப் பார்த்தார். இதன் மூலம் அறையில் ஓர் இணக்கமான, தோழமையோடு உரையாடும் சூழலை உருவாக்கினார்.

பின் அவருக்கென்று தனியே போடப்பட்டிருந்த ஒற்றை நாற்காலியில் அமராமல் நின்று கொண்டே உரையாற்றவும், பதிலளிக்கவும் செய்தார்.

அரசியலை நோக்கை ஒதுக்கிவிட்டு, ஒரு புரபஷனலாகப் பார்த்தால் அவரது உடை, கைகுலுக்கல், குறும்படம் எல்லாவற்றிலும் ஒரு திட்டமும் நுட்பமும் இருந்தது. தரமான தொழில்நுட்பமும், தொழில்முறை விளம்பர உத்திகளும் காணப்பட்டன. அதற்குக் காரணமாக இருந்த, பின்னிருந்து உழைத்த, மீடியா குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

அரசியல் தலைவர்களை, குறிப்பாக ஆளும் கட்சித் தலைவர்களை அணுகிப் பேசுவது, என்பது கடினமாகிவிட்ட இன்றையச் சூழலில் அடித்தள மக்களைத் தேடிச் சென்று சந்திப்பது என்ற அணுகுமுறை (அதன் பின் அரசியல் லாபம் என்ற நோக்கமிருந்தாலும்) வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

ஆனால் ஸ்டாலினின் இந்த அணுகுமுறை எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏறத்தாழ 25 ஆண்டுகளாக நான் அவரை அறிவேன். அவருக்கு எப்போதும் அடித்தளத்தின் துடிப்பை, கட்சி நிர்வாகிகள் என்ற வடிகட்டிகளைத் தவிர்த்து விட்டு, நேரிடையாக அறிந்து கொள்வதில் ஓர் ஆர்வம் உண்டு. அறிவாலயத்திற்கு வரும் கட்சிக்காரர்களானாலும் சரி, மேயராக இருந்த போது நகரில் இருந்த குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளை அவர்கள் வசிப்பிடங்களில் சென்று சந்தித்த போதும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதும் சரி இதைக் கைவிடாது பின்பற்றி வந்திருக்கிறார். ஆனால் அவருக்குக் கிடைக்கும் feedbackஐ என்ன செய்கிறார் என்பது இன்றுவரைக்கும் தெளிவாகவில்லை.

எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல் என்ற இரண்டையும் கைவிடாது இருக்கிறார். அவரைச் சீண்டி கோபமடையச் செய்வது கடினம். இந்தப் பண்புகளையும், அடித்தளம் நோக்கிய outreachயும் தொடர்ந்து கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் தனக்கென ஒரு வசீகரத்தை அவர் உருவாக்கிக் கொள்ள இயலும்

செய்தியாளர்களைக் கையாள்வதில் அவருக்குக் கருணாநிதியிடம் உள்ள சாதுர்யங்கள் இல்லை. சில கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் அளிக்கிறார் என்றாலும் அவரைப் போன்ற சிலேடை, சொல்விளையாட்டு, நகைச்சுவை இவரிடம் குறைவு. செய்தியாளர்கள் “யாருடன் கூட்டணி?” என்று கருணாநிதியிடம் கேட்டால்,”யாருடன் வைத்துக் கொள்ளலாம், நீங்க என்ன சொல்றீங்க?” என்று பதிலுக்கு கேள்வியை நம்மிடம் திருப்புவார். ஆனால் ஸ்டாலின் அதற்கு சின்சியராக பதில் சொல்ல முயல்கிறார்.(தவிர்க்க முடியாத இடங்களில் மழுப்புகிறார் என்ற போதும்)

அரசியல் வெப்பத்தில் இதையெல்லாம் இழந்துவிடாமல் இருந்தால், ஸ்டாலின், அன்புமணி போன்றவர்களால் ஒரு மேம்பட்ட அரசியல் கலாசாரம் தமிழ் நாட்டில் அரும்ப வாய்ப்புண்டு

இனி என் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்

கேள்வி: 234 தொகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறீர்கள்? எல்லாத் தொகுதிகளிலும் காணப்படும் பொதுவான அம்சம் என்ன? அடித்தள மக்களின் பொது விழைவு, பொது தேவை என எதை உணர்கிறீர்கள்?

மக்களை பொறுத்தவரையில் அடிப்படை தேவையாக தமிழகத்தில் உடனடியாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதாக இருக்கிறது.
வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டுள்ளது

கேள்வி:- ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு என்று அறிவித்திருக்கிறீர்கள். வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவீர்கள்? இலவசங்களைக் கைவிடுவீர்களா? எங்கள் மீது அதிக வரி விதிப்பீர்களா?

பதில்:- வருவாயை பெருக்க மாற்று திட்டங்கள் வைத்திருக்கிறோம். அதை தற்போது தெரிவிக்க முடியாது. ஆனால் மதுவிலக்கை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம்

கே. கடந்த சில நாள்களாக, மக்கள் நலக் கூட்டணி பற்றி திமுக தரப்பு விமர்சனங்களில் ஒரு பதற்றம் காணப்படுகிறது. நேற்று ஜி.ஆரை (ஜி.ராமகிருஷ்ணன், மார்க் கம்யூ) விமர்சித்து கருணாநிதியே எழுதியிருக்கிறார். ஏன் இந்தப் பதற்றம்? அவர்களை உங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் எனக் கருதுகிறீர்களா?

பதில்: அவர்களை நாங்கள் ஒரு பெரிய சக்தியாகக் கருதவில்லை. ஆனால் எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் அவை உண்மை எனக் கருதப்பட்டுவிடும்

கே: காங்கிரஸ் -திமுக கூட்டணி எந்த நிலையில் உள்ளது?
பதில்: நாளை குலாம் நபி ஆசாத் வருகிறார்.அதன் பின் தெரியும்

Thursday, February 11, 2016

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்கப் போனால். . .

தேர்தல் 2016

பத்ரியின் கட்டுரையை ( http://www.badriseshadri.in/2016/02/blog-post.html ) முன் வைத்து.

மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்க பத்ரி சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. ஓர் அரசு எப்படிச் செயல்படும் (Style of functioning) என்பதை அதன் தலைமை யார் என்பதைக் கொண்டே ஊகிக்க முடியும். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யாரென்று தெரியாத நிலையில்,  அதற்கு வாய்ப்பில்லை. அந்த நிலையில் அதை ஆதரிப்பது குறித்து எடுக்கப்படும் முடிவுகள் எதிர்மறையான சிந்தனைகள், அல்லது காழ்ப்பின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளாகவே கருதப்பட வேண்டும்.

மக்கள் நலக் கூட்டணி ஓர் ஆக்க பூர்வமான மாற்றத்தை நோக்கி, (ஆம் ஆத்மியைப் போல) உருவாக்கப்பட்டதல்ல. அது கடந்த கால தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியால், (அதாவது மக்களின் நிராகரிப்பால்) தேர்தல் பேரங்கள் போதுமான அளவு படியாது போன அதிருப்தியால் உருவான கூட்டணி. அதில் இடம் பெற்றுள்ள கட்சிகள் 2014 மக்களவைத் தேர்தல் வரையில் ஏதோ ஒரு கூட்டணியில் இருந்தவர்கள்தான். அப்போது இல்லாமல் இப்போது, இரண்டாண்டிற்குள், திடீரெனெ ஞானோதயம் எங்கிருந்து அல்லது எதிலிருந்து தோன்றியது? அந்தக் கட்சிகள் தங்களது சர்வைவலுக்காக, அந்தக் கட்டாயத்தின் காரணமாக, உருவாக்கிக் கொண்ட அமைப்பு மக்கள் நலக் கூட்டணி, அந்தத் தேவை தீர்ந்த பின் அது பலவீனப்படும். அத்தகைய சூழல் ஆளுகைக்கு (Governance) சிறந்ததாக இருக்க இயலாது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் இல்லாதிருந்த ஞானம் இப்போது வந்தது போல, இன்றுள்ள மனம் இரண்டாண்டுகளுக்குப் பின் இல்லாதும் போகலாம்.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள், நியாயம் கேட்பது என்பது என்ற நோக்கில் இயங்கி வந்தவை. சமத்துவம், சமூக நீதி, தமிழ் தேசியம், என்ற கருத்தியல்களுக்கு பன்முகத் தன்மை கொண்ட நம் ஜனநாயக அமைப்பில் இடமுண்டுதான். ஆனால் அரசு என்பதும் அரசியல் என்பதும் ஒன்று அல்ல. அரசு என்பது சமுகத்தின் எல்லா அலகுகளையும் ஒருங்கிணைத்து இயங்கும் பொறுப்புக் கொண்டது. அரசியல் ஒரு கருத்தியல் சார்ந்து இயங்குவது. சுருக்கமாகச் சொன்னால் an activist has only one agenda. But a government is constrained with many. இந்த வேறுபாட்டை உள்வாங்கிக் கொள்ளாத, அல்லது ஏற்றுக் கொள்ள மறுப்பதால்தான் ஆம் ஆத்மி ஆளுகையில் திணறிக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் பதட்டமும், வன்முறையும், நல்லிணக்கம் குன்றிய சூழலும் நிலவுமானால் அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைச் சூழலுக்குமே இடையூறாக அமையும்

ஊழல் மட்டுமே அரசைத் தீர்மானிக்கும் அல்லது நிராகரிக்கும் காரணியாக இருக்கக் கூடாது. ஏனெனில் ஊழல் முதலில் ஒரு கலாசாரப் பிரச்சினை. அதாவது மக்களின் பங்களிப்போடு நடைபெற்றுவரும் செயல். வேறு வழிகளில் அதிகாரத்தை வெல்ல இயலாத போது மக்கள் தங்கள் நலம் கருதி உருவாக்கிக் கொண்ட குறுக்கு வழி. அதற்கு அரசியல் பரிமாணங்கள் உண்டு. காரணம் அது அதிகாரத்தோடும் தொடர்புடையது என்பதால். அதனால்தான் அதிகாரம் உள்ள எல்லா இடங்களிலும், அரசியல்வாதிகள், அதிகாரிகள், (தனியார் துறையில் உள்பட) நீதி மன்றம், அது காணப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் காசு வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்பும் காவலாளியோ, கோயில் குருக்களோ, ஹெல்மெட் போடாதவரை தண்டிக்க முன் வராத போலீஸ்காரரோ, அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் செயல்படும் இடத்தில் அனுமதிக்கவோ மறுக்கவோ அதிகாரம் உள்ளவர்கள், அந்த அதிகாரத்தின் விளைவு அவர்கள் செய்யும் ஊழல். இந்த எளிய உதாரணத்தின் மூலம் ஊழல் என்பதன் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்.

எல்லா மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது. முன்பு அச்சுதானந்தன் அவரது உறவினர் ஒருவருக்கு ஒதுக்கிய நிலம் தொடர்பாக வழக்குப் போடப்பட்டது. கேரள முதலமைச்சர் ஓமன் சாண்டி மீது சுமார் இரண்டு கோடி பெற்றார் என ஒரு குற்றச்சாட்டு. மது அருந்தும் விடுதிகளை அனுமதித்தார் என ஓர் அமைச்சர் பதவி விலகி, பின் ராஜினாமாவைத் திரும்பப் பெற்றதும் அங்கு நடந்தது. ஆம் ஆத்மி அமைச்சர் மீது இரு தினங்களுக்கு முன் புகார் எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி அமைச்சரவையிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டார். ஊழலை எதிர்த்துப் பேசும் கட்சி உறுப்பினர்கள் குறித்து வந்த செய்திகள் இவை.

இவையெல்லாம் சொல்வது ஊழல் என்பது நம் அமைப்பின் கோளாறு. அதிகாரத்திற்கு வரும் எந்தக் கட்சியும் அதிலிருந்து தப்ப முடியவில்லை. இன்று மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இதுவரை அதிகாரத்தில் இருந்ததில்லை (மேற்கு வங்கம் கேரளம் தவிர, அங்கு அவை இந்தப் புகார்களுக்கு உள்ளாகியிருக்கின்றன) எனவே அவை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை ஒர் ஊகத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்ய வேண்டும்.

அப்படியானால் எந்த அடிப்படையில் வாக்களிப்பது? மாநிலத்தின் வளர்ச்சி, தனிநபர் பொருளாதார வளர்ச்சி, சமூக அமைதி என்பதை வாக்காளர்கள் மனதில் கொள்வது நல்லது. ஐம்பது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், சிறப்பாகவே முன்னேறியுள்ளது. (ஊழல் இருந்த போதும்) தனிநபர் பொருளாதாரம், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தின் பொருளாதாரம், மேம்பட்டிருக்கிறது. கல்வி, பொருளாதாரம் இவற்றில் நம் தந்தையைப் போலத்தான் நாம் இருக்கிறோமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டால் இதற்கு விடை கிடைக்கும்.

திராவிடக் கட்சிகள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர இந்த வளர்ச்சி ஒரு முக்கிய காரணம்.

வளர்ச்சிக்கான அடித்தளங்கள் முதலில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்டன (இலவசப் பள்ளிக் கல்வி, உள்கட்டமைப்பு, சிறு தொழில்) அவை திமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டன. அதன் மீதான கட்டிடத்தை அதிமுக எழுப்பியது.

அன்றிருந்த தலைமை இன்று தமிழகக் காங்கிரசிடம் இல்லை. இன்றுள்ள திமுகவும், 70, 80களில் இருந்த திமுக இல்லை.
  
அதிமுக அரசு, அடித்தள மக்களின் உணவுப் பாதுகாப்பு, உடல் நலம் பேணல், போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதனை எதிர்க்கும் கட்சிகளின் தலைமையில் அமைந்த மத்திய அரசு அதன் அரசின் செயல்பாடுகளுக்குப் பரிசளித்திருக்கின்றன.  ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த மின் தட்டுப்பாடும், அதனால் ஏற்பட்ட சிறு தொழில் முடக்கமும் இல்லை. தண்ணீர் கிடைப்பது கூட பல இடங்களில் இயல்பு நிலையில்தான் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த ஜாதிச் சண்டைகளைத் தவிர பெரிய அளவில் சமூக அமைதி கெடவில்லை.

அதிமுக ஆட்சிதான் ஆகச் சிறந்தது என்று சொல்வதற்கு இல்லை. அதிலும் குறைபாடுகள் இருந்தன, ஆனால் இனி அமையும் ஆட்சிகள் இன்றிருப்பதை விடச் செம்மையாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க முயற்சிப்பது இழப்பில் முடியலாம்.      

பின் குறிப்பு: முதலில் வெளியான பதிவில் நான் தேர்தல் அறிக்கை வெளியாகவில்லை என எழுத நினைத்து குறைந்த   பட்ச செயல்திட்டம் என்றெழுதிவிட்டேன்அந்தச் சொல்லாடல் நினைவில் தங்கி விட்டதால் வந்த பிழை. அதை திரு முத்து சுட்டிக் காட்டிய பின் அந்தப் பகுதியை நீக்கி விட்டேன்