Tuesday, February 24, 2009

ரஹ்மானின் அந்த ஒரு வாக்கியம்!

ரஹ்மானின் ஆஸ்கார் விருது(கள்) பற்றி எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது. அவர் அடைந்த வெற்றிகள், சிகரம் தொட்ட இசைக் கோலங்கள் இவற்றையெல்லாம் விட அவர் நேற்று ஆஸ்கார் மேடையில் சொன்ன ஒரு வாக்கியம் என்னை நெடு நேரம் யோசிக்க வைத்தது. நாள் பூராவும் அவற்றையே அசை போட்டுக் கொண்டிருந்தேன். அவை:

"All my life I've had a choice of hate and love, I chose love and I am here"

எவ்வளவு நிஜம்!

நேசத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் வெற்றிகளில் குளிக்கிறார்கள்
வெறுப்பை விதைப்பவர்கள் யுத்தங்களில் மடிகிறார்கள்!

Friday, February 20, 2009

காக்கிச் சட்டைகளும் கருப்புக் அங்கிகளும்



கறுப்பு அங்கிகளும் 'விக்'களும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இவர் இன்னார் எனத் தெரியாத (annonimty) தோற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் 17ம் நூற்றாண்டில் நீதித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒரு குறிப்பு சொல்கிறது நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் அவர்களை இன்னார் என இனம் கண்டு கொள்ளவே உதவியிருக்கின்றன.

காக்கி என்ற இந்துஸ்தானி சொல்லுக்கு புழுதி என்று பொருள் என்றாலும் அதை அதிகாரத்தின் அடையாளமாக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்கள். நேற்றைய உயர்நீதிமன்றச் சம்பவங்கள் காக்கியின் பெருமைகளை புழுதிக்கு அனுப்பியிருக்கின்றன

என்ன நடந்திருக்கும்?

இன்று சட்ட மன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் சட்ட அமைச்சர் துரைமுருகன் " சுப்ரமணியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு வக்கீல் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற வக்கீல்கள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் 19-ம் தேதி (நேற்று) இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த வக்கீல்கள், சுப்ரமணியசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், புகார் மனு ஒன்றை தருவதற்காக ஐகோர்ட் வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு வந்துள்ளனர். சுப்ரமணியசாமி மீது தாங்கள் கொடுக்க வந்த புகாரை பதிவு செய்துவிட்டு, அதன்பிறகு தங்களை கைது செய்யுமாறு கூறியுள்ளனர். இதனை ஏற்று அவர்கள் கொடுத்த புகார் மனுவை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது." என்கிறார்.

சுப்ரமண்ய சாமி மீது முட்டை வீசுகிற சம்பவம் நடந்ததற்கு அவர் வக்கீல் ஒருவரை ஜாதிப் பெயரைச் சொல்லியதுதான் காரணம் என்று வக்கீல்கள் கூறுகின்றனர். ஆனால் இது அந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் ஒரு அறிக்கை, உச்ச நீதி மன்றத்தில் சாமி முறையீடு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் தொழில் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகள், ஆகியவற்றின் காரணமாக நிலைமை முற்றியவுடன் தங்களைத் தற்காத்துக் கொள்ள, ஒரு பின் யோசனையாக (after thought) சம்பந்தப்பட்ட வக்கீல்கள் இப்போது ஜாதி பிரசினையைக் கிளப்புகின்றனர் என்றே எனக்குத் தோன்றுகிறது, என் சந்தேகத்திற்கான காரணங்கள்:

சாமி ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டிருப்பார் என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், அப்படி இழிவு செய்யப்பபட்டதும் திட்டப்பட்டவரின் உடனடி 'ரியாக்ஷன்' என்னவாக இருக்கும்? கைகலப்பு, கன்னத்தில் அறைதல், சட்டையைப் பிடித்தல், புஷ் செய்தியாளர் சந்திப்பில் நடந்தது போல் காலணி வீச்சு, இப்படி ஏதாவது ஒன்று நடந்திருக்கும்.

ஆனால் சம்பவத்தில் அழுகிய முட்டைகள் வீசப்பட்டிருக்கின்றன. வழக்கறிஞர்கள் சாதரணமாக, நீதிமன்றங்களுக்கு கேஸ்கட்டுகள், சட்டநூல்கள் மற்றும் தங்களது ஜூனியர்களுடன் வருவார்கள். கூ முட்டைகளோடு வருவார்களா?

2."நீதிமன்றத்தின் ஒரு வாயிலின் கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டது.

அதன் பின்னர், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திடீரென சில வழக்கறிஞர்கள் மறைத்து வைத்திருந்த அழுகிய முட்டைகளை எடுத்து சுப்பிரமணியன் சுவாமி மீது வீசத் தொடங்கினர். இந்த சம்பவத்தைப் பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை எதிர்பார்க்காத சுவாமியின் மெய்க்காப்பாளர்கள் (சி.ஆர்.பி.எப். போலீஸார்) நீதிமன்றத்தின் மற்றொரு வாயில் வழியாக உள்ளே நுழைந்தனர்.

அதற்குள் சுவாமி மீதும், அவருக்கு எதிரே இருந்த டேபிள்கள் மீதும் முட்டைகள் விழுந்து உடைந்தன. அதன் பிறகு, சுவாமி நீதிபதிகளின் அருகேயிருந்த இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.

இதன்காரணமாக, சுமார் 15 நிமிடங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

நீதிபதி கே. சந்துரு ""எதற்கும் ஒரு எல்லை உண்டு'' என்று வழக்கறிஞர்களைப் பார்த்து எச்சரித்தார்."

இது சம்பவம் பற்றி தினமணியில் வெளியான செய்தி. (18/2/09)

நீதி மன்றத்தின் கதவுகள் உள்புறமாகத் தாழிடப்பட்டன என்ற செய்தி தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

3. இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகக் கோஷம் எழுப்பப்பட்டது என்ற செய்தியும், தாக்குதலுக்குக் காரணம் அவர் ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியது அல்ல என்பதைக் காட்டுகிறது.

4. இந்த சம்பவம் குறித்து தினமணிக்குப் பேட்டியளித்த, வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவைத் தலைவர், கே. பாலு, "வழக்கறிஞர்கள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நீதி மன்ற புறக்க ணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று அரசுத் தரப்பி ல் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் ரீதியாகப் பயன்பெறவே சுப்பிரமணியன் சுவாமி நீதி மன்றத்துக்கு வந்துள்ளார்" எனக் குற்றம் சாட்டுகிறார்.

எனவே வழக்கறிஞர்களின் ஆத்திரம் சாமி நீதிமன்றப் புறக்கணிப்பை ஆதரிக்காமல், நீதிமன்றத்திற்கு வழக்காட வந்துதான், ஜாதிப் பிரசினை அல்ல.

இப்படி ஜாதியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, கற்பனையான ஒரு புகாரைப் பதிவு செய்ய வற்புறுத்தியதே ஒரு நீதியற்ற செயல். அப்படி அந்தப் புகாரைப் பதிவு செய்தால் எங்களை கைது செய்து கொள்ளலாம் எனப் பேரம் பேசியது இன்னொரு நியாயமற்ற செயல். அப்படிப் பதிவு செய்த பின்னும் அவர்கள் தங்கள் வாக்கைக் காப்பாற்றவில்லை என்பதை துரைமுருகனின் அறிக்கையிலுள்ள இந்த வரிகள் காட்டுகின்றன:

"சுப்ரமணியசாமி மீது தாங்கள் கொடுக்க வந்த புகாரை பதிவு செய்துவிட்டு, அதன்பிறகு தங்களை கைது செய்யுமாறு கூறியுள்ளனர். இதனை ஏற்று அவர்கள் கொடுத்த புகார் மனுவை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின் சுப்ரமணியசாமியை கைது செய்துவிட்டு பின்னர் தங்களை கைது செய்ய வேண்டும் என்றனர்"

இவற்றிலிருந்து என்ன நடந்திருக்குமென்பதை ஊகிக்க முடிகிறது:

1.புலிகள் விமர்சகரான சாமி, இலங்கைப் பிரசினைக்காக நீதி மன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடக்கும் போது நீதி மன்றம் வந்ததை சில வழக்கறிஞர்களால் பொறுக்க முடியவில்லை
2. அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு வன்முறையில் இறங்குகிறார்கள்.
3. பின்னர் அதன் விளைவுகளை எண்ணி அஞ்சி பின் யோசனையாக ஒரு காரணத்தைக் 'கண்டுபிடிக்கிறார்கள்'
4.சாமி மீது புகார் பதிவு செய்தால் எங்களை கைது செய்து கொள்ளலாம் எனப் பேரம் பேசுகிறார்கள்
5.அது உண்மையில் ஒரு தந்திரம். போலீஸ் கைது செய்ய முற்படும் போது அதை எதிர்த்து வன்முறையில் இறங்குகிறார்கள்.
6.வன்முறையைக் கட்டுப்படுத்த சிரமப்படும் போலீஸ் கண்மண் தெரியாமல் புகுந்து விளாச வன்முறை மேலும் வளர்கிறது.


'இலங்கைத் தமிழர்கள் ஈழம் பெறுவதற்காக நாங்கள் எதையும் இழக்கத்தயார்' என்பதுதான் வழக்கறிஞர்களது உண்மையான நிலை என்றால், அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? " நீ தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசி வருகிறாய். அது பொறுக்கமாட்டாமல் முட்டை அடித்தேன். நீ என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள், அதற்கான விளைவை ஏற்க நான் தயார் " என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தண்டனையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்கள் செய்வதையும் செய்துவிட்டு இப்போது அதற்கு ஜாதி முலாம் பூசி ஒளிந்து கொள்ள முயல்கிறார்கள்

சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர் கொள்ள வழக்கறிஞர்கள் அஞ்சுகிறார்கள், தங்கள் செயலுக்கான பொறுப்பை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் (Not owning responsibility for their own actions) என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் தங்கள் செயலுக்குப் பொறுப்பேற்க மறுப்பதற்குக் காரணம் அவர்கள் அந்த செயல்களை அறிவின் பாற்பட்டு செய்யவில்லை, உணர்ச்சி வேகத்தில் செய்கிறார்கள் என்பதே.

சிந்தித்துச் செயல்படுகிற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக இருந்தால், வீதியிலிறங்கிக் கோஷம் போடுவதன் மூலம், சாலையில் உட்கார்ந்து மறியல் செய்வதன் மூலம், நீதிமன்றப் புறக்கணிப்பு மூலம் ராஜபக்க்ஷேயைப் பணிய வைக்க முடியாது, அதற்கு டிப்ளமேட்டிக் சானல்கள் எனப்படும் தூதரகங்கள் மூலம் லாபி செய்ய வேண்டும், தா.பாண்டியன் சொன்னதைப் போல சர்வதேச நீதி மன்றத்தில் மனித உரிமை மீறல் என வழக்குத் தொடுக்க வேண்டும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழ்கிற மக்கள், அறிவு ஜீவிகளிடம் இலங்கை அரசுக்கு எதிரான கருத்தை உருவாக்க வேண்டும், ஊடகங்களில் எழுத வேண்டும் என்பது போன்ற அறிவு சார்ந்த நிலைகளை எடுத்திருப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் ஏற்கனவே பல விதங்களில் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் சூழலில் அவர்கள் மத்தியிலேயே கூச்சல் போடுவது எதைக் கருதி? வழக்குகள் தள்ளிப் போவதால் சம்பந்தப்பட்ட வாதி/பிரதிவாதிகளின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்வதைத் தவிர வேறு இதனால் என்ன நடந்து விடும்? தேர்வுகள் தள்ளிப் போவதால் மாணவர்களின் அதிருப்தியை சம்பாதிக் கொள்வதை அன்றி வேறு என்ன பலன் கிடைத்து விடும்? இது மக்களிடமிருந்து அவர்கள் அன்னியப்படுவதற்கு உதவுமே அன்றி மக்களைத் திரட்ட உதவாது. மக்களைத் திரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஏற்கனவே அவர்கள் இலங்கை பிரசினையில் வழக்கறிஞர்கள் வெளிப்படுத்தும் உணர்வில்தான் இருக்கிறார்கள்.

இதன் மூலம் அரசை சங்கடப்படுத்துவது, அல்லது திமுகவை வீட்டுக்கு அனுப்புவதுதான் நோக்கம் என்றால் அதுவும் அவர்களது நோக்கத்திற்கே எதிராய் முடியும். திமுக ஆட்சி வீழ்ந்தால் அடுத்த அரசு அமைய எப்படியும் 4 முதல் 6 வார காலமெடுக்கும். அதற்குள் இலங்கையில் நிலைமை எப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது. திமுக போய் ஜெயலலிதா வந்தால் அவரிடமிருந்து புலிகளுக்கு ஆதரவு கிடைக்காது. திமுகவாலேயே மத்திய அரசை ஓரளவிற்கு மேல் நிர்பந்திக்க முடியவில்லை என்னும் போது , பா.ம.கவோ, மதிமமுகவோ, விடுதலைச் சிறுத்தைகளோ அதைத் தனியாகப் பணிய வைத்து விடமுடியுமா?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் அர்த்தம் இல்லை. அதிலும் அது வன்முறை வடிவம் எடுப்பதென்பது கண்டனத்திற்குரியது.

அவர்கள் சட்டம் தன் வேலையைச் செய்ய அனுமதித்து நீதி மன்றங்களுக்குத் திரும்பட்டும்.

காவல்துறை மீது தவறேயில்லையா?

நிச்சியமாக இருக்கிறது.குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்களை வீடு தேடிச் சென்று கைது செய்திருக்கலாம்.அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து கொள்ள அவகாசம் அளித்தது காவல்துறையின் திறமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.


"The FIR (against Swamy) was finally registered after a couple of hours . It seemed the tension had been defused, when all of a sudden, two companies (roughly 200 men) of Swift Action Group, a wing of the armed reserve police reached the spot around 3:15 pm. Blostered by the presence of SAG police made a bid to arrest 20 lawyers who were identified as those involved in the attack on Subramaniam Swamy. As lawyers shoved the SAG personnel went beserk and pelted stones. என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா (20/2/09)

வழக்கமான காவல்துறையால் கையாளப்பட வேண்டிய விஷயத்திற்கு SAGயை அனுப்ப உத்தரவிட்டது ஏன்? உத்தரவிட்டது யார்? சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டபோது கையைக் கட்டிக் கொண்டிருக்க உத்தரவிட்டதும் இப்போது கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்க உத்தரவிட்டதும் ஒரே நபரா? அப்படியானால் அது -

யார் ?

Wednesday, February 11, 2009

கணிப்புகள் மீது ஒரு கருத்து

கருத்துக்கணிப்புக்களுக்குத் தடை விதிப்பது குறித்து Zதமிழ் தொலைக்காட்சியில் ஒரு கலந்துரையாடல் (விவாதம்?) நடந்தது. அதில் பங்கேற்ற பத்ரி தனது பதிவில் அதைக் குறித்து எழுதியிருக்கிறார்.

கருத்துக் கணிப்புகள் மக்களின் முடிவை மாற்ற வல்லவை அல்ல, அதனால் அதற்குத் தடை என்பது தேவை இல்லை, அப்படித் தடை செய்வது கருத்துரிமைக்கு எதிரானது, இன்றைக்குக் கருத்துக் கணிப்பைத் தடை செய்பவர்கள் நாளை இணைய வழி, கைபேசிக் குறுஞ் செய்திகள் வழி, பிரசாரத்தையும் தடை செய்யலாம், 10 மணிக்கு மேல் கூட்டம் போடக் கூடாது போன்று எத்தனை தடைகள் இந்த நாட்டில் என்றெல்லாம் பத்ரி கருத்துக் சொன்னார்.

என்னுடைய பார்வையில், இந்தியச் சூழ்நிலையில், இன்று மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புகள் மூலம், பெரும்பாலும் சரியான யூகங்களுக்கு வரமுடிவதில்லை. அதனால் அவை பெரும்பாலும் ஊடகங்களின் பரபரப்பு மனோபாவத்திற்குத் தீனி போடுபவையாகவோ அல்லது விற்பனைக்கு உதவுபவையாகவோ மட்டுமே இருக்கின்றன.

கருத்துக் கணிப்புகள் ஏன் பொய்க்கின்றன?

முதன் முதலில் கருத்துக் கணிப்பு தமிழ்த் தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான் அதில் பங்கேற்றவன் என்ற முறையில் அந்தக் கணிப்புக்களுக்குப் பின் அறிவியல் ரீதியான அணுகுமுறை (psephology தேர்தலியல்?)இருந்தது என்பதை என்னால் சொல்ல இயலும். .

பொதுவாகக் கருத்துக் கணிப்புக்களின் போது கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி முடிவுக்கு வர Cube law என்ற ஒன்றைப் பயன்படுத்துவது வழக்கம். இந்த முறை இரு கட்சிகள் பிரதானமாக இருக்கிற நாடுகளில், அதிலும் குறிப்பாக கட்சிகளுக்கு Registered Voters இருக்கிற அமெரிக்காவில் பலனளித்திருக்கிறது. பல கட்சிகள் கொண்ட இந்தியாவில் இந்த விதியில் சிறு மாற்றங்கள் செய்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆளும் கட்சி, அதற்கு எதிராக இருக்கும் அணிகள் எல்லாம் ஒரு கட்சி எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தக் கட்சிகள் எத்தனை தூரம் ஒற்றுமையாக இருக்கின்றன என்பதைக் கணக்கிட Index of opposition unity என்ற ஒன்றைக் கணக்கிட வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் சில கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறி நிற்பதால் அதன் பலத்தை துல்லியமாகக் கணக்கிட முடிவதில்லை (உ-ம்: பா.ம.க)

ஒன்றுக்கு மேற்பட்ட ஊகங்களின் அடிப்படையில் கணிப்புக்களை மேற் கொள்ளும் போது அவை தவறாகிவிடும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.

தேர்தலில் அலைவீசும் போது Cube law பயனுள்ளதாக இருப்பதில்லை.

இந்தியத் தேர்தல் முறையில், பெரும்பாலும் மக்கள் உள்ளூர் காரணிகளின் அடிப்படையில் (பிரசினைகள், ஜாதிப் பிரிவுகள், வேட்பாளரின் செல்வாக்கு) வாக்களிப்பதால் ஒட்டு மொத்தமான கணிப்புகளைவிட தொகுதிவாரியாக மேற்கொள்ளப்படுகிற கணிப்புகளே ஓரளவிற்கு சரியாக இருக்கும். இதைக் கவனத்தில் கொண்டு, 1998ல் கருத்துக் கணிப்பை தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தியபோதே, மாவட்ட வாரியான கணிப்பை மேற்கொண்டாம். ஆனால் இன்று பெரும்பாலும் மாநிலம் முழுமைக்குமான 'ராண்டம் சாம்பிள்'கள் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன

நம் கலாசாரத்தில் மக்கள் பெரும்பாலும், தனிப்பட்ட நேர் பேட்டிகளில் ஆளுங்கட்சிக்கு எதிராக (அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி) வெளிப்படையாகத் தன் எண்ணங்களைத் தெரிவிப்பதில்லை. (கூட்டமாகச் சேர்ந்து போராட அவர்கள் தயங்குவதில்லை என்பது வேறு விஷயம்)

கருத்துக் கணிப்பிற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக தலைக்குத் தலை அதை நடத்த முற்பட்டதால் அது இன்று Law of diminishing returnsபடி அதன் பலன் குறைந்த நிலையை எட்டியிருக்கிறது.

எனவே இன்று கருத்துக் கணிப்புக்கள் குறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஆனால் அதைச் சாக்கிட்டு ஊடகங்கள் பரபரப்பேற்படுத்துவதைத் தவிர்க்க ஏதாவது ஒருவிதமான நெறிப்படுத்தல் தேவை

சுதாங்கன் - ஜென்ராம் நெறிப்படுத்தும் Z தமிழ் 'முதற்குரல்' விவாதங்கள் பெருமளவிற்கு நடுநிலையாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் விருந்தினர்களைத் தேர்ந்தெடுப்பதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக கருத்துக் கணிப்புப் பற்றிய இந்த விவாதத்தில் கருத்துக் கணிப்பு நடத்தும் நிறுவனங்களோ (ORG-MARGபோல), அமைப்புக்களோ (லயோலா கல்லூரி போல) பங்கேற்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதே போல தேர்தல் கமிஷன் சார்பில் முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் யாரேனும் (சேஷன் சென்னையில்தான் வசிக்கிறார் என நினைக்கிறேன். முன்னாள் விஜிலன்ஸ் கமிஷனர் விட்டல் இங்கேதானிருந்தார்) பங்கேற்றிருக்க வேண்டும்.

ஆனால் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. தொலைக்காட்சி விவாதங்களுக்கு விருந்தினர்களை 'பிடிப்பது' எத்தனை சிரமமானது என எனக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும் என்பதால் இது குறித்து நான் வேறேதும் சொல்லப்போவதில்லை

Monday, February 09, 2009

தேர்தல் 2009

இன்னொரு தேர்தல் வந்து விட்டது.

'நாட்டைப் பிளவுபடுத்தும் மதவாதக் கட்சிகளை ஒதுக்கித் தள்ளுங்கள் என காங்கிரசும், பரம்பரை ஆட்சி நாட்டிற்கு நல்லதல்ல என பாரதிய ஜனதாவும், தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆதரவு என இடதுசாரிகளும் நமக்குப் பழக்கமான குரல்களில் முழங்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் தேர்தல்களில் அரசியல்வாதிகளின் குரல்களை விட பிரஜைகளின் குரல்தான் முக்கியத்துவம் கொண்டது

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கருத்துக்களுக்கென தனி ஒரு வலைப்பதிவைத் துவக்கியிருக்கிறேன்.

http://therthal.blogspot.com/

தேர்தல் குறித்த செய்திகள், விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக் கணிப்புகள், கார்ட்டூன்கள் இதில் இடம் பெறும். எல்லா வகையான கருத்துக்களுக்கும் இடமுண்டு.

கூடியவரை தினம் ஒரு பதிவாவது வெளியிட முயற்சிக்கிறேன்.

கூட்டுப் பதிவாகவும் அமைத்துக் கொள்ளலாம்.தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் எனக்கொரு மின்னஞ்சல் (maalan@gmail.com)அனுப்புங்கள்.

இன்றிலிருந்து இந்தப் பதிவு துவங்குகிறது.

இதை உங்கள் Blogrollல் சேர்த்துக் கொள்ளுங்கள், தொடர்ந்து வாசிக்க எளிதாக இருக்கும்

Sunday, February 08, 2009

தொண்டர்தம் பெருமை

தோட்டம் எனப் பெயர் கொண்ட பகுதிகள் பல சென்னையில் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பலவற்றில் தாவரங்களைப் பார்ப்பதென்பதே அரிதாக இருக்கும். அரசினர் தோட்டம் கான்கிரீட் வனமாக மாறி வருகிறது. போயஸ் தோட்டத்தைப் பற்றி நான் ஏதும் சொல்லப் போவதில்லை. மந்தவெளி பேருந்து நிலையத்திற்கு எதிரே கபாலி தியேட்டருக்கு அருகில், மயிலைக் கோயிலுக்குச் சொந்தமாக' கபாலி வன போஜன மண்டபம்' ஒன்று இருக்கிறது. வனம் என அதை நம்ப கற்பனை வேண்டும். என்றைக்காவது அங்கு வந்து போஜனம் செய்திருக்கிறாரா என்பதை கபாலியிடம்தான் கேட்க வேண்டும்.

ஆனால் ராமாவரம் தோட்டம் (அன்று) ஒரு பூங்காவைப் போலிருந்தது. வீட்டை நோக்கிப் போகும் மண் பாதையில் தங்கரளிப் பூக்கள் இறைந்து கிடந்தன. தலையில் தீப்பிடித்த மாதிரி ஒரு குல்மோகர் மரம் என்னைப் பற்றி ஒரு கவிதை எழுது எனச் சொல்லிக் கொண்டு கடந்து போயிற்று. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை கவிதை எழுதுவது அல்ல. எம்.ஜி.ஆருடன் ஒரு நாள் முழுதும் கூட இருந்து அவரது அசைவுகளைக் கவனித்துக் கட்டுரை எழுத வேண்டும் என்பது

முந்தைய வாரம் அவரது ‘வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்குத் தினம் ஒரு ரூபாய் கொடுக்கும் திட்டத்தை'ப் புள்ளி விவரங்களோடு கடுமையாக விமர்சித்திருந்த என் கட்டுரைக்குப் புன்னகை மாறாமல் விளக்கமளித்தபடியே காலைச் சிற்றுண்டி அருந்திய எம்.ஜி.ஆர். திடீரென்று கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘போகலாமா' எனக் கேட்டுக் கொண்டே எழுந்தார்.

எங்கள் பேச்சை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடையே மின்சாரம் பாய்ந்தது.பரபரப்பான சில நொடிகளில் அவரது கார், முன்னால் ஒரு பைலட் ஜீப்,
பின்னால் இரண்டு கார்கள் என ஒரு வாகன வரிசை தயாரனது. முன் சீட்டில் ஏறத் தயாரான உதவியாளரை ஜீப்பிற்கு அனுப்பிவிட்டு என்னை அந்த இருக்கையில் உட்காரச் சொல்லி விட்டு, பின் சீட்டில் அமர்ந்தார் எம்.ஜி.ஆர். தோட்டத்துக் கதவுகள் விரியத் திறக்க அந்த மினி அணிவகுப்பு சாலையில் திரும்பியது. ஒரு பத்தடி சென்றிருக்கும். அன்று அந்த இடத்தில் ஒரு குறுகலான பாலம் இருந்தது. அந்தப் பாலத்தைக் கடக்க காரின் வேகம் குறைந்த தருணத்தில்-

மின்னல் போல காரின் குறுக்கே பாய்ந்தார் ஒருவர். அவரது பாய்ச்சலைக் கையைப் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்த முயன்று கொண்டிருந்தார் அவர் மனைவி. கண நேரம் தாமதித்திருந்தால் கார் அவரை அரைத்துக் கொன்றிருக்கும். ஆனால் ஓட்டுநர் அனுபவம் வாய்ந்த கெட்டிக்காரர். வண்டியை நிறுத்தி விட்டார்.

முதல்வரின் வண்டி நின்று விட்டதைக் கண்ட பைலட் ஜீப்பிலிருந்த போலீசார் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடி வந்தனர். குறுக்கே பாய்ந்தவரின் கையைப் பிடித்து முதுகுப் பக்கமாக வளைத்துக் கொண்டு செவிட்டில் ஒரு அறை விட்டார் காவலர். பின்னால் காரில் வந்த உதவியாளர்களும் இறங்கி எம்.ஜி.ஆரின் ஜன்னலருகே வந்து நின்றனர். ‘அடிக்க வேண்டாம். கோட்டைக்குக் கொண்டாங்க' என ரத்தினச் சுருக்கமாக உத்தரவிட்ட எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்து நெற்றிப் பொட்டருகே ஆள் காட்டி விரலை சுழற்றிக் காட்டிச் சிரித்தார். அந்த நபரை ‘அள்ளிப் போட்டுக் கொண்டு' பயணம் தொடர்ந்தது.

நாங்கள் கோட்டையை அடைவதற்குள் ஜீப்பில் இருந்த காவல்துறை அந்த நபரைப் பற்றிய விவரங்களைத் திரட்டியிருந்தது. எம்.ஜி.ஆர். நினைத்ததைப் போல அவர் ‘லூசு' இல்லை. கட்சித் தொண்டர். அவர் அணிந்திருந்த அழுக்கேறிய கரை வேட்டியும், கசங்கிய சட்டையில் அவர் வைத்திருந்த எம்.ஜி.ஆர் பட ஸ்டில்லும் அதை உறுதி செய்தன. மானமதுரைக்குப் பக்கத்திலுள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து வந்திருந்தார். இரண்டு நாள்களாக, கோட்டை, தி.நகர் இல்லம், கட்சி அலுவலகம், தோட்டம் என எங்கு முயற்சித்தும் அவரால் அந்தக் கட்டிடங்களின் கேட்டைக் கூட நெருங்க முடியவில்லை. எங்கே போனாலும் துரத்தி அடித்தார்கள். எம்.ஜி.ஆரிடம் இரண்டு வார்த்தை பேசாமல் ஊருக்குத் திரும்புவதில்லை என சபதம் செய்து விட்டு வந்திருந்தார். வேறு வழி தெரியவில்லை. காரின் முன் பாய்ந்து விட்டார்.

எம்.ஜி.ஆர் அவரை ஏற இறங்கப் பார்த்தார். ‘இப்படித்தான் செய்யறதா?' என்று கேட்டார். அந்த நபர் ஏதும் பேசாமல் தடாலென்று காலில் விழுந்தார். அவர் மனைவி கண்களில் நீர் தளும்ப கைகள் நடுங்கியவாறே கும்பிட்டார். எம்.ஜி.ஆர் அவரைப் பார்த்து, “குழந்தைங்க எத்தனை?” என்றார். அந்தப் பெண் இரண்டு விரல்களைக் காட்டினார். “ஆம்பிளைக்குத்தான் அறிவில்லைனா, பொம்பளை நீ புத்தி சொல்ல வேண்டாமா” என்றார். அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு பெரும் விசும்பல் புறப்பட்டது.

உயிரைத் திரணமாக எண்ணிக் காரின் முன் பாய்ந்த அந்த நொடிகளில் அவர் மனதில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்? செத்தாலும் பரவாயில்லை, ஊர் முன் போட்ட சபதத்தைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற வைராக்கியமா? தலைவருக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற வெறியா? தலைவர் காரில் அடி பட்டுச் செத்தால் பணம் கிடைக்கும் என்ற ஆசையா? நாம் செத்தாலும் குடும்பத்தையும் குழந்தைகளையும் அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையா?

தெரியாது. கற்பனையில் இதற்கு விடைகளைத் தேடலாம். ஆனால் அவை சரியானவையாக இருக்க அவசியமில்லை. நான் அவராக ஆகும் வரையில் அந்தக் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காது. என்றோ ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.மோட்டர் சைக்கிளில் போனால், போகும் போது முகத்தை வருடிச் செல்லும் ஈரக் காற்றில் சிலிர்க்கலாம்; காலால் மன்ணைத் தொட்டுப் பார்க்கலாம்; மரத்திலிருந்து உதிரும் பன்னீர்ப் பூவின் வாசத்தை நுகரலாம். ஆனால் காரில் போனால். கண்ணாடிக்குள்ளிருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறெதுவும் சாத்தியமில்லை. மோட்டார் சைக்கிளில் போகும் போது நீ பங்கேற்பாளன் (participant)காரில் செல்லும் போது நீ ஒரு பார்வையாளன் மட்டுமே. பார்வையாளனுக்குக் காட்சிகள் கிட்டும்; உண்மை அகப்படாது. வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு சத்தியம் தெரியாது என எழுதுகிறான் பாரதி.

அரசியலில் இருக்கும் அடி மட்டத் தொண்டர்களது வாழ்க்கை பற்றி தமிழில் புனைவாகக் கூட அதிகம் பேர் எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். அசோசகமித்ரன், காத்திருத்தல் என்று ஒரு நீண்ட சிறுகதை எழுதியிருக்கிறார். தேர்தலில் தான் உழைத்த கட்சித் தோற்றுப் போகிற போது ஒரு தொண்டன் எதிர்கொள்கிற மன அழுத்தங்களையும், வன்முறையையும் பற்றிப் பேசுகிற அந்தக் கதை நாம் கண்டுவரும் காட்சிகளின் உண்மைக்கருகில் நிற்கிறது. ஆனாலும் அது ஒரு புனைவுதான். தமிழின் அபூர்வமான புனைவுகளில் ஒன்று.

“அவன் பேசுவதற்கு ஆளொருவரும் கிடைக்காமல் ஒரு வழியாகச்
சென்று அவன் நேற்றுவரை கூடப் பலரைக் கூட்டி, சந்தித்துப் பேசி,
முடிவுகள் எடுத்து, படித்து, உணவுண்டு, தூங்கி, தண்ணீர் குடித்த
கீற்றுக் கொட்டகைக்குச் சென்றான்.தெருவோரத்தில் அது
அநாதையாக இருந்தது. அதன் பக்கத் தடுப்புகளிலும்
கூரையிலிருந்தும் ஒட்டியும் எழுதியும் தொங்கவிட்டிருந்ததுமான வாக்கியங்கள், பெயர்கள், வேண்டுகோள்கள், எச்சரிக்கைகள்,
ஏச்சுப் பேச்சுகள் எல்லாமே இன்று அர்த்தமற்றதாகக் காட்சி அளித்தன. அர்த்தமற்ற தனமையில் அவைகளை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு
வந்த அவனைக் குருடன், செவிடன், முட்டாள் என்று கேலி செய்வதைப் போலக் கூட காட்சி அளித்தன”

இந்த வரிகளில் தோற்றுப் போன கட்சித் தொண்டனைவிட, அசோகமித்திரனை நாம் அதிகம் காணமுடியும். இவ்வளவு சிந்தனையும் நுண்ணுணர்வும் கொண்ட ஒருவன், வீதியில் இறங்கிச் சண்டையிடுகிறவனாகவும் கோஷமிடுகிறவனாகவும் இருப்பானா என்ற கேள்விகளும் நம்முள் எழும். அ.மி. இந்தக் கதையை 70 களின் துவக்கத்தில் எழுதியிருக்க வேண்டும் (ஆகஸ்ட் 72ல் அவரே பதிப்பித்த இன்னும் சில நாட்கள் தொகுப்பில் அது இடம் பெற்றிருக்கிறது). அறுபதுகளின் இறுதியில் லட்சிய உந்துதல்களும், தன்னுணர்வும் கொண்ட தொண்டர்கள் அரசியல் கட்சிகளுக்கு வாய்த்திருக்கக் கூடும். ஆனால் 2000ல் ‘லும்பன்' சக்திகள் தேர்தல்களின் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டன.

அப்படிப்பட்ட ஒரு தொண்டனாக, ஆட்சி மாறும் போது, அடி, வலி, பயம், அவமானம், சிறைவாசம் எல்லாவற்ரையும் நிஜமாக எதிர்கொண்ட ஓர் இளைஞரது வாழ்வனுபவங்களை அண்மையில் வாசிக்க நேந்தது. ஜோதி நரசிம்மன் என்பவர் எழுதிய ‘அடியாள்' என்ற அந்த சிறு புத்தகம், (கிழக்குப் பதிப்பக வெளியீடு) நம் சமகால அரசியலின் அறியப்படாத பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஜோதி நரசிம்மன் விழுப்புரத்தில் வசித்து வந்த ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். ஐ.டி.ஐ. படித்தவர்.வன்முறையின் மீதுள்ள காதலால் ஒரு தாதாவிடம் போய்ச் சேர்கிறார். இரண்டு முறை சிறை செல்கிறார். அடியாளாக ஒரு முறை. அரசியல் வாதியாக ஒரு முறை. அவரது அனுபவங்களை நூல் பேசுகிறது.

“ நான் விதிர்விதிர்த்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். குமாரைப்
படுக்க வைத்து, கால் முட்டிக்குக் கீழே இருந்த பகுதியில், லாடம் பொருத்தப்பட்ட பூட்ஸ் காலோடு ஏட்டு ஏறி நின்று கொண்டார். அந்த எஸ்.ஐ. கையிலிருந்த மூங்கில் தடியால் குமாருடைய கால் பாதத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தார் ஒவ்வொரு அடியும் இடி போல் இறங்கியது. . . . .. ..என் தொடை வேகமாக ஆட ஆரம்பித்தது. அடுத்து எங்களில் யாரோ ஒருவரைத்தான் அந்த சப் இன்ஸ்பெகடர் அடிக்கப் போகிறார். யாரை?
ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது. என்னை அவர் அடித்தால், அதற்குப்
பிறகு நான் ஜெயிலுக்குப் போக மாட்டேன். லாக்கப்பிலேயே பிணமாகி விடுவேன். அந்த அடியில் ஒன்றைக் கூட என்னால் தாங்க முடியாது”
*
தலைவர்களுக்காத் தங்களது குடும்பத்தைப் புறக்கணித்து, எதிரிகளிடமும், போலீசிடமும் அடி வாங்கி, உயிரையும் துறக்கத் தயாராக உள்ள தொண்டர்களுக்கு நம் அரசியல் தலைவர்கள் தரும் வெகுமதி என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, முன்னாள் துணைப் பிரதமர் ஜகஜீவன் ராமின் மகள் மீரா, முன்னாள் துணைப்பிரதமர் சரண்சிங்கின் மகன் அஜீத் சிங், என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி, முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், ஷரத் பவாரின் மகள் சுப்ரியா, ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங், முன்னாள் மக்களவை தலைவர் சங்மாவின் மகள் அகதா சங்மா, பாரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா, (காஷ்மீர் முதல்வர் ஆகும் முன்) ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், மறைந்த மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ராஜஸ்தான் மாநில முதல்வருமான விஜயராஜே சிந்தியாவின் மகனுமான துஷ்யந் சிங், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங், தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த், முஃப்தி முகமது சயீத்தின் மகள் மெஹ்பூபா, மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், மறைந்த முன்னாள் அமைச்சர் சுனில்தத்தின் மகள் பிரியா, மறைந்த முன்னாள் அமைச்சர் பகுகுணாவின் மகன் விஜய் பகுகுணா, பா.ம.க.நிறுவனர்டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி, மூப்பனாரின் மகன் வாசன் என நாடாளுமன்றம் ஏகப்பட்ட வாரிசுகளால் நிறைந்து கிடக்கிறது.

தேவகெள்டாவின் மகன்கள் குமாரசாமி, அவரது மனைவி அனிதா, குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா, கர்நாடக அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். தேவிலாலின் மகன் செளதாலா ஹரியானா அரசியலில் வலுவான ஓர் சக்தி. முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.பி.சவானின் மகன் அசோக் சவான் மகராஷ்டிர முதலமைச்சர். பிஜு பட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக் ஒரிசாவின் முதல்வர்.

கட்சிக்குச் செலவிடுகிறவர்களுக்கு அமைச்சர், வாரியத் தலைவர், மாவட்ட செயலாளர் பதவிகள். மணல் குவாரி, அரசின் சிறு காண்டிராக்ட்கள், உள்ளூர் அளவிலான சிறு பதவிகள் இவையெல்லாம் அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கு.

தலைவர்களுக்காத் தங்களது, குடும்பத்தைப் புறக்கணித்து, எதிரிகளிடமும், போலீசிடமும் அடி வாங்கி, உயிரையும் துறக்கத் தயாராக உள்ள தொண்டர்களுக்கு?

***
அம்ருதா (பிப்ரவரி 2009) இதழில் எழுதிய்து.